சான்றோர் பெருமகன் ஐயா இரா.பத்மநாபன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம் 

112

சான்றோர் பெருமகன் ஐயா இரா.பத்மநாபன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்

மிகச்சிறந்த தமிழறிஞரும், நாம் தமிழர் கட்சியின் உயரிய அமைப்பான ஆன்றோர் அவையத்தின் செயலாளருமான
இரா. பத்மநாபன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்களோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் ஐயா பத்மநாபன் அவர்கள் .
தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் இணைப்பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்றப் பிறகு, முழுநேர தமிழ் உணர்வாளராக, செயற்பாட்டாளர்களராக, தமிழினத்திற்கானப் போராட்டங்களில் முன்களப்போராளியாக விளங்கியவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இன அழிவுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியில் இணைந்து ஆன்றோர் அவையச் செயலாளராகப் பணியாற்றி, தனது மதிப்பு மிகுந்த கருத்துக்களால் எம்மை வழிநடத்தும் முன்னோடிகளில் முதன்மையானவர்.

தமிழ்த்தேசியக் கருத்தாக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு தனது வாழ்நாள் முழுக்க இனம் சார்ந்த களப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சான்றோர் பெருமகன் ஐயா பத்மநாபன் அவர்களது
மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பாகும்

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி