திருவாரூர் தொகுதி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் ராம்கி அவர்களின் சகோதரி திருமதி.பவிதா அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி பவிதா அவர்கள் தனது இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த வாரம் 24 ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை ஈன்றெடுத்துள்ளார். குழந்தை எடை குறைவாக இருப்பதாகவும், இரத்தப் போக்கிற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று காரணம் கூறப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 29 ஆம் தேதியன்று மருவத்துவர்களின் அறிவுரையின்படி மாற்றப்பட்டுள்ளார்.
29 ஆம் தேதி காலை அவர் பூரணமாக உடல்நிலை தேறியுள்ளதாகவும், கருத்தடை மருந்தினை போட்டுக் கொண்டால் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறியதை நம்பி சகோதரியும் குடும்பத்தினரும் அந்த மருந்தினை எடுக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஊசியினை எடுத்துக் கொண்ட பின்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலும் அவரது 1 1/2 வயது ஆண் குழந்தையும், பிறந்த பெண் குழந்தையும் தாயினை இழந்துள்ளார்கள்.
செய்தியறிந்த நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனையினை கண்டித்து போராட்டம் நடத்தி காவல்துறை மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்கள்.
மருத்துவமனை நிர்வாகம் 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்,
நாம் தமிழர் கட்சி