வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச்
சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய
சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு...
தமிழகத்தின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கெனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவையினங்கள் வருகின்றன. இத்தகைய சூழலியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவனத்தின் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதற்காக சரணாலயத்தின் எல்லையை 5 கிலோமீட்டரில் இருந்து 3 கிலோமீட்டராகச் சுருக்குவதற்குத் தமிழக அரசு திட்டமிடுவதாகவும் செய்திகள் வெளியாயின.
சரணாலயத்திற்கும் சூழலியலுக்கும் ஏற்படவிருந்த பேராபத்தினை உணர்ந்து, நாம் தமிழர் கட்சியின் வலிமைமிக்கப் படைப்பிரிவுகளில் ஒன்றான சுற்றுச்சூழல் பாசறை சரியான நேரத்தில் வழக்கு தொடுத்து, சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து, தனியார் மருந்து நிறுவனத்தின் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி மறுக்கபட்டது என்பதை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசே வெளிப்படையாக அறிவிக்கச் செய்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அது மட்டுமின்றி சரணாலயத்திற்குள் எதிர்காலத்தில் தொடர்புடைய தனியார் மருந்து நிறுவனம் எவ்வகையில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரினாலும் தமிழக அரசு, இந்த வழக்கை தொடுத்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களினுடைய கருத்தினைக் கேட்ட பின்பே முடிவுசெய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது இவ்வழக்கில் மற்றுமொரு மைல் கல்லாகும்.
ஒருபுறம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதல் அளித்தாலும், சரணாலயத்தின் எல்லையைச் சுருக்கவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையும் முறியடிக்க நாம் தமிழர் கட்சி இன்னும் வலிமையான சட்டப்போராட்டத்தினையும் மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்கும் என்பதைப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் இத்தகைய ஆக்கப்பூர்வமான முயற்சியானது மனிதர்களுக்கு மட்டுமின்றி இவ்லகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பேணிகாப்பதுடன், நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் பெருங்காப்பரணாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இப்போற்றுதற்குரிய பெரும் பணியில் பங்காற்றிய சுற்றுச்சூழல் பாசறையின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா எழில்சோலை மரம் மாசிலாமணி அவர்களுக்கும், துணைத் தலைவர் தம்பி காசிராமன், செயலாளர் தங்கை வெண்ணிலா தாயுமானவன், தம்பி விஜயராகவன், தங்கை சுனந்தா தாமரைச்செல்வன் அவர்களுக்கும், தம்பிகள் பா.விக்னேஷ் மற்றும் இராஜ்கிஷோர் ஆகியோருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.
இவ்வழக்கில் சட்டப்பணியாற்றிய வழக்கறிஞர் தம்பி தா.கோபிநாத், வழக்கறிஞர் தம்பி சு.அமர்நாத் ஆகியோருக்கும் துணைநின்ற தம்பி சரவணன் நடராஜன் அவர்களுக்கும் எனது புரட்சி வாழ்த்துகளை உரிதாக்குகின்றேன்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்!
– தமிழ்மறையோன் வள்ளுவப் பெருமகனார்
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி