பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்

958

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே
எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்

எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது, முடிவெடுக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டு இறுதிநாள் முடியும்வரை கள்ளமௌனம் சாதித்துவிட்டுத் தற்போது எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்று தமிழக ஆளுநர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முடிவைத் துளியும் மதித்திடாது மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆளுநர் முடிவைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றமே காலக்கெடு நிர்ணயித்து வழிகாட்டி இருக்கும் நிலையில் தனக்கு அதிகாரமில்லை என ஆளுநர் கூறியிருப்பது அப்பட்டமானப் பச்சைப்பொய்யாகும். ஒற்றை மைத்துளியில் கையெழுத்திட்டால் நாளையே எழுவரும் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பு இருக்கும்போது அதனை மூடி மறைத்து, அதிகாரமில்லை எனக் கூறுவது ஆகப்பெரும் மோசடித்தனம்.

இரண்டாண்டுகள் தீர்மானத்தைக் கிடப்பில் போடும்போது தெரியாத அதுகாரமின்மை, இப்போது தெரிகிறதா ஆளுநருக்கு? இதென்ன ஏமாற்று நாடகம்? தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் ஒப்புதல் கையெழுத்திட்டு ஒரே நாளில் விடுதலையைச் சாத்தியப்படுத்த முடிந்த ஆளுநர் எழுவர் விடுதலைக்கு மட்டும் விதிவிலக்கை முன்வைப்பது ஏன்? இவ்வழக்கில் இறந்துபோனவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே சட்டவிதிகளும், சனநாயக மரபுகளும் காற்றில் பறக்கவிடப்படுவது விதிமீறலில்லையா? எல்லோருக்கும் நீதி ஒன்றுதான் என அரசியலமைப்புச் சட்டம் கூறும்போது அதற்கு நேரெதிராக ஆளுநர் நடந்து கொள்வதன் மூலம் யாரை திருப்திப்படுத்த முனைகிறார்? ஒட்டுமொத்த தமிழினமும் எழுவர் விடுதலைக்காக ஒற்றைக்குரலெடுத்து முழங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கிறாரென்றால், அது அதிகாரத்திமிரில்லையா? இதனையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க தமிழக மக்களை இன உணவற்ற பிணங்கள் என்று நினைத்துவிட்டாரா ஆளுநர்? வேண்டுமென்றே, விடுதலையைத் தடுத்து முட்டுக்கட்டைப் போட்டு, இழுத்தடித்துச் சட்டத்தையும், சனநாயகத்தையும் அவமதித்து எட்டுகோடித் தமிழ் மக்களின் உணர்வுகளையும் சீண்டிப் பார்க்கிறாரா ஆளுநர்? இச்செயல் தமிழகத்தில் மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிட்டாரா ஆளுநர்? இத்தகைய முடிவை எடுக்க இரண்டு ஆண்டுகள் அந்தக் கோப்பினைக் கிடப்பில் போட வேண்டிய அவசியம் என்ன? எழுவர் விடுதலையில் நடக்கும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்களைக் கண்டுக்கொதித்துப் போயிருந்த உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் மேலும் நெருப்பை அள்ளி கொட்டியுள்ளது ஆளுநரின் நடவடிக்கை.

தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில், வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலைசெய்ய முனைப்புக் காட்டி உடனடியாக அதனைச் சாத்தியப்படுத்திய தமிழக அரசு, எழுவர் விடுதலையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதெனக் கருதி ஒதுங்கி நிற்பது நியாயம்தானா? தமிழக அரசு ஆளுமைத்திறனுடன் விளங்கியிருந்தால் இத்தகைய முடிவை எடுக்க ஆளுநருக்குத் துணிவு வந்திருக்குமா? கடந்த 25 ஆம் தேதியே தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துள்ள நிலையில், ‘நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார்’ என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தது எதற்காக? ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவையும் நிராகரித்து, தமிழக மக்களை அவமதித்திருக்கிறார் ஆளுநர். என்ன செய்யப் போகிறார் தமிழக முதல்வர்? வழக்கம் போலவே, எங்கள் கையில் எதுவுமில்லை எனப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளப் போகிறாரா?

‘மாநிலத் தன்னாட்சி’ என முழங்கிட்ட அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக அரசு இனியும் அமைதிகாப்பது ஏற்புடையதுதானா? உறுதியாக விடுதலை கிடைக்கும் என்று ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நம்ப வைத்த தமிழக அரசு, இனி என்ன செய்யப்போகிறது? அரசியல் அமைப்புப்பிரிவு 161 ன் கீழ் எழுவரையும் விடுதலை செய்ய மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என்று முன்னால் நீதியரசர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் தமிழக அரசு இனியும் வாய்மூடி மெளனியாக இருப்பது சரிதானா?

மீண்டும் குடியரசுத்தலைவரின் அலுவலகத்தின் கதவுகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் தட்ட வேண்டும்? குடியரசுத்தலைவரை வலியுறுத்தி தீர்மானம், அமைச்சரவை முடிவு என அரசியல் நாடகங்களின் அடுத்த அத்தியாயங்களை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நடத்தப்போறீர்கள்? அற்புதம்மாளுக்கு அம்மையார் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி என்னானது? அதனைச் செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு முன்னெடுத்த நகர்வுகள் என்னென்ன? எதற்குப் பதிலுண்டு? அற்ப அரசியலுக்காக விடுதலையைத் தடுத்து மானுட வதை செய்வது கொடும் சனநாயகத்துரோகம்.
மொத்தத்தில், பாஜக அரசின் நயவஞ்சகமும், அதிமுக அரசின் கையாலாகாதத்தனமுமே கைகளுக்கு வந்த விடுதலையைத் தட்டிப் பறித்திருக்கிறது. அதற்கான தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் கட்டாயம் புகட்டுவோம் எனச் சூளுரைக்கிறேன்.

ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் 161வது சட்டப்பிரிவின் கீழ் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி – திருமுருகப் பெருவிழா
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்