‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்

308

‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டுத் தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்

சென்னை, மயிலாப்பூர் ‘நீட்’ தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கட்டாயப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது. ‘நீட்’ என்னும் உயிர்க்கொல்லி தேர்வில், சோதனை என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பது கொடுமையின் உச்சமாகும்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்ட கொடும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டுக் கானல் நீராகியது. தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பின்பும், நீட் தேர்வை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும். நீட் தேர்வு தோல்வி, தேர்வு பயம், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது சோதனை என்ற பெயரில் காதணி முதல் உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது மேலும் அவர்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்கவே கூடும். இதனால் உருவாகும் பதற்றமான சூழலால் தேர்வில் முழுக் கவனம் செலுத்தமுடியாத நெருக்கடியும் ஏற்படும். இது நீட் தேர்வுத் தோல்விகளும், தற்கொலைகளும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மாணாக்கர்களைப் பயங்கரவாதிகளைப் போல சோதனை செய்து, உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது சிறிதும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். அதிலும் மற்ற மாநிலத்தில் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் மட்டும் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்குப் பின்னால் தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவராவதைத் தடுக்க, திட்டமிட்டு வேலை செய்வதாகக் கருத வேண்டியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த முதல் சட்டமன்றத் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை இன்றுவரை ரத்து செய்யவில்லையே ஏன்? நீட் கொடுமைக்கு முதல் பலியான அன்புத்தங்கை அனிதாவின் பெயரில் அரியலூர் மருத்துவக்கல்லூரியில் ஒரு அரங்கம் உருவாக்கியுள்ள திமுக அரசு, மருத்துவக் கனவுகள் சிதையும் அனிதாக்கள் உருவாகாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வினை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கடந்த ஆட்சிக்காலத்தில் கருத்துக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டாண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது குறித்து என்ன கருத்துக் கூறப்போகிறார்? இதுதான் இரண்டு ஆண்டில் இந்தியத் துணைக்கண்டம் வியக்கும் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, திமுக அரசால் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்திற்குள் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீட் தேர்வின் பெயரால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கினை விரைவுபடுத்த உரிய சட்டப்போராட்டதை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஜூன் 03, காஞ்சிபுரம் – பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்