உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனத் தமிழக அரசு தகுதி நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய இளைஞர்களின் அரசுப்பணி கனவைக் கானல் நீராக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இவ்வரசாணை வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இதுவரை மாநிலத் தேர்வாணையம் நடத்தும் மாநிலத் தகுதித் தேர்வு (State Eligibility Test -SET) மற்றும் தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test – NET) ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த முதுகலைப் பட்டதாரிகள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இவை தவிர, முனைவர் பட்டம் பெற்றவர்கள் நேரடியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநில மற்றும் தேசிய தகுதித் தேர்வுகள் (SET & NET ) நடத்தப்படாத சூழலில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission – UGC) உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு முனைவர் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை அளித்தது. அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்று அதன் சாதகப் பாதகங்கள் குறித்து ஆராயாது, கிராமப்புறப் பட்டதாரிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாது தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும்.
தமிழகத்தில் இலட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவே உள்ளனர். அவர்கள் பல்வேறு சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டியே உயர்கல்வி படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும், முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் மிக அதிகமான பொருட்செலவும், கால அளவும் தேவைப்படும் தற்காலச்சூழலில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் முனைவர் பட்டம் பெறுவதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
ஆகவே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிராகச் செயல்படும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சூழ்ச்சிக்கு துணைபோகும் வகையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி