குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம் – நாம் தமிழர் கட்சி
குமரித்தந்தை
அது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருந்த 1900 ஆண்டுகளின் தொடக்க காலம்..
சொந்த நாட்டிற்குள்ளேயே சொந்த சகோதரர்களும் மறுபுறம் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த காலமும் கூட..
விறுவிறுவென அந்த நீதிமன்றத்தில் நுழைகிறான் அந்த இளைஞன்.
வரிசையாக போடப்பட்டுருந்த நாற்காலிகளுக்கு பக்கத்தில் போடப்பட்ட குத்துமனைகனை காண்கிறான். ஒரு குத்துமனையை எட்டி உதைக்க அது போய் அங்கே தனியாக தண்ணீர் வைக்கப்பட்டிருந்த ஒரு பானைமீது விழுந்து சரிகிறது.
அந்த நீதிமன்றமே அந்த இளைஞனை அதிர்ச்சியோடு பார்க்கிறது.
அதுவரை குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த வரலாறு அன்றிலிருந்து மாறுகிறது. அந்த இளைஞன் பெயர் நேசமணி. அவர்தான் குமரித்தந்தை என்று போற்றப்பட்ட மார்ஷல் நேசமணி அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியில் 1895-ம் ஆண்டு பிறந்தார் மார்சல் நேசமணி. கேரள நம்பூதரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் சாதி ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சிறுவயதிலேயே சாதிய அடக்குமுறைகளைச் சந்தித்தவர் நேசமணி. நாகர்கோவிலுள்ள கிறிஸ்துவ உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தஅவர், திருநெல்வேலியுள்ள சி.எம்.எஸ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும், சட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் படித்து பட்டம் பெற்றார்.
1921-ம் ஆண்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆரம்பகாலத்தில் ஆசிரியராய் பணியாற்றினார். பின்பு நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வந்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை உடையவர். 1914-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் கரோலின்.
திருவிதாங்கூரில் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே ஒட்டுரிமை இருந்தது. அதனை மாற்றி எல்லோருக்கும் ஒட்டுரிமை வேண்டுமென்று நேசமணி குரல் கொடுத்து வந்தார். 1943 ஆம் ஆண்டு திருமூலம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னுடைய கன்னிப்பேச்சில் இந்தக் குமுறலை வெளிப்படுத்தி னார். பிற்காலத்தில் எல்லோருக்கும் ஒட்டுரிமை கொடுக்கப்பட்டது. இது ஐயா நேசமணியின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
திருவிதாங்கூரில் மன்னரும், மக்களில் சில இனத்தவரும் மருமக்கள் வழி சட்டத்தைப் பின்பற்றிய காரணத்தினால் தமிழ் மன்னர்கள் மலையாள மன்னர்களாக மாறினர். தமிழ்மொழி இருந்த இடத்தில் வட்டார மொழியாகத் தோன்றிய மலையாள மொழி ஆட்சி பீடம் ஏறியது. குமரி மண் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதி ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே கவனித்து வந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கோலப்பன், ‘‘திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் வேலைகளுக்குக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் கீழ்தான் இயங்க வேண்டும்’’ என்றார். அதை நடைமுறையிலும் கொண்டுவந்தார். இதனை காங்கிரஸ் தமிழ் பகுதி தலைவர்கள் எதிர்த்தனர்.
இந்த நிலையை மாற்றுவதற்காக, பல பெரியோர்கள் பல இயக்கங்களைத் தோற்றுவித்தனர். அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தோடு இணைவதற்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் வடவெல்லை காவலர் மறத்ததமிழர் மா.பொ.சி.
பின்னர் அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் மார்ஷல் நேசமணி.
1945-ம் ஆண்டு இறுதியில் மலபார், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் ஆகிய மூன்றின் மலையாள தலைவர்கள் கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். தென்திருவிதாங்கூர் பகுதிகளில் கேரள காங்கிரஸுக்கு உறுப்பினர்களைச் சேர்த்து குழுக்கள் அமைப்பதற்கு பொன்னாரை ஸ்ரீதரை நியமித்தனர். இவரோடு சமஸ்தான காங்கிரஸ் தலைவர்களும் இறங்கினர். இதனை முதன்முதலில் பி.எஸ்.மணி எதிர்த்தார். கேரள காங்கிரஸ் சார்பாக ஸ்ரீதர் வாசித்த தீர்மானத்துக்குப் பதிலளித்த பி.எஸ்.மணி, ‘‘ஸ்ரீதர் வாசித்த தீர்மானம் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என இருக்கிறது. கேரளம் அமைவதானால் அமையட்டும். அதில், கன்னியாகுமரி வரை என இருக்கும் பகுதி நீக்கப்பட வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து மொழிவாரி மாகாணம் அமையும்போது திருவிதாங்கூரினுள் அகப்பட்டுள்ள தமிழ் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடும் விவாதம் நடைபெற்றது. பி.எஸ்.மணியின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே தீர்மானம் நிறைவேறியது.
இதை எதிர்த்து 1945 டிசம்பர் 9 ஆம் நாள் “திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்” மார்சல் நேசமணியால் தொடங்கப்பட்டது. பின்னர் இதை 1947 செப்டம்பர் 8 இல் சிவதாணுப்பிள்ளை எம்.எல்.ஏ. அறிஞர் சிதம்பரம்பிள்ளை, அப்துல் ரசாக் எம்.எல்.ஏ. ஆகியோருடன் இணைந்து ஆலன் மண்டபத்தில் வைத்துத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை அரசியல் இயக்கமாக நேசமணி மாற்றினார்.
தெற்கெல்லைத் தமிழர்களின் குரல் தமிழ்நாட்டில் ஒலிக்க வேண்டும் என திட்டமிட்ட அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்றத் தலைவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.
ஆனால் இந்திய தேசியத்தில் பற்றுறுதியாக இருந்த தமிழக காங்கிரசு தலைவர்கள் மொழிப்பிரிவினை கோரிக்கைக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.
1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. சிதம்பரநாதன் வருவாய்த் துறை அமைச்சரானார்.
1948-ல் குமரி மாவட்டம் மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் பலியானார்கள். பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் என தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. நேசமணி தலைமையில் பீர்மேட்டுக்கே சென்ற போராட்டக்காரர்கள் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க கோஷமிட்டனர். மூணாறு பகுதியில் எஸ்.எஸ். சர்மா, குப்புசாமி, தேவியப்பன் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்தது.
1951-ம் ஆண்டு டிசம்பர் இறுதியிலும் 1952 ஜனவரியிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாராளுமன்றத் தேர்தலையும் மாநிலங்களின் தேர்தலையும் ஒருங்கிணைத்து நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் பாராளுமன்றத்தின் ஒரு தொகுதியாக தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் ஆகிய தமிழ் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பாராளுமன்றத் தொகுதியானது. அதில் போட்டியிட்ட மார்சல் நேசமணி மாபெரும் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரசும், கேரள காங்கிரசும் அதிர்ந்து போயின.
1954-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்சல் நேசமணி கட்சியை தோற்கடிக்க நேரு வகுத்த வியூகத்தையும் தாண்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நேரத்தில், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் மேலும் வலுவடைந்தன.
1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் எனப் பலரும் மூணாறுக்குச் சென்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதே போல் புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காரணமே தெரியாமல், சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனைக் கண்டித்து சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். மார்ஷல் நேசமணியின் தொடர்ச்சியான, திட்டமிட்ட செயல்பாடுகளால் விடுதலைத் தீ வேகமாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து வேகமெடுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் கிடுகிடுத்தது. மார்சல் நேசமணி மற்றும் அவரது தோழர்களின் போராட்ட வேகத்தைக் கண்ட திருவிதாங்கூர் அரசு 4.7.1954 அன்று மார்சல் நேசமணி, ஜனாப் அப்துல் ரசாக் முன்னாள் அமைச்சர் சிதம்பரநாதன் ஆகியோரைத் தேவிகுளத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யத் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகள் எங்கும் போராட்டம் நடைபெற்றது.
மார்சல் நேசமணி திருவிதாங்கூரில் நீதி கிடைக்காத காரணத்தால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்குகளைப் பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றி எல்லாருக்கும் ஜாமீன் வாங்கினார்.
அதைக்கடந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பட்டம் தாணுப்பிள்ளை அமைச்சரவையைக் கவிழ்த்தார்.
இதற்கு பிரஜாசோஸியலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான இராமசாமிப் பிள்ளை உற்ற துணைபுரிந்தார்.
இதற்கிடையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், 1955-ம் ஆண்டு நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்க குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956-ம் நவம்பர் 1-ம் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.
அப்போது, மார்சல் நேசமணியின் தொடர் போராட்டம் காரணமாக தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் நடந்தது. அதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு செங்கோட்டை தாலுகாவின் ஒரு பகுதி என நான்கரை தாலுகாக்கள் மட்டும்தான் கிடைத்தன.
இதனால் மார்சல் நேசமணி அவர்களுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. தேவிக்குளம், பீர்மேடு போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பல பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணை உள்ள அந்த அதிமுக்கிய தமிழர் வாழும் பகுதிகளை தாரைப் வார்ப்பதில் மார்சல் நேசமணி அவர்களுக்கு உடன்பாடு இல்லை . குறிப்பாக
தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், நெய்யாற்றின்கரை, பீர்மேடு, தேவிகுளம் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். அவற்றிற்காக தன்னுடைய அடுத்தகட்ட போராட்டங்களைக் கையில் எடுத்தார் மார்ஷன் நேசமணி. `இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் நாள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அவரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று.
1943-ம் ஆண்டு நாகர்கோவில் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1957 வரை நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அப்போதைய பிரதமர் நேருவால் பாராட்டப்பெற்றார்.
1967 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு நேசமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு தனது 73-வது வயதில் ஐயா மார்சல் நேசமணி காலமானார்.
கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் காலம் முதல் 1766 வரை குமரி மாவட்டம் தமிழக அரசர்களின் கீழ் இருந்து வந்தது. கி.பி.1766-இல் ஆர்க்காடு நவாப் இந்நிலப்பரப்பைக் கைப்பற்றி திருவிதாங்கூர் அரசனுக்கு வழங்கினார். அன்றிலிருந்து, 1956-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் இந்நிலப்பரப்பை மலையாள மொழியை அரசமொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இங்குள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க மலையாள ஆட்சியாளர்கள் இந்நிலப்பரப்பை மலையாள மயமாக்கினர்; தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். இதனை எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து போராடிய போராட்டமே, குமரித்தமிழர் விடுதலைப் போராட்டமாகும்.
இப்போராட்டம் 1823-இல் தோள்சீலைப் போராட்டத்தில் தொடங்கி 1836-இல் ஐயா வைகுண்டசாமி வழியாக தொடர்ந்து 1956-இல் மார்சல் நேசமணி வழியாக நிறைவு பெற்றது. 190 ஆண்டு கால அடிமை வாழ்க்கை 9 வருடங்களில் (1945-1956) 15 இலட்சம் குமரித் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தின் மூலம் நிறைவு பெற்றது. மார்சல் நேசமணித் தலைமையில் குமரித்தமிழர்கள் இதனைச் செய்து முடித்தனர். முதன் முதலாக குமரியை தமிழகத்துடன் இணைக்க வாதாடிய சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி. எஸ். மணி அவர்கள் ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.
அன்றைக்கு வட்டார கட்சியாக இருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி மிகச்சிறிய பலத்தினை கொண்டே குமரி மண்ணை தமிழகத்துடன் இணைப்பதில் வென்றது. அதேபோல் திருத்தணி, மதராசை வடவெல்லை காவலர் மா.பொ.சி மீட்டுத் தந்தார்.
இவர்களுக்கு பெரிய அரசியல் சக்திகளின் எவ்வித ஆதரவும் கிட்டவில்லை. கிட்டியிருந்தால் தமிழகம் பறிகொடுத்த இதர இடுக்கி, குடகு, சித்தூர் எல்லைப்பகுதிகளையும் மீட்டிருக்க முடியும். தேசிய கட்சியான காங்கிரசுதான் இந்திய உணர்வுடன் உதவ மறுத்தது என்றால் திராவிட கட்சிகளும் ஒரு துரும்பையும் எல்லை மீட்புக்கென கிள்ளி போட வில்லை.
நெல்லை நமது எல்லை, குமரி நமக்கு தொல்லை என்று அடுக்குமொழி பேசி நயவஞ்சக திராவிட பாசத்தோடு தமிழர் நிலப்பகுதிகளை தாரைவார்க்கத் துணிந்தனர்.
நிலமீட்பு என்றில்லை இனம், மொழி எந்த உரிமைப் போராட்டத்திலும் போராடி இறப்பது தமிழர்களாக இருப்பார்கள். நோகாமல் அந்த வெற்றியில் தம்மை இணைத்துகொண்டு வரலாற்று திரிபு வேலைகள் செய்வதை வழக்கமாகவே கொண்டிருந்தனர் திராவிடர்கள்.
தனி திராவிட நாடு கேட்டோம், தமிழ்நாடு தமிழருக்கே என்று முதன் முதலில் முழங்கினோம் என்றெல்லாம் மேடையில் வாய்கிழிய பேசும் இந்த திராவிட கட்சியினரிடம்
எல்லை மீட்பு போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன கேட்டுப்பாருங்கள் ஆதாரபூர்வமாக ஒரு பதிலும் கிடைக்காது. இவர்களை பொறுத்தவரை தமிழர்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். தமிழர்களை ஆள அதிகாரம் வேண்டும். தமிழர்களை அறியாமையில் வைத்து அடிமைப்படுத்தி ஆள வேண்டும். இவர்களைதான் தமிழ்சமுதாயமும் இன்னமும். நம்பிக்கொண்டிருக்கிறது.
இந்த திராவிட தலைவர்களை அறிந்த தமிழ் இளந்தலைமுறையினர் எத்தனை பேருக்கு ஐயா மார்சல் நேசமணி அவர்களை தெரியும்..?
தமிழ் தலைவர்கள் பற்றி அறிந்துவிடக் கூடாது என்றே திராவிட ஆட்சி காலத்தில் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
இன்றைக்கு நம்மால் எல்லைக்கப்பால் ஒரு அடி நிலத்தை வாங்கி விட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள் ?
1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை மார்சல் நேசமணி மற்றும் அவரது கட்சியினரையே சாரும். பக்கத்திலேயே திருவனந்தபுரம் இருந்தும் அதனை துச்சமென தூக்கி எறிந்துவிட்டு இனமான உணர்வுடன் தமிழகத்துடன் இணைந்தனர் தென்குமரித் தொன்தமிழர்கள்.
அவர்களின் ஈகமும் வீரமும் ஒப்பற்றது.
எல்லை மீட்பு என்பது மண் மீட்பு மட்டுமல்ல. மொழி மீட்பு. இன மீட்பு.
எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நிலம்.
எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்.
தமிழர் தாய் நிலத்தை மீட்டெடுத்த தென்னெல்லைக் காவலர் ஐயா மார்சல் நேசமணி அவர்களின் நினைவுநாளில் நாம் தமிழர் கட்சி அவரை பெருமையோடு நினைவுகூர்கிறது.