குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் மீது தாக்குதல் – சீமான் கண்டனம்..

105

குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் மீது தாக்குதல் – சீமான் கண்டனம்..

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் கடந்த (03-03-20) அன்று செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அரசின் ஆதரவோடு டெல்லியில் போராடும் மக்கள் மீது தாக்குதல், ஊடவியலாளர்கள் மீது தாக்குதல் என்ற செய்திகள் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்பது பெருங்கவலையையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

சனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறை என்பது சாதாரண மனிதர்களின் பேச்சுச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் கட்டிக்காக்கும் வலிமைமிக்கப் படைப்பிரிவாகச் செயல்படுபவை. பத்திரிக்கை அலுவலகங்களின் மீதும், அலுவலர்கள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல் என்பது சனநாயத்தின் குரல்வளையை நெரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கச் செயலாகும். தொடரும் இதுமாதிரியான தாக்குதல்கள் கருத்துரிமைக்கு விடப்படும் சவால்கள்.

குமுதம் ரிப்போட்டர் இதழில் ஆளும் கட்சி அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் மீது இப்படி ஒரு கோரத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அச்செய்தியில் சம்பந்தப்பட்டவர்கள்தான் எனச் செய்தி வந்த சிறிது நாட்களுக்குள் இத்தாக்குதல் நடந்திருப்பதன் மூலம் அறியமுடிகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனையைப் பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக்கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து சிவகாசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளர் கார்த்தி விரைவில் மீண்டுவர வேண்டுமென எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திபேராசிரியர் அறிவரசனாரின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்டிருக்கிற மாபெரும் இழப்பு- சீமான் இரங்கல்.