எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்

9

அறிக்கை: அதிகாரப்பலத்தைக் கொண்டு தனது எதேச்சதிகாரப்போக்கின் மூலம் மராட்டியத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது மாபெரும் சனநாயகப்படுகொலை! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

நாடு முழுமைக்கும் காவிமயப்படுத்துவோம் எனும் பேராபத்துமிக்க இந்துத்துவ முழக்கத்தை முன்வைக்கிற மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சனநாயக மாண்புகளையும், சட்டநெறிகளையும் குலைத்து பணப்பேரத்தில் ஈடுபட்டு, அதிகார அத்துமீறலை அரங்கேற்றி ஆளுநரின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைப் பிடிக்கும் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது. மராட்டிய மாநிலத்தில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாதபோது ஆளுநர் மூலமாக குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு, தற்போது தேசியவாத காங்கிரசு கட்சியை ஒரே இரவில் பிளவுப்படுத்தி ஆட்சியைப் பிடித்திருப்பது அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். தனது எதேச்சதிகாரப்போக்கு மூலம் நாடு முழுமைக்கும் மாநிலக் கட்சிகளை அடக்கி ஒடுக்கி தனது ஆதிக்கத்தை மாநிலங்களில் நிலைநிறுத்த முயலும் பாஜக அரசு, அதற்காக அதிகார எல்லையை மீறுவதும், ஆளுநரைக் கொண்டு மாநில அரசுகளுக்குக் குடைச்சல் கொடுப்பதுமானப் போக்கு கொடுங்கோன்மையின் உச்சமாகும். சாதிய, மத உணர்ச்சிகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் எந்தவொரு இயக்கமும் சனநாயகத்தை ஒருநாளும் காக்காது என்பதற்கு இதுவே சான்றாகும்!

இத்தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவும், சிவசேனாவும் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவுமே எதிர்கொண்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றது. பாஜக – சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும் அதிகாரப்பகிர்வில் அவர்களுக்கு இடையே இருந்த முரண் காரணமாக ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால், வழமை போல அதிகாரத்தைக் கையிலெடுத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியப் பாஜக அரசு, தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தேவேந்திர பட்நாவிசை முதல்வராக்கியிருப்பது மக்களாட்சித் தத்துவத்தையே கேள்விக்குள்ளாயிருக்கிறது. எவ்வித சட்டநெறிமுறைகளுக்கும் உட்படாமல், சனநாயக விழுமியங்களைக் கட்டிக்காக்க முன்வராமல் ஆட்சியைப் பிடிப்பதற்காக பணப்பேரத்திலும், அதிகார மிரட்டலிலும் ஈடுபடும் பாசிச பாஜகவின் இப்போக்கு நாட்டின் சனநாயகக்கட்டுமானத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேராபத்து எனக் கண்டிப்பதோடு, மத்தியில் ஆளும் பாஜக அரசின் இக்கொடுங்கோல் போக்குக்கு எதிராக மாநிலக் கட்சிகள் அணிதிரள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி