அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

76

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.

நாடறியப்பட்ட புற்றுநோய் மருத்துவரான அம்மையார் சாந்தா அவர்கள் இந்திய அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்ந்தராவார். அரசு மற்றும் தனியார் இணைந்து புற்றுநோய் சிகிச்சைக்குக் குறைந்த செலவிலும், இலவசமாகவும் தரமான சிகிச்சையளித்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றவராவார். அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை வளர்த்தெடுக்கத் தொடக்கக்காலம் முதல் அரும்பாடுபட்டு, தனது வாழ்வையே ஒட்டுமொத்தமாக மருத்துவச்சேவைக்காக அர்ப்பணித்தவராவார். தன் வாழ்வின் பெரும்பகுதியை மருத்துவத்துறைக்காகவே செலவிட்டு, 67 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மருத்துவச்சேவையாற்றி, தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர் அம்மையார் சாந்தா அவர்கள். தனது மகத்தான சேவைக்காக, ‘மகசேசே’, ‘பத்மபூஷன்’, ‘பத்மவிபூஷன்’ என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த அம்மையார் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பென்றால், அது மிகையில்லை.

அம்மையாருக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி