சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

45

சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள சிவகங்கை – இளையான்குடி – மானாமதுரை – திருப்புவனம்- பரமக்குடி- சாயல்குடி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்டக் கிராமங்களில் உவரி மண் – சவ்வூடு மண் அள்ளுவதற்கு அரசு அளித்திருக்கும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, பல இடங்களில் 30 அடிக்கும்மேல் மணலை அள்ளிச்சென்று கொள்ளையடித்து வரும் சமூக விரோதிகளின் கொடுஞ்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இம்மணற்கொள்ளையைத் தடுத்து மணற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இக்கொள்ளைக்கு உடந்தையாக நின்று அவ்வளவேட்டைக்குத் துணைபோவது வெட்கக்கேடானது.

மணல் என்பது இயற்கை அளித்த கொடை; பூமித்தாயின் மடி. அதுவே உலகின் தலைசிறந்த வடிகட்டியுமாகும். நீராதாரத்தைத் தக்கவைக்கும் பெரும் சேமிப்புக்கலனாகவும் அது விளங்குகிறது. அத்தகைய இன்றியமையாத மணல் தமிழகத்தின் அத்தனை ஆறுகளிலிருந்து திருட்டுத்தனமாக அள்ளப்பட்டுத் தமிழகத்தின் ஜீவநதிகள் யாவும் இன்றைக்குச் செத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கியூமிக் மீட்டர் மணலை அள்ளினால் மூன்று கியூமிக் மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் என்பது இயற்கை விதி. இதனைக் கடைபிடிக்காது வரைமுறையற்றுத் தொடர்ச்சியாக மணலை அள்ளுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை சீர்கேட்டு நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மணல் கொள்ளை என்பதே முற்றிலுமில்லை என அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு அந்த மண்ணின் ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆந்திராவிலும், கேரளாவிலும்கூட மணல் அள்ளுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திலோ மணல் கொள்ளை மூலம் தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திற்குரிய நீராதாரங்களைத் தடுத்து அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூடத் தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது என்பதன் மூலம் மணல் கொள்ளையின் கோரமுகத்தை அறிந்து கொள்ளலாம்.

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலர்களையும், அதிகாரிகளையும் சமூக விரோதிகள் அடித்துக்கொலை செய்கிறார்களென்றால் மணல் கொள்ளையர்களின் கை ஓங்கி அவர்கள் எந்தளவுக்கு திமிறி நிற்கிறார்கள் என்பதனையும், அவர்களுக்கு இத்தகைய துணிவு ஆட்சியாளர்களின் துணையில்லாது வந்திருக்குமா? என்பதனையும் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் எத்தகைய ஆட்சி மாற்றமும் இந்த மணல் கொள்ளையர்களைப் பாதிப்பதில்லை. திமுகவின் ஆட்சியாக இருந்தாலும், அதிமுகவின் ஆட்சியாக இருந்தாலும் மணல் கொள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எவரும் இங்கு முடிவுகட்ட முனைவதில்லை. ஆற்று மணலைக் கொள்ளையடித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரசு ஒப்புக்குச் சொல்கிறதே ஒழிய, மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக இதுவரை செய்தியில்லை. மாறாக, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறவர்கள் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்பதன் மூலம் இவ்வரசுகள் யாருக்கானது என விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானூர் கிராமத்தில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளிவரும் மணல் கொள்ளையர்களின் 11 பார உந்துகளை சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததிற்காக சிவகங்கை வட்டாட்சியர் மயிலாவதி அவர்கள் அதனைச் சிறைப்பிடிக்க, பின்பு, அந்த பார உந்துகள் எவ்வித வழக்குமின்றி மேலிடத்து உத்தரவால் விடுவிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தளவுக்கு மணல் கொள்ளையர்களின் ஆதிக்கம் ஆட்சியதிகாரத்தில் கொடிகட்டிப்பறக்கிறது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள உப்பாறு, நாட்டார்கால், சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, விருசுழி ஆறு, பாம்பாறு, தேனாறு, நாட்டாறு ஆகிய 9 சிற்றாறுகளிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதேபோல, ஆற்றையொட்டியுள்ள பட்டா நிலங்களில் சவ்வூடு மண் பெயரில் 3 அடிக்குக் கீழே கிடைக்கும் மணலைக் கடத்தி வருகின்றனர். மணல் அள்ளும் உரிமையைக் குறிப்பிட்ட முகவர்களுக்கே அரசு வழங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் , குறிப்பிட்ட எல்லைவரை மணல் அள்ளலாம் என்ற விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகள் யாவற்றையும் மொத்தமாய் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சுற்றுச்சூழல் சீர்கெடும் அளவுக்கு மணலை அடிவரை சுரண்டிக் கொள்ளையடிக்கும் இச்செயலில் சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். விதிமீறலையும், அபரிமிதச் சுரண்டலையும் கணக்கிலெடுக்கா அதிகாரிகள் அளிக்கும் அரசு ஆவணங்களிலுள்ள தகவல்களுக்கும், களத்தில் வெட்டி எடுக்கப்படும் மணலின் அளவுக்கும் இடையே இருக்கும் மலைக்கும், மடுவுக்கும் இடையேயான வேறுபாடு நடந்தேறும் பெரும் கொள்ளையைத் தெரியப்படுத்துகிறது.

எனவே, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் இந்த மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், முறைகேடாக மணலை அள்ளி மிதமிஞ்சிய மணற்கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இந்த சட்டவிரோத மணற்கொள்ளையைத் தடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை அணுகி சட்டப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம் என அறிவிப்பு செய்கிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

TN Govt. Should Stop the Illegal Sand Mining Immediately that Takes Place Consecutively in Sivagangai & Ramanathapuram Districts – Seeman Insists!

The cruel deeds by anti-social elements are extremely condemnable who are indulged in mining beyond the permitted 30-feet depth in over 30 villages of Sivagangai, Ilayankudi, Manamadurai, Thirubhuvanam, Paramakudi, and Sayalkudi regions. It is shameful that the government officials, who are supposed to stop these Illegal sand mining and take stringent action on those sand mafias, stand beside them in assisting resource depletion.

Sand is a gift from the nature; Mother Earth’s lap. It is the world’s greatest filter; also It serves as water-retentive storage house. Such an indispensable gift is being illegally mined from all the TN rivers, and all the soulful rivers are dying. It is nature’s principle that the water table level goes down by 3 cubic meter for every 1 cubic meter of sand mining. The water table is greatly affected due to the ecological imbalance created by unregulated sand mining activities, i.e., not following this principle. Kerala, neighbouring state, has preserved their natural resources in such a way that there is almost no illicit sand mining activities at all. Andhra Pradesh and Kerala have laid several water-tight regulations for sand mining activities whereas in Thamizh Nadu, sand is being smuggled to Andhra Pradesh, Kerala, and Karnataka for construction purposes. The gruesome fact is that the sand is being smuggled from Thamizh Nadu to neighbouring states for building dams that affects water sources of Thamizh Nadu.

The police personnel and officials who gets into the action of stopping illegal sand mining were done to death by the anti-social elements. It makes us to think that these atrocious, valiant violence by these goons would not be perpetrated without the government’s assistance? Be it ADMK or DMK’s regime, both will never bring an end to the sand mafias’ dominance. There is no information that not even a single goon of a sand mafia is ever arrested under The Goonda’s Act but cases on those who were agitating against the illegal mining were booked. We should learn that for whom both the DMK and ADMK governments are for.

In the sand quarry situated in Kaanur village, Sivagangai district, people complains that 11 trucks were seized that were used for illegal sand smuggling by the Sub-Collector Mayilavathi, later were released without any case being filed due to the pressure from the high command. Such is the extent of influence of the sand mafias.

The illicit sand mining takes place in the hamlets of Sivagangai district, namely, Upparu, Nattarkaal, Sarukani Aaru, Manimuthaaru, Palaaru, Pambaaru, Thenaaru, and Naataaru. Likewise, sand is being smuggled in the river-adjoining patta lands in the name of Savudu beyond the permissable limit of 3 feet. The right for sand mining is being to specific vendors. Moreover, norms were formulated with specific mention of places, level, and limits to mine sand. But these norms were being floated by the anti-social elements and indulged in these environmental deteriorating activities. It is quite evident that there is a vast difference of data between the information provided in the documentations of the officials and reality checks.

Hence, I insist, in behalf of the Naam Thamizhar Katchi, that the TN Government should stop illegal sand mining and take stringent legal actions immediately against the anti-social elements, not just in Sivagangai and Ramanathapuram districts but also other parts of the State. I also inform that we will stop these Illegal sand mining through legal battle, if the government fails to do so.