மூணாறு நிலச்சரிவு: பெருந்துயரில் இருந்து மீண்டு வர துணைநிற்போம்! – சீமான்

81

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகவும், 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் அளிக்கிறது.

நிலச்சரிவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு குடியிருப்புகள் மண்ணில் புதையுண்டன என்றச் செய்தியும் அங்கு வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதும் நமது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இப்பேரிடரில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கேரள அரசு, இப்பெருந்துயரில் இருந்து மீண்டு வரவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் துணைநிற்க வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமை என்பதனை உணர்ந்து தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்திட முன்வரவேண்டும்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி