பற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

82

அறிக்கை: பற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அப்போதைய சூழ்நிலையில் 9 ஆயிரத்திற்கும் குறைவான காலியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டது. அதில் மீதமுள்ள சுமார் 11000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இறுதித் தேர்வுவரை தகுதிப் பெற்றும் போதிய காலிப் பணியிடங்கள் இன்மையால் அப்போது பணியமர்த்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2020 – 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு, காலியாக உள்ள 10000 க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்தது.

தற்போதுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக இயல்பு வாழக்கை முடங்கியுள்ள நிலையில் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இப்பேரிடர் காலத்தில் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிக்காக அதிகமான காவலர்கள் தேவைப்படும் சூழலும் உள்ளது.

காவலர்கள் பற்றாக்குறையினால் பணியில் இருக்கும் காவலர்களே விடுப்புகள் இல்லாத தொடர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் உருவாகும் மிதமிஞ்சிய பணிச்சுமையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களது உடலும் மனமும் நலிவுற்று எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாவதும், அதனால் பல இடங்களில் காவல்நிலையங்களே மூடப்படும் சூழல் உருவாவதும் தொடர்கதையாகியுள்ளது. இது மேலும் காவலர்களின் நிலைமையைச் சிக்கலாக்குகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்க பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும் , அவ்வாறு நடத்தி முடிக்க நீண்ட காலதாமதமாகும் என்பதாலும் 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற தேர்வர்களைப் பணியமர்த்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக கூடுதல் காவலர்கள் தேவைப்படுவார்கள். இதுபோல் கடந்த காலங்களில் அதிகமான காவலர்கள் தேவைப்பட்டபோது உடனடித் தேவையைக் கருத்திற்கொண்டு இதேபோன்று பணி நியமனங்களை தமிழக அரசு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தற்போது பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் உடனடியாக அவர்களைப் பணியமர்த்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு