விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

276

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’ உழவருடைய கைகள் தொழில் செய்யாமல் முடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை என்று உலகத்தார்க்கு எடுத்துரைத்த உலகப்பொதுமறை தந்த எங்கள் வள்ளுவப் பெரும்பாட்டனின் மண்ணில், ‘விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று முழங்கிய அண்ணல் காந்தியடிகளின் நாட்டில் அவ்விவசாயத்தைக் காக்க விவசாயிகளே வீதியில் இறங்கிப்போராட வேண்டிய இழிநிலை ஏற்பட்டிருப்பது ஏற்கவே முடியாத கொடுந்துயரமாகும்.

பாராளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டத்தின் வழியே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, கொடுங்கோன்மையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கினால் தற்போது இயற்றப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திலிருக்கும் குறைந்தபட்சத் தற்சார்பையும் பறித்து, அதனைத் தனிப்பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கின்றன. 130 கோடி மக்களின் உணவுச்சந்தையை மொத்தமாக உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்கு வழிவகுக்கின்றன. இப்பேராபத்தை உணர்ந்து, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் 28 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது; கடும் வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் மிகுந்த எழுச்சியுடன் ஈடுபட்டுவருகின்றனர்.

உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழும் இம்மாபெரும் அறப்போராட்டம் இந்நாட்டின் சனநாயகத்தையும், இறையாண்மையையும் மீட்டெடுக்க நடக்கிற மற்றுமொரு விடுதலைப்போரென்றால் மிகையில்லை.

விவசாயத்தைப் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்காக வணிகமயமாக்கும் கொடிய வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் இல்லையேல், மக்கள் புரட்சி வெடிக்கும் என ஏற்கனவே எச்சரித்திருந்தது இன்றைக்குக் கண்முன்னே நடக்கிறது. எத்தகைய நெருக்கடிவரினும் தளராமல் பல இலட்சக்கணக்கில் கூடி நிற்கும் விவசாயப் பெருங்குடிகளின் எதிர்ப்பலையையும், உணர்வெழுச்சியையும் புரிந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெறுவது ஒன்றுதான் இச்சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் அதிகாரத்திமிரைத் தகர்த்தெறியும் விதமாகச் சமரசமற்றுக் களத்தில் நிற்கும் விவசாயிகளின் போராட்டம் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

உழவர் பெருமக்களின் இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதோடு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெரும்வரை நாம் தமிழர் கட்சி தோளோடு தோளாகத் துணைநிற்கும். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான போராட்டமன்று; உணவு உண்ணும் ஒவ்வொருவரின் போராட்டம் என்பதனை உணர்ந்து வேளாண் பெருங்குடிகளின் இவ்வாழ்வாதாரப் போராட்டத்தில் இணைந்துகொண்டு போராட்டத்தை வெல்லச் செய்ய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும்.

விவசாயிகளின் போராட்டத்தின் நியாயத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க உங்கள் சகோதரன் இறுதிவரை உறுதியாகக் குரல்கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்.

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!

உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

வேளாண் பெருங்குடிமக்கள் அனைவருக்கும் தேசிய உழவர் நாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திசிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திநத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்