சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார்-சரண்யா இணையரின் இளைய மகள் சோபியா மற்றும் கண்ணன்-வேணி ஆகியோர்களின் இளைய மகள் கிஷ்மிதா இருவரும் பாலர் பள்ளிக்கு சென்ற இடத்தில் அருகிலுள்ள கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர நிகழ்வறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெற்றெடுத்து பேணி வளர்த்த குழந்தைகள் இருவரையும் பறிகொடுத்து, பெருந்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஏதும் அறியா குழந்தைகளை ஆசிரியப்பெருமக்களை நம்பியே பெற்றொர்கள் ஆரம்ப கல்வி பயில அனுப்புகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதோடு, கண்ணும் கருத்துமாய் பாதுகாக்க வேண்டியதும் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களது முழுமுதற் கடமையாகும். தற்போது இரண்டு குழந்தைகளும் உயிரிழக்க ஆசிரியர் மற்றும் உதவியாளரின் அலட்சியமே காரணமாகும்.
தமிழ்நாடு அரசு இத்துயர நிகழ்வு உரிய நீதிவிசாரணை நடத்தி, குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாயாக துயர் துடைப்பு நிதியினை உயர்த்தி வழங்க வேண்முமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
குழந்தைகள் கிஷ்மிதா மற்றும் சோபியா ஆகியோருக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி