மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]

1085

செய்திக்குறிப்பு: மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை  | நாம் தமிழர் கட்சி

சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். புலமும், களமும், தமிழகத் தாயகமும் வலிமையற்று அதிகாரமற்றிருக்கக் கையறு நிலையில் நிற்கிற தமிழர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு, உள்ளத்தில் வன்மத்தை உரமேற்றிக் கொண்டு மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

மே 18 –  தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாகச் சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழ வேண்டிய காலக்கடமை உருவாகியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்றுத்தருணமிது.

கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனப்படுகொலை நாளை நினைவுகூற தமிழர்கள் யாவரும் தத்தம் வீடுகளிலேயே நினைவேந்தலை அனுசரிக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறைகூவல் விடுத்தார்.

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீமான் அவர்கள் எழுச்சிச் சுடரேற்றினார், கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முன்னதாக ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்குக்கூட வழியில்லா கொடிய வறுமை நிலையில் உப்புகூட இன்றி நம் உறவுகள் அல்லல்பட்ட அக்காலக்கட்டத்தில் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரும் உப்பில்லா கஞ்சியை அனைவரும் குடித்தனர்.

அதே போன்று உலகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் அவரவர் வீடுகளில் கட்சி அலுவலகங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து, எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

[WRGF id=95357]

இறுதியாக சீமான் எழுச்சியுரையாற்றியபோது,

இலக்கு ஒன்றுதான்! – எம் இனத்தின் விடுதலை! எங்கள் மாவீரர் சிந்திய குருதி! எங்கள் தாயகம் மீட்பது உறுதி! புரட்சி எப்போதும் வெல்லும்! – நாளை எம்மின விடுதலை அதைச் சொல்லும்! உறுதியாக நாங்கள் வெல்லுவோம்! – இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!. என்று முழங்கினார்

உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்க மீண்டெழுவோம் என்று உணர்ச்சி சூடேற்றினார்!

காணொளி:

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் திருவெறும்பூர் தொகுதி