சென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

74

அறிக்கை: தற்கொலைக்குத் தூண்டப்பட்டு சென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்.
– சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதலாமாண்டு படித்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு நடக்கும் ஐந்தாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும். மாணவி ஃபாத்திமா லத்திஃப் மதிப்பெண் குறைவால்தான் தற்கொலை செய்துகொண்டார் எனத் தொடக்கத்தில் கூறப்பட்டாலும் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தற்போது வெளிவந்திருக்கும் ஆதாரங்களின் மூலம் தெரிய வந்திருக்கிறது. மதரீதியாக தொடுக்கப்பட்ட உளவியல் தாக்குதல்கள்தான் மாணவியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகியிருக்கிறது. ஃபாத்திமா லத்திஃப் பின் மரணத்திற்கு பேராசிரியர்கள் சுதர்சன், மிலிந்த் ப்ராமே, ஹேமச்சந்திர காரா ஆகியோர்தான் காரணம் என அவரது அலைபேசியின் வாயிலாகக் கண்டறிப்பட்டிருக்கிறது.

மாணவியின் தாயார், ‘நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு அணியக்கூட வேண்டாமென்றோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே?’ எனக் கதறுவது இந்தியாவின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் கேள்விக்குள்ளாக்கி இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ‘தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என நம்பித்தான் அனுப்பி வைத்தோம். இப்படி ஆகிவிட்டதே? ‘ எனப் புலம்பித் தவிக்கும் அவரது தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் எனப் புரியவில்லை.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து உயிரிழந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தி அவரது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே உயிரிழந்த மாணவர்களின் மரணம் குறித்து ஆய்வு செய்ய உரிய குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்ய மறுக்கும் பட்சத்தில், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாணவர்களைத் திரட்டி மாநில அளவில் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நீலகிரி-மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி