அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

16

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் செயற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் தொழில்கள் யாவும் முடங்கியதால் வேலையின்மை அதிகரித்து, அடித்தட்டு நடுத்தர வர்க்கம் வருவாய் ஈட்ட வழியேதுமில்லாது அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி பரிதவித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தினால் ஏற்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு நாட்டு மக்களை மொத்தமாய் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்காலப் பேரிடர் சூழலில் ஏற்படும் பொருளாதார நலிவிலிருந்து நாட்டு மக்களை மீட்டுத் தற்காப்புச் செய்ய எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத மத்திய அரசு அவர்கள் தலைமீது சுமையை ஏற்றி வைப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

அண்மைக்காலமாக சர்வதேசச்சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையிலும் அதன் பயனை அனுபவிக்கவிடாது வரிகளை விதித்து பெட்ரோல், டீசல் விலையினை ஏற்றி வருவது மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு செய்து வரும் பச்சைத்துரோகமாகும். மத்திய அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளாலும், முடிவுகளாலும் ஏற்கனவே பெரும் பொருளாதார முடக்கத்தைச் சந்தித்து நிற்கும் மக்களுக்கு இப்பேரிடர் காலம் தந்த துயரினால் நாட்களை நகர்த்துவதே பெரும்பாடாய் மாறி நிற்கிறது. இந்நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விலைவாசி உயர்வுக்கு வழிவகுப்பது கொடுங்கோன்மை அரசாட்சியின் உச்சமாகும். இவ்வாண்டுத் தொடக்கத்தில் 60 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை படிப்படியாகச் குறைந்து ஏப்ரல் மாதம் 15 டாலராகச் சரிந்தது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசலின் விலையை உயர்த்துவதில் ஆர்வங்காட்டும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரொல், டீசல் விலையைக் குறைக்க ஒருபோதும் முனைப்பு காட்டுவதில்லை. கடந்த இரு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை ஏறக்குறைய 20 டாலர் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தபோது அதற்கு நிகராக எரிபொருள்களின் விலையைக் குறைந்தபட்சம் 15 ரூபாயாவது குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது வழக்கம்போல் விலையேற்றி இலாபக் கொள்ளையில் ஈடுபட்டன எண்ணெய் நிறுவனங்கள். இவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களின் வரம்பற்றக் கொள்ளையை அனுமதித்ததோடு ஏப்ரல் 14 ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது.

இவ்வாறு 2014ல் மத்தியில் பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை பலமடங்கு கலால் வரியை கட்டற்று உயர்த்திக் கச்சா எண்ணெய் விலைவீழ்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் செய்து வரும் பாஜக அரசு, விலையேற்ற சுமையை மட்டும் மக்கள் தலையில் சுமத்தி வருகிறது. மாநில அரசும் தன் பங்கிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை ஏற்றி பெட்ரோலுக்கு 3.25 ரூபாயும், டீசலுக்கு 2.50 ரூபாயும் விலையை உயர்த்தியது. இவை அனைத்திற்கும் மூலக்காரணமாக விளங்குவது, தனது கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியில் ஆண்ட அரசுகள் தாரைவார்த்ததேயாகும். கடந்த 2010ஆம் ஆண்டு, சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கையளித்தன. ஒவ்வொரு நாளும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு விலையின் ஏற்ற, இறக்கங்களை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்ற முறையின் காரணமாக, கடந்த 22 நாட்களில் மட்டும் 21 முறை பெட்ரோல், டீசல் விலைகள் சுமார் 10 ருபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ஊரடங்கு, தொழில் முடக்கம், வருமானமின்மை உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஊரடங்குக் காலகட்டமென்பதால் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்களின் வாங்கும்திறன் குறைந்து ஒவ்வொரு நாளும் பட்டினிச்சாவுகள் நிகழும் செய்திகள் வரும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான முயற்சியையோ, தங்குதடையின்றிக் கிடைப்பதற்கான வழியையோ ஏற்படுத்தத் தவறிய மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை நாளும் அதிகரிப்பதென்பது மக்கள் நலனுக்குப் புறம்பான அரசப்பயங்கரவாதமாகும். ஏற்கனவே, சுங்கக்கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்டப் பொதுமக்களை மட்டுமின்றி, சரக்கு வாகன உரிமையாளர்களையும் இது வெகுவாகப் பாதிக்கும். சுமையை ஏற்றிச்செல்லும் பொருள்களின் வாடகைச் செலவு உயர்ந்து விற்பனைச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கவே இது வழிவகுக்கும். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மேலும் மேலும் இன்னலுக்கு ஆளாவார்கள்.

ஆகவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மத்திய அரசு நாளுக்கு நாள் உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் எனவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு நிகராக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலைக் குறைப்பை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி