ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மீனவர்களை மீட்டெடுத்து தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளின் முன்நகர்வாக ஏறக்குறைய 650 மீனவர்கள் ஈரானிலிருந்து மீட்கப்பட்டு தனி வானூர்தி மூலம் இந்நாட்டிற்குக் கொண்டுவரப்படும் வேளையில், தாமதமாகப் பதிவு செய்தல், இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களில் 44 தமிழக மீனவர்கள் நிர்கதியற்று உணவும், தங்க இடமுமின்றி அந்நாட்டின் சாலை ஓரங்களில் நிற்கிற செய்தியறிந்து பெருங்கவலையும், மனக்கலக்கமும் அடைந்தேன். தனது குடும்ப வறுமையைப் போக்க அயலகப்பணிகளுக்குச் சென்று அல்லலுற்று பொருள்சேர்க்கும் தருணத்தில் இப்பேரிடரில் சிக்கி தமிழ்நாடு திரும்ப முடியாது தவிக்கும் அவர்களது வேதனை சொற்களால் விவரிக்க முடியாப் பெருந்துயரமாகும்.
உணவுக்கே வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகி நிற்கும் அவர்களிடம் இந்திய வெளியுறவுத்துறையினர் 35,000 ரூபாயைக் கட்டணமாகக் கேட்பதாக மீனவர்கள் கூறுவது பேரதிர்ச்சி தருகிறது. தங்களது ஒருவேளை உணவுத்தேவையைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலா நிராதரவற்ற சூழலில் அவர்கள் நிற்கும்போது அவர்களிடம் கட்டணம் கோருவது மானுடமே அன்று! அயல்நாட்டில் சிக்கித் தவிக்கும் அவர்களை மீட்டெடுத்துத் தர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.
ஆகவே, உடலாலும், மனதாலும் பெரும் சோர்வுற்று இருக்கும் தமிழக மீனவர்கள் 44 பேரும் நாடு திரும்ப, தனி வானூர்தியை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், அதுவரை அவர்களது அத்தியாவசியத் தேவைகளையும், அடிப்படை வசதிகளையும் செய்து தந்து போர்க்கால அடிப்படையில் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி