தமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை

41

அறிக்கை: தமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை

தமிழகத்திலுள்ள கோயில்களின் நிர்வாகத்தை மத்தியத் தொல்லியல் துறை தன்வயப்படுத்த இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கனவே, தமிழர்களின் மெய்யியலையும், வழிபாட்டு முறைமைகளையும், தமிழ் இறைகளையும் ஆரியம் திருடித் தன்வயப்படுத்திக் கொண்டதை எதிர்த்து எதிர்ப்புரட்சி செய்து நாம் போராடிக் கொண்டிருக்கையில், தற்போது தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முனைவது பெருஞ்சினத்தையும், அறச்சீற்றத்தையும் தருகின்றது. மத்திய அரசின் இச்செயல்பாடு வன்மையானக் கண்டனத்திற்குரியது.

தமிழக கோயில்கள் என்பன வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல; அவைப் பண்பாட்டு அடையாளங்கள். வரலாற்றின் தொன்மைமிக்க தேசிய இனமான தமிழர் என்கின்ற இனத்தின் பெருமையை, முதுமையை, கட்டிடக்கலையை, பழங்காலத்திலேயே தமிழர்கள் பெற்றிருந்த பல்துறைசார்ந்த அறிவினை, அறிவியல் நுட்பத்தினை பறைசாற்றுகின்ற வரலாற்றுத்தடங்களாகும். ஏற்கனவே, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் தமிழர் தொன்மையை மறைக்கும் சதிவேலைகளை மத்திய அரசு செய்து வந்ததை தமிழினத்தின் அறிவுச்சமூகம் கடுமையாக எதிர்த்ததை இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அதேபோன்று, தமிழரின் தொன்மை பண்பாட்டு விழுமியங்களை மறைக்கின்ற, மாற்றுகின்ற, அழிக்கின்ற வேலையைத்தான் இந்த அறிவிப்பு செய்யப்போகிறதோ என்ற அச்சம் வெளிப்படையாக தமிழர்களிடையே எழுந்திருக்கிறது. தமிழ் மொழியின் தொன்மையை, இலக்கிய வளமையை மறைத்து சமஸ்கிருத மேலாதிக்கத்தை ஏற்படுத்துகிற வேலையை மத்திய அரசு பாடத்திட்டங்களில் திட்டமிட்டு செய்து வருகிற சூழலில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கீழே தமிழகக் கோவில்கள் செல்லும்பட்சத்தில் தமிழ் மொழிக்கு தமிழக கோயில்களில் எவ்வித இடமும் இல்லாத சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.

சாலைப்போக்குவரத்து, பாதுகாப்புத்துறை, வானூர்திப் போக்குவரத்து, பொதுத்துறை நிறுவனங்கள்,கல்வி, தண்ணீர் என யாவற்றையும் நிர்வகிக்க இயலாது தனியாரிடம் ஒப்படைத்து வரும் மத்திய அரசு கோயில்களை மட்டும் சிறப்பாக நிர்வகிக்கும் என நம்புவதைப் போன்றதொரு மடமைத்தனம் வேறில்லை. கோயில்களை மட்டும் சிறப்பாக நிர்வகிக்கும் பேராற்றல் மத்திய அரசுக்கு இருக்கிறதென்றால், முதலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றவற்றைத் தன்வயப்படுத்தி நிர்வகித்து பராமரித்துக் காட்டிவிட்டு தமிழகத்திற்கு வரலாம். அதனைச் செய்யத் துணிவிருக்கிறதா?

தமிழகக் கோயில்கள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையினரால்‌ நிர்வகிக்கப்பட்டு வரும் வேளையில் ‘ தமிழ் சமய அறநிலையத்துறை’ என அதனைப் பெயர்மாற்றம் செய்யக் கோரி நாம் போராடிக் கொண்டிருக்கையில் மத்தியத் தொல்லியல் துறை தமிழகக் கோயில்களின் பராமரிப்பையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பது தமிழகத்தின் தன்னுரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்காகும்.
தமிழக அறநிலையத்துறையினரின் பராமரிப்பில் குறைபாடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் மலிந்திருக்கலாம். அதற்காக அதனை மொத்தமாக மத்தியத் தொல்லியல் துறைக்குத் தாரைவார்க்க ஒருநாளும் அனுமதிக்க முடியாது. அது தமிழகத்தின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் மிகப்பெரும் உரிமை இழப்பாகும். மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவை வெளியிட்ட மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அதற்குத் தகுந்த காரணத்தையோ, உரிய விளக்கத்தினையோ தரமுயலவில்லை. போகிறபோக்கில் தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, மாநில உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு தமிழகம் பாதிக்கப்பட்டு நிற்கிற நிலையில் தற்போது கோயில்களின் கட்டுப்பாட்டையும் மத்திய அரசு தன்வயமாக்க முயல்வது ஏற்கவே முடியாத மிகப்பெரும் அநீதியாகும்.

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் வசம் சென்றால் இவ்வளவு நாட்களாக இயல்பாக நடந்தேறிய வழிபாடுகளும், மக்களின் வருகையும் இறுக்கம் மிகுந்ததாக மாற்றப்பட்டு அக்கோயில்களின் தனித்தன்மையும், சிறப்பம்சங்களும், பாரம்பரியப் பெருமைகளும் சிதைத்து அழிக்கப்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன. ஏற்கனவே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மத்திய அரசின் வசம் சென்று அதன் வழிபாடுகள் பாதிக்கப்பட்டு பெரும் அரசியல் அழுத்தங்களும், சட்டப் போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டே அதனை மீட்டுக்கொண்டு வர முடிந்தது. மத்திய தொல்லியல் துறை நிர்வகிக்கும் கோயில்களைவிட தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மத்தியத் தொல்லியல் துறை தமிழகக் கோயில்களை கையகப்படுத்த முனைவது தேவையற்ற ஒன்றாகும். இது தமிழகத்தின் தொன்மங்களைத் தன்வயப்படுத்தி சிதைத்தழிக்க முயலும் தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும். இதனை ஒருநாளும் இனமானத் தமிழர்கள் சகித்துக் கொள்ள முடியாது.

ஆகவே, தமிழகக் கோயில்களை கைக்கொள்ள நினைக்கும் தனது முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தையும், அத்துமீறலையும் எதிர்த்துத் தமிழகம் போர்க்களமாக மாறும் என எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி