திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதையும், திரையரங்கக் கட்டணங்கள் நிர்ணயிப்பதையும் தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

32

அறிக்கை: நலிவடைந்து நிற்கும் தமிழ்த்திரையுலகை மீட்டெடுக்க திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதையும், திரையரங்கக் கட்டணங்கள் நிர்ணயிப்பதையும் தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

திரைப்படங்கள் என்பவை கலையின் நவீன வடிவம்; கலைத்தாய் பெற்றெடுத்த அற்புதக்குழந்தை! கண்முன்னே காட்சிகளாய் யாவற்றையும் விரித்து விவரித்து எவருள்ளும் ஊடுருவி அசாத்தியத் தாக்கத்தை ஏற்படுத்தும் அளப்பெரும் சக்தி கொண்ட ஊடகம் திரைப்படங்கள். அத்திரைப்படங்களைப் பொழுதுபோக்கு என்கிற அளவிலேயே சுருங்கப் பாராது, பாட்டு, கூத்து, நாடகம் என்ற நிலையிலிருந்து பரிணமித்த கலையின் இன்னொரு வடிவம் என்றுதான் கொண்டாட வேண்டும். அத்திரைத்துறையையே முழுமையாகச் சார்ந்து, அவற்றைத் தமது வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. நேரடியாகப் பல்லாயிரக்கணக்கானோரையும், மறைமுகமாக பல இலட்சக்கணக்கானோரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் திரைத்துறை அண்மைக்காலமாக மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது.

சிறு, குறு முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கப் பெறாததும், மிகப்பெரியப் பொருட்செலவில் உருவாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்துவதும் இத்துறையின் முதன்மைச்சிக்கல்களாக இருக்கின்றன. தமிழ்த்திரைபடங்கள் அனுமதி இல்லாமல் இணையதளங்களில் வெளியாவதும், புதிய தமிழ்த்திரைப்படங்களின் குறுவட்டுகள் எளிதாகக் கிடைக்கப்பெறுவதும், திரையரங்கக் கட்டணங்கள் அதிகமாகயிருப்பதும் திரையரங்கிற்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்து திரைத்துறை நசிவதற்குக் காரணமாக அமைகின்றது.

ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன. அந்த படங்களைத் தவிர்த்து, இதரப் புதியத் தயாரிப்பாளர்கள், சிறு தயாரிப்பாளர்களின் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. சிறியப் பொருளாதாரத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாவதற்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. மேலும், பண்டிகைக்காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டுவிடுகின்றன. இதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500யைத் தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதன்விளைவாக, பல தயாரிப்பாளர்கள் தங்களின் சொத்துக்களை, வீடுகளை, உடைமைகளை இழந்து மிக மோசமானப் பொருளாதார சூழ்நிலையில் உள்ளனர். முன்னணி நடிகர் நடிக்கும் படங்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம்; மற்ற நடிகர்களின் படங்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியும் அவை செயலாக்கம் பெறவில்லை என்பது அத்துறையில் நிலவும் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. 200 முதல் 250 பேர் வரை அமரும் சிறிய திரையரங்குகள் மாநகராட்சிகளில் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டும் அது இன்னும் அமலுக்கு வந்தபாடில்லை. அது செயலாக்கம் பெற்றால் திரையரங்க ஒதுக்கீட்டுச்சிக்கல் ஓரளவு தீர் வாய்ப்புண்டு.

ஆனால், அதனைவிட திரையரங்குகளை முறைப்படுத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியதே அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.ஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப்படங்களில் இணையதளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், சிறு, குறு தயாரிப்பாளர்களின் திரைப்படங்களையும், சமூகக்கருத்துகளைக் கொண்ட தரமானப் படைப்புகளையும் அரசே ஏற்று வெளியிட வழிவகை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திதைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி