நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

1149

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைத்தலைவரும், சேவினிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவருமான அன்புத்தம்பி சேவற்கொடியோன் அவர்களின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பொய்வழக்குப் புனையப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தின் உரிமைகளைக் காக்கவும், தமிழ் மண்ணின் வளங்கள் கொள்ளைப் போவதைத் தடுக்கவும், சிதைந்துகொண்டிருக்கும் தாய்மொழியாம் தமிழ்மொழியை மீட்டெடுக்கவும், பத்தாண்டு காலமாய்த் தமிழிளம் தலைமுறையினரைத் திரட்டி அரசியல் பெரும்போர் புரிந்து வருகிறது நாம் தமிழர் கட்சி. அறம்சார்ந்த தூய, அரசியலை முன்னெடுத்து நற்றமிழர் ஆட்சியை நிறுவிட மண், மக்கள், மொழி நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ் இளையோர் பெரும்படையுடன் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சியானது திராவிட, தேசியக் கட்சியினரைக் கலக்கமடையச் செய்துள்ளது. அதன் காரணமாக ஆட்சி, அதிகார துணைகொண்டு எப்படியாவது நாம் தமிழர் கட்சியை முடக்கிவிடத் துடிக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். அதன்படி எங்கெல்லாம் நாம் தமிழர் பிள்ளைகள் அதிகாரத்தை நோக்கி முன்நகர்கிறார்களோ, எங்கெல்லாம் வெற்றிபெற்று தூய அரசியலை நிறுவுகிறார்களோ அங்கெல்லாம் நாம் தமிழர் பிள்ளைகளை அச்சுறுத்தியும், பொய் வழக்குகளைப் புனைந்தும் அவர்களை அரசியலைவிட்டே அப்புறப்படுத்த முனைகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவோடு வெற்றிப்பெற்று சேவினிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாகச் செயல்பட்டுவரும் அன்புத்தம்பி சேவற்கொடியோன் தன் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைத்துக்கொடுத்த விளையாட்டுத்திடலை, மதுபோதையில் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது தம்பி சேவற்கொடியோன் காவல்துறையில் புகாரளிக்க, முதலில் சமாதானம் செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது காவல்துறை. ஆனால், பொதுச்சொத்தைச் சேதப்படுத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறி, சமாதானம் செய்துகொள்ள மறுத்த காரணத்தால், காவல்துறை எதிர்த்தரப்போடு சேர்ந்துகொண்டு தம்பி சேவற்கொடியோன் மீதே பொய்யாகக் கொலைமுயற்சி வழக்குப்போட்டு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது.

இது முழுக்க முழுக்க காவல்துறையினரின் துணையோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புனையப்பட்ட அப்பட்டமான பொய் வழக்காகும். நேர்மையும், உண்மையுமாக மக்களுக்குப் பணியாற்றி, அறம் சார்ந்த அரசியலை இம்மண்ணில் நிறுவிட முயலும் எளியப் பிள்ளைகள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதற்கு இந்நிகழ்வே பெரும்சாட்சியாக அமைகிறது. அதுமட்டுமின்றி, தீர விசாரித்து நியாயப்படி செயல்பட வேண்டிய காவல்துறையும் ஒருபக்கச் சார்பாக நடந்துகொள்வது காவல்துறை மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. ஏற்கனவே, சாத்தான்குளம் தொடங்கிப் பல்வேறு சம்பவங்களில், சட்டத்திற்குப் புறம்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபட்ட ஒரு சில காவல்துறையினரின் செயல்களானது ஒட்டுமொத்த தமிழகக் காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக்கிவிட்ட நிலையில், சேவினிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது காவல் ஆய்வாளர் துணையோடு புனையப்பட்ட பொய்வழக்கு நிகழ்வும் அமைந்து, காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என அறிவுறுத்துகிறேன்.

ஆகவே, நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, மக்களின் பொதுச்சொத்தை சேதப்படுத்திவர்களைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனை செய்யத் தவறினால், மாபெரும் மக்கள் திரள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி