திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

129

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புக் கட்டிடம் திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் தொடர்ச்சியாக நிகழும் அடுத்தடுத்த கட்டிட விபத்துகள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி, தமிழ்நாடு அரசு அலட்சியமாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

மாநகரத்தை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தலைநகரத்திலிருந்த ஏழை மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தி நகருக்கு வெளியே தூக்கி எறிந்த திராவிட அரசுகள், தற்போது குடிசையிலிருந்தாலாவது மக்கள் உயிரோடு இருப்பார்கள், அடுக்குமாடிக் குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்களென அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டு மக்கள் புலம்புகின்ற அவலநிலைக்கு தள்ளியுள்ளது பெருங்கொடுமையாகும்.

கடந்த ஆண்டு சென்னை புளியந்தோப்புப் பகுதியிலிருந்த குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் உதிர்ந்து விழும் பலவீனமான நிலையில் இருந்தது, வெளிச்சத்திற்கு வந்த பிறகும் தமிழ்நாடு அரசு அதிலிருந்து எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே தற்போதைய திருவொற்றியூர் அடுக்கக விபத்து வெளிக்காட்டுகிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு இனியேனும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், விடுதிகள், அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், என அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்துக் கட்டிடப் பொறியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் முறையாக ஆய்வுசெய்ய வேண்டும். வல்லுநர்குழு வழங்கும் சான்றிதழ் அடிப்படையில் தகுதியற்ற கட்டிடங்களுக்கு மூடுமுத்திரை (சீல் ) வைப்பதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அக்கட்டிடங்களை இடிப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டுமெனவும், மக்களின் பாதுகாப்பில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், தற்போது இடிந்து விழுந்துள்ள திருவொற்றியூர் அடுக்ககத்தில், தங்கியிருந்த மக்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பான மாற்று வாழ்விடம் வழங்குவதோடு, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டுமெனவும், குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

முந்தைய செய்திஇஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்
அடுத்த செய்திஅறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)