10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! –  சீமான் வலியுறுத்தல்.

66

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! –  சீமான் வலியுறுத்தல்.

நாடெங்கும் கொரனா நோய்த் தோற்று அதி தீவிரமாக பரவி வருகின்ற இந்த சூழலில் தமிழக அரசு 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வினை நடத்திவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருவது இலட்சக்கணக்கான இளம் மாணவ மாணவியரின் உயிரோடு விளையாடுகிற அபாயத்திற்கு சமமானது.

உலகினையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரனா நோய் பரவல் கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் இந்தியா நான்காம் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க,இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் நோய் பரவல் விகிதத்தில் அபாயகரமான கட்டத்தில் இருந்து வருகிறது.

நோய் தொற்று அதிகம் பரவாத மார்ச்-ஏப்ரல் மாதத்திலேயே கவனம் கொண்டு தேர்வுகளை தள்ளி வைத்த தமிழக அரசு, தீவிரமாக தொற்றுப் பரவி உயிரிழப்பு விகிதம் அதிகமாகி கொண்டிருக்கிற இந்தக் கொடும் சூழலில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி பொதுத்தேர்வுகளை நடத்தியே தீருவோம் என பிடிவாதம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

வருகிற ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கான தேர்வும், 16ஆம் தேதி பதினோராம் வகுப்பிற்கான விடுபட்ட தாளுக்கான தேர்வும், 17 ஆம் தேதி ஏற்கனவே 12 வகுப்பு பொதுத்தேர்வில் எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான‌ தேர்வும்
நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,மாணவ மாணவியரிடையே பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுத் தேர்வு நடக்கும் வளாகங்களில் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிற அறிவுரைகள் கடைபிடிக்க முடியாத அளவில்தான் சூழல்கள் இருக்கின்றன என்பதை இன்று தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரு பள்ளியில் தேர்வு நுழைவு அனுமதி சீட்டு வாங்க கூடிய ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சமூக விலக்கினை கடைபிடிக்காமல் கூடியிருந்ததாக ஊடகங்களில் வருகிற செய்திகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

நடைமுறையில் தேர்வு நடத்துவதற்கான எந்தவித இயல்பான சூழலும் இன்னும் சமூகத்தில் ஏற்படாத நிலையில் மாணவ-மாணவியர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் தேர்விற்கு தயாராகாத நிலையில், நோய்த்தொற்று அபாயம் முற்றிலுமாக அகன்ற பிறகு, பத்து தினங்கள் பள்ளிகளை நடத்தி விட்டு மாணவ- மாணவியரை உளவியலாக தயார் செய்து பிறகு தேர்வு நடத்துவதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என இச்சமயத்தில் நான் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்திய அரசு சிவில் பதவிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை கூட நோய் பரவலின் தீவிரம் கருதி அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டபிறகு, பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு விவாகரத்தில் தமிழக அரசு ஜூன் மாதத்திலேயே தேர்வு நடத்தி விட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும், நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக வாதம் செய்து வருவதும் மக்களிடையே பெரும் வெறுப்பினை உண்டாக்கி இருக்கிறது.

அரசுத் தரப்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சொல்லப்படுகின்ற செயல்பாடுகள் கொரனா போன்ற அதிதீவிர பரவல் நோயை கட்டுப்படுத்துவதற்கான அல்லது தடுப்பதற்கான அளவில் இல்லை என்பதைத்தான் தினந்தோறும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிர் பலி எண்ணிக்கையும் காட்டுகின்றன.

தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்நிலையில் எதிர்கால சமூகத்தின் நம்பிக்கை ஊற்றுக் கண்ணாக திகழ்கிற மாணவ மாணவியரின் உயிரோடும், உடல் நலத்தோடும் தமிழக அரசு விளையாட வேண்டாமென எச்சரிக்கிறேன்.

தேர்விற்காக கூடுகிற ஆயிரக்கணக்கான மாணவர்களில் யாரோ ஒரு மாணவனுக்கு கொரனா தொற்று இருந்தாலும் அது அனைத்து மாணவர்களுக்கும் பரவுகிற மாபெரும் அபாயம் இருக்கிற இச்சூழலில், தமிழக மாணவ – மாணவியரின் நலன் கருதி ‌ தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிற பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை உடனடியாக தள்ளி வைக்க வேண்டுமென இதன் மூலம் வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – கனடா பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநிலவேம்பு பொடி பொத்தலங்கள் நாம்தமிழர் மத்திய தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.