“முரசொலியாய் விகடனை மாற்றிவிடாதீர்கள்!” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்!

541

பேரன்பு கொண்டவர்க்கு.!

வணக்கம்.

உங்கள் மொழியில் சொல்வதென்றால் ஒரு தமிழ் நாஜியின் கடிதம்!

தேர்தல் முடிவுக்கு இரண்டு நாட்களே இருக்கின்றன. அதற்கு முன்பாகவே கதறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. அச்சத்தங்கள் சுப.வீ. தொடங்கி விகடன் வரை ஒரே தொனியில் ஒலிப்பதுதான் ஆச்சர்யம்! அதில் அவர்கள் சொல்ல வருகின்ற செய்திகள் இரண்டே இரண்டுதான்! ஒன்று, நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்கிறது. இன்னொன்று, நாம் தமிழர் கட்சியின் இவ்வளர்ச்சி மிக ஆபத்தானது!  இவ்விரண்டையும் மையப்படுத்தியே இக்குரல்கள் ஒலிக்கின்றன.

‘நாம் நாஜிக்கள் ஆகிவிடாதீர்கள் நாம் தமிழர்களே! – சீமான் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்’ எனும் தலைப்பில் விகடன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. முதலில் இக்கட்டுரையை எழுதிய அன்பிற்குரிய சக்திவேல் அவர்களுக்கு நன்றியும், அன்பும்! நீங்கள் வேண்டுமானால் என் பெயரைச் சொல்லத் தயங்கியிருக்கலாம். ஆனால், உங்கள் பெயரைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

நாம் தமிழர் கட்சி மீது வன்மமும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு இருட்டடிப்பு செய்து ஓரங்கட்ட நினைப்பவர்களுக்கு மத்தியில் பெருத்த அக்கறையோடு(!) ஒரு பதிவினை இட்டிருக்கிறீர்கள்! அதில் நான் ஹிட்லரது மொழியை மேற்கோள் காட்டி முகநூலில் இட்டப்பதிவை வைத்து தொடங்கி, அண்ணன் சீமான் அவர்களை இனவாதியாக உருவகப்படுத்த முயன்று தோற்றிருக்கிறீர்கள்!

எங்களை இனவாதிகள், இனவெறியர்கள், பாசிஸ்டுகள், பிரிவினைவாதிகள், நாஜிக்கள் என முத்திரை குத்துவதொன்றும் புதிதல்ல என்றாலும், அண்மைக்காலத்தில் இத்தகைய ஒரு கருத்துருவாக்கத்தை ஊடக வேடத்தில் இருக்கும் பலர் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். பி.பி.சி.யின் ஊடகவியலாளர் முரளிதரன் விஸ்வநாதன் அவர்கள், பாஜகவைவிட நாம் தமிழர் கட்சியால்தான் தமிழகத்திற்கு ஆபத்து எனக் கடந்தாண்டே முகநூலில் எழுதி திராவிடப் பாசத்தை வெளிக்காட்டினார். அப்போதே பதில் கொடுக்க நினைத்து, இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது.

இந்துத்துவப் பக்தர்கள் கூட்டம் எங்களைத் தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் என்கிறது. திராவிடப் பக்தர்கள் கூட்டம் எங்களை நாஜிக்கள், இனவாதிகள் என்கிறது. அவ்வளவே வேறுபாடு! ஆனால், இந்தத் தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் மதக்கலவரத்தை ஏற்படுத்தியதுமில்லை. அதில் அண்டா பிரியாணியை ஆட்டையைப் போட்டதுமில்லை. இந்த நாஜிக்கள் பிரியாணிக்காக கடைக்காரர் முகத்திலே குத்துவிட்டதுமில்லை. பார்லர் கடை பெண்ணை எட்டி நெஞ்சில் உதைத்ததுமில்லை. பஜ்ஜி முதல் 2ஜி வரை திருடியதாகப் எங்கும் பழியைச் சுமக்கவுமில்லை. சுரண்டல் பேர்வழியாக இருந்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சவுமில்லை. மாறாக, அன்னை நிலத்தின் மீது அக்கறை கொண்டு அப்பழுக்கற்றவர்களாக, மக்களின் நலனுக்காக எத்தகைய ஈகத்தையும் செய்யக்கூடியவர்களாக, மண்ணின் வளத்தைக் காக்கப் போராடிச் சிறைசெல்பவர்களாக இருக்கிறோம். மக்களும் அதனை உணர்ந்து தெளிந்திருக்கிறார்கள்.

உலகில் எந்த நாஜிக்களாவது மரம் நட்டிருக்கிறார்களா? பனையை விதைத்திருக்கிறார்களா? காக்கைக்கும், குருவிக்கும், குரங்குக்கும் தண்ணீர் வைத்து அவற்றைக் காத்திருக்கிறார்களா?  ஆனால், இந்த நாஜிக்கள் செய்திருக்கிறோம். தங்களது தலைவர்களின் பிறந்த நாளில் மரம் வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரே குழியில் பல வருடங்களாகச் செடிகளை நட்டக் கட்சியினருக்கு மத்தியில் ஒரே நாளில் இரண்டு இலட்சம் பனை விதைகளை நட்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பாசறையினைத் தமிழகம் முழுவதும் கட்டியமைத்து, செடிகள் வளர்ப்பினையும், விதைகள் சேகரிப்பினையும் போதித்திருக்கிறோம். நடந்து முடிந்த சூலூர் இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக, அதிமுகவின் உத்தமப்புருசர்கள் யாவரும் காசு கொடுத்து வாக்குக் கேட்டார்கள். மரக்கன்று கொடுத்து வாக்குக் கேட்டார்கள் நாம் தமிழர் கட்சியின் நாஜிக்கள். இந்தியாவில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக் கட்சியாவது சுற்றுச்சூழலுக்கென்று பாசறை கட்டி, பல்லுயிர்ப்பெருக்கத்தை பன்மடங்காகப் பெருக்க வழிவகை செய்திருக்கிறதா? ஆனால், இந்த நாஜிக்கள் அதனைச் செய்திருக்கிறோம்.

கட்டப்பஞ்சாயத்தும், ரௌடிசமும், கொள்ளையடித்தலுமே அரசியலென மாற்றி நிறுத்தியிருக்கிற திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் நீட்சியாய் முகிழ்த்திட்டவை திருமங்கலம் பார்முலாவும், ஸ்ரீரங்கம் பார்முலாவும், ஆர்.கே.நகர் பார்முலாவும். அக்கட்சிகள் பணத்தை வாரி இறைத்து, டோக்கனை வீட்டுக்கு வீடு கொடுத்து வாக்கைப் பறிக்க முயன்றபோது வீதிவீதியாய் நின்று மண்புழுவின் மகத்துவத்தையும், சிட்டுக்குருவியின் அழிவையும், பல்லுயிர்ப்பெருக்கத்தின் தேவையையும் போதித்தது இந்த  நாஜிக்கள்தான்! தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், ‘மொட்டை மாடியில் தண்ணீர் வையுங்கள்! நாம் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிப் பருகுவோம். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டுவும், சிங்கமும், புலியும் என்ன செய்யும்? அவைகள் இல்லாவிட்டால் நாம் எப்படி வாழ்வோம்?’ என்று கேட்டது இந்த நாஜிக்கள்தான்!

அரசியலென்பதையே அப்பன் வீட்டு சொத்தாக மாற்றி நிறுத்திய திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் அன்றாடங்காய்ச்சிகளும், தினக்கூலிகளின் வாரிசுகளும், வேளாண் குடிமக்களின் பிள்ளைகளும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் நிற்கலாம் என்கிற நம்பிக்கையை விதைத்தது இந்த நாஜிக்கள்தான்! ‘தலைமைக்கு எவ்வளவு கோடி கொடுப்பாய்? தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்? பக்கத்து தொகுதியின் செலவையும் பார்த்துக் கொள்ள முடியுமா?’ எனக் கேள்விகள் மூலம் பதம் பார்த்து, பணம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிற திராவிடத் தலைவர்களுக்கு மத்தியில், ‘தேர்தலில் நிற்க எதுக்குடா காசு? துண்டறிக்கை அடிச்சுத் தரேன். நீ மக்கள்கிட்ட போய் கருத்தச் சொல்லி ஓட்டு கேளு. டீ கடை பெஞ்சை போட்டு அதுல ஒலி வாங்கியைக் கட்டி வை. நான் வந்து பேசுறேன்’ என நம்பிக்கையைக் கொடுத்து அடித்தட்டு வர்க்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டு வர எத்தனித்தது சீமான் எனும் தமிழ் நாஜிதான்! அரசியலை முதலீடற்ற தொழிலெனப் பார்த்துப் பழகிய தமிழக அரசியல் களத்திற்குள், ‘அரசியல் என்பது ஒரு வாழ்வியல். தேர்தல் என்பது வாக்கை விற்கிற சந்தை அல்ல. ஐந்தாண்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சிந்தை’ எனக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது இந்த நாஜிக்கள்தான்.

‘நீங்களெல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது’ என விடுதலைச்சிறுத்தைகளை எச்சரித்து திருமாவையே தனித்தொகுதிக்குத் தள்ளிய கருணாநிதியினுடைய வாரிசுகள் உலவுகிற தமிழக அரசியல் களத்தில், பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, ‘ஒரு தமிழனை வேட்பாளராக நிறுத்துகிறேன். இவனைத் தமிழனாகப் பார்த்தால் ஓட்டு போடு. சாதியாகப் பார்த்தால் போடாதே. அந்த ஓட்டு எனக்குத் தீட்டு’ எனப் பார்ப்பனியத்தின் குழந்தையான சாதிக்குச் சம்மட்டி அடி கொடுத்தது  சீமான் எனும் நாஜிதான்!

 ‘அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானத் தேவையும், அதனை நிறைவுசெய்யும் சேவையும்’ என்கிற முழக்கத்தை முன்வைத்து, ‘இப்பூவுலகு அனைத்து உயிர்களுக்குமானது. அதனை மனிதர்கள் மட்டும் தின்று தீர்ப்பதை ஏற்க முடியாது. அடுத்தத் தலைமுறைக்கு இதனைப் பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டும்’ என்று சூழலியம் பேசியது சீமான் எனும் நாஜிதான்!

 ‘நீ ஒரு ஈனப்பிறவி!’, ‘நீ ஒரு விஷப்புழு’ என எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் பரஸ்பரம் நஞ்சை உமிழ்ந்து கொண்டிருக்கையில்,மறைநீரைப் பற்றியும் மண்புழுவைப் பற்றியும், மகரந்தச்சேர்க்கைப் பற்றியும் பாடமெடுத்துக் கொண்டிருந்தது சீமான் எனும் நாஜிதான்!

வேறு என்ன சொல்ல? ஆடை கட்டாத ஊரில் ஆடைகட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல, பணம் மீதும், பதவி மீதும் வெறிபிடித்து, மோகம் கொண்டு திரிபவர்கள் மத்தியில் மண் மீதும், மக்கள் மீதும் வெறி கொண்டு அவற்றைக் காக்கவும், மீட்கவும் துடிப்பவன் நாஜியென்றால் இருந்தால் நாங்கள் சத்தியமாக நாஜிக்கள்தானாகத் தெரிவோம்.

வெளிப்படையாகச் சொன்னால், எங்களை நாஜிக்கள், இனவெறி பிடித்தவர்கள் எனக் கருத்துருவாக்கம் செய்பவர்களின் நுட்பமான நோக்கம்நாம் தமிழர் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியினை மட்டுப்படுத்தி மடைமாற்றிவிட வேண்டும் என்பதும், மக்களிடமிருந்து சீமானைத் தனிமைப்படுத்திவிட வேண்டும் என்பதும்தான். தற்காலத்தில் தமிழர்கள் இனஉணர்வு பெற்று எழுந்து வருவதும், தங்களது அரசியல் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அவர்கள் காட்டுகிற முனைப்பும், சமூகத் தாக்கமுமே இத்தகைய அடங்கா காழ்ப்புணர்ச்சியை உங்களுக்குத் தந்திருக்கிறது என்பதை நன்கு அறிவோம். அதனாலேயே, தமிழர்களின் இன உணர்வினை இனவாதமென்று கூறி, இனவாதமும், மதவாதமும் வேறில்லையெனக் கூறி நாஜிக்களாக கட்டமைக்க நிந்திக்கிறீர்கள் என்பதை அறியாமலிருக்க நாங்கள் என்ன துண்டுச்சீட்டுப் பேர்வழிகளா? மொழியையும், இனத்தையும், சாதியோடும், மதத்தோடும் ஒப்பீடு செய்து எங்களை நாஜிக்கள் என நிறுவ முற்படுவது உங்களது மதியின்மையால் விளைந்த வெற்றுப் புலம்பல் இல்லையா? அபத்தக்கூச்சல் இல்லையா?

இங்கு மொழிவாரியாகத்தானே மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. மொழிப்போரில்தானே நடராசனும், தாளமுத்துவும் ஈகம் செய்திட்டார்கள். அந்த மொழியை அடையாளமாகக் கொள்வதில் என்ன பிழை? அது எப்படி இனவாதமாகும்? அந்தந்த மொழியின், அந்தந்த நிலத்தின் மக்களை அவர்களே ஆள வேண்டும் என்பதுதானே தார்மீகம்? அறம்? நீதி? நியதி?  ‘வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது’ என்று கூறி தன்னாட்சி முழக்கத்தை அண்ணா எழுப்பியபோது அதற்குச் சிலாகித்து சிரம் தாழ்த்திவிட்டு,’தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று பெரியார் பொங்கியபோது மெய்சிலிர்த்து ஆதரித்துவிட்டு, ‘தமிழர்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சீமான் தன்னாட்சியைக் கேட்கிறபோது மட்டும் நீங்கள் இனவாதமெனச் பொறுமுவது ஏன்?

இரண்டு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் கடந்துவிட்டது. அப்படுகொலைக்கு இன்னும் நீதியும் கிடைக்கவில்லை. பறிபோன நிலமும் மீட்கப்படவில்லை. எங்கள் அக்கா இசைப்பிரியாவும், எங்கள் தம்பி பாலச்சந்திரனும் எங்கள் கண்களைவிட்டு அகலாது மனக்கண்ணில் நிற்கிறார்கள். எங்கள் உறவுகளின் மரண ஓலம் இன்னும் எங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. எம்மின மக்களின் இரத்தச்சகதியும், பிணவாடையும் இன்னும் எங்கள் நாசிகளில் ஏறிக்கொண்டு தானிருக்கிறது. எம்மினப் படுகொலை மனதில் இன்னும் இரணமாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. வஞ்சம் தீர்க்கம் நெஞ்சம் பற்றியெரிகிறது. ஆனாலும், சிங்கள மக்களைக் கொலை செய்ய வேண்டும் என்றோ, சிங்கள மக்களைத் தாக்க வேண்டும் என்றோ நாங்கள் கோரவில்லை. எங்கள் ஈழ நாட்டை கேட்டு நிற்கிறோம். அந்தப்படுகொலைக்கு நீதிகேட்டு நிற்கிறோம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று உலகையே உறவெனக் கொண்டிருந்தவர்களை ஒட்டுமொத்த உலகும் கைவிட்டு அகதிகளாகவும், அநாதைகளாகவும் மாற்றியதை மறந்துவிடச் சொல்கிறீர்களா? என்று மன்றாடுகிறோம். ஆனால், நீங்கள் தமிழ்த்தேசிய இனத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பழிசுமத்தி, கங்கணம் கட்டிக் கொண்டு சிங்களப் பேரினவாதமும், இந்திய வல்லாதிக்கமும், உலக நாடுகளும் அழித்து முடித்த இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலையை எளிதாகக் கடத்திவிடச் சொல்கிறீர்கள்! அதனைப் பேசுவோரை ஈழத்தை வைத்துப் பிழைக்கிறார்கள் என ஏகடியம் செய்கிறீர்கள்!

மனச்சான்றோடு சொல்லுங்கள்.!

அந்த இனப்படுகொலையைப் பேசி நீதிகேட்கிற நாங்கள் நாஜிக்கள்? இனவாதிகள்? ராஜபக்சேவுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்படுகொலையை செய்து முடித்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், அவர்களுக்கு ஒத்து ஊதிய கருணாநிதியும் மனிதப் புனிதர்களா?

இந்திரா காந்தி மரணத்தைக் காரணம் காட்டி சீக்கியர்களைக் கொன்று குவித்த, ராஜீவ் காந்தி மரணத்தைக் காரணம் காட்டி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்று குவிக்க அத்தனை உதவிகளையும் செய்திட்ட சோனியா காந்தி அன்னை தெரசாவாகவும், ராகுல் காந்தி மகாத்மா காந்தியாகவும் உங்கள் கண்களுக்கு தெரிகிறார்கள். சீமானும், அவர் தம்பிகளும்தான் நாஜிக்களாகத் தெரிகிறார்கள். அப்படித்தானே?

ஈழ நிலத்தில் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்தபோதும் சலனமற்று நின்றவர்கள், ‘மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை’ என எங்கள் சாவின்போதும் நாவில் ஈரமில்லாது பேசியவர்கள், ‘சங்க இலக்கியத்தில் ஒரு தெருவில் இழவுச்சத்தம் கேட்கிறபோது மறு தெருவில் மங்கள இசை கேட்டிருக்கிறது’ என எம்மினச் சாவை ஏளனம் செய்தவர்கள், முத்துக்குமார் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட ஈகிகளின் சாவையும், அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் மறைத்து, ஈழம் என்ற சொல்லுக்கே தடைபோட்டு ராஜபக்சேவுக்கு ராஜவிஸ்வாசம் காட்டியவர்கள் யாவரும் மனிதப்புனிதர்கள்! மானுடப்பற்றாளர்கள்! சீமானும், அவரது தம்பிகளும்தான் நாஜிக்களா?

கீழ்வெண்மணியில் கூலித்தொழிலாளர்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டதை வேடிக்கைப் பார்த்தவர்கள், தாமிரபரணி தோட்டத் தொழிலாளர்களைப் படுகொலை செய்திட்டவர்கள், பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொலைசெய்திட்டவர்கள், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி மண்ணின் மக்களைக் கொன்று குவித்தவர்கள் என நீளும் இக்கொலைகளைச் செய்திட்டவர்கள் யாரும் உங்கள் கண்களுக்கு நாஜியாகத் தெரியவில்லை? பதவிவெறிக்காக மக்கள் உயிரை துச்சமெனக் கருதி கொன்று குவித்த திமுகவும், அதிமுகவும் நாஜி அமைப்புகளாக மாறி நிற்பது உங்கள் கண்களை உறுத்தவில்லை? நாம் தமிழர் கட்சிதான் நாஜியாக தெரிகிறதா.?

சரி! இந்த தமிழ் நாஜிக்கள் செய்த கொலைகள் எத்தனை? இந்த நாஜிக்களால் தமிழ் மக்களுக்கு விளைந்த கேடுகள் எத்தனை? ஒன்றைச் சொல்ல முடியுமா? பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து மூன்று பேரை எரித்துக் கொன்றோமா? நடைபயிற்சிக்குச் சென்ற தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றோமா? மக்கள் உரிமைக்காகப் போராடிய மதுரை லீலாவதியை வெட்டி வீதியில் போட்டோமா? அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சா போன்றவர்களை மர்மமாகச் சாகடித்தோமா? என்ன செய்தோம்? இது யாவற்றையும் செய்பவர்களை எதிர்த்து அரசியல் செய்கிறோம். அதனால்தான், நாங்கள் நாஜிக்கள்.

எங்களை நாஜிக்கள் என்கிறீர்களே? இந்த நாஜிக்கள் எத்தனை மாற்று மொழி மக்களைத் தாக்கியிருக்கிறோம்? சொல்லுங்கள்! எத்தனைப் படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறோம்? விரல்விட்டு எண்ணுங்கள்! ஒன்றுமில்லையே! ஆந்திரக் காட்டுக்குள் எங்கள் தமிழர்களைக் காக்கைக் குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளியபோதும், இங்கு வாழும் தெலுங்கர்கள் பாதுகாப்பாகத்தானே இருந்தார்கள்! இருக்கிறார்கள்! கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கி, வணிக வளாகங்களை நொறுக்கி, பேருந்துகளைக் கொளுத்தியபோதும் தமிழகத்தில் கன்னடர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள்! முல்லைப்பெரியாறு நீரை மறுத்துத் தமிழர்களை மலையாளிகள் தாக்கியபோதும் இங்கு சேட்டன் கடைகளுக்கு சேதம் இல்லாதுதானே இருந்தது! சிங்களக் காடையர் கூட்டம் எம்மினத்தை அழித்து முடித்தபோதும், தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாகத்தானே உலவித்திரிகிறார்கள்! எங்கள் விரல் நகம்கூட மாற்று இனத்தாரை கிழித்ததில்லையே! மாற்று மொழி பேசும் மக்களை சகத் தேசிய இனமக்கள், சகோதரர்கள் என்றுதானே ஆரத்தழுவுகிறோம்! ஆனாலும், உங்களுக்கு நாங்கள் நாஜிக்கள்!

நாம் தமிழர் கட்சியில் மாநிலப் பொறுப்பிலும், மாவட்டப் பொறுப்பிலும், ஏன்? வேட்பாளர்களாகவுமே மாற்று இனத்தைச் சேர்ந்த மக்கள் இருக்கிறார்களே, நாங்கள் நாஜிக்கள், இனவாதிகளென்றால் அவர்கள் எவ்வாறு எங்களோடு இணைந்தார்கள்? அவர்களெல்லாம் எமது அரசியலின்பால் உள்ள அறத்தை, எங்களது முழக்கத்தின் மீதுள்ள தார்மீக நியாயத்தை உணர்ந்து நிற்கிறபோது உங்களுக்கு மட்டும் நாங்கள் நாஜிக்களாகவும், இனவெறியர்களாகவும் தெரிவது ஏன்?

பத்தாண்டு காலமாக காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் அணு உலை, தூத்துக்குடி படுகொலை, மீனவர் படுகொலை, ஆந்திராவில் தமிழர் படுகொலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு எனத் தமிழகத்தைப் பாதித்த அத்தனை சிக்கல்களிலும், வாழ்வாதார உரிமைகளிலும் மக்களோடு களத்தில் நின்று அதற்கெதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். ஓகிப் புயலில் மீனவ மக்களை இந்தியா கைவிட்டதை ஐ.நா.சபைக்குக் கொண்டு சென்று உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பேசியிருக்கிறோம். நீட் தேர்வில் அனிதாவுக்கு இழைக்கப்பட்ட நீதியை ஐ.நா.வில் முறையிட்டிருக்கிறோம். தானே புயல், கஜா புயல், ஓகி புயல், சென்னை பெருவெள்ளம் என மக்கள் துயருற்று நின்ற காலத்தில் பல நாட்கள் இரவு பகலாக களத்தில் நின்று மக்கள் பணியாற்றியிருக்கிறோம். அவர்களின் பசியாற்றியிருக்கிறோம். கஜா புயலின்போது ஆளுங்கட்சி அமைதிகாக்க, எதிர்க்கட்சி திமுக ஒரு கோடியினைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள 10 கோடிக்கும் மேலான துயர்துடைப்புப்பணிகளை உலகத்தமிழர்களின் உதவியோடு மக்களுக்குச் செய்து, அவர்கள் மீண்டுவர துணைநின்றிருக்கிறோம். ஆனாலும், எங்களுக்குப் பெயர் நாஜிக்கள். நாங்கள் செய்தப் பெரும்பணிகளை ஒருநாளும் பேச மாட்டீர்கள்! கடைசிவரை ஆமைக்கறி, அரிசிக்கப்பல் என்கிற சிறுபிள்ளைத்தனமான விமர்சனத்தோடு நின்றுகொள்வீர்கள்! அதுதானே உங்கள் தரம்!

எந்த நாஜிக்கள் பெண்களைப் போற்றினார்கள்? பெண்ணுரிமையைக் களத்தில் செயற்படுத்தினார்கள்? ஆனால், நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்புத் தந்தோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் 50 விழுக்காட்டு வாய்ப்பினை வழங்கவிருக்கிறோம். 2016 – சட்டமன்றத் தேர்தலில் திருநங்கை அக்கா தேவிக்கு வாய்ப்புத் தந்தோம். ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டச் சமூகங்களான குயவர்கள், நாவிதர்கள், சலவைத்தொழிலாளிகள் யாவரையும் தேடிப்பிடித்து அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தோம். இவற்றையெல்லாம் சொல்லிப் பெருமைப்பட ஏதுமில்லை. சமூகக்கடமை செய்தோம் என்பதோடு நின்றுகொண்டோம். ஆனாலும், நாங்கள் நாஜிக்கள்.

ஏனென்றால், ‘அடக்க முடியாத கோபத்தை உன் ஆழ்மனதினுள் தேக்கி வை. ஒரு காலம் வரும். ஒருவனையும் விடாதே. மொத்தமாய் கருவறு’ என்ற ஹிட்லரின் கூற்றை மேற்கோள் காட்டி நான் முகநூலில் எழுதியதை அடிப்படையாக வைத்துதான் அந்தக் கட்டுரையையே தீட்டியிருக்கிறீர்கள். இதில் ஹிட்லரை எப்படி மேற்கோள் காட்டலாம்? என்பதுதான் உங்கள் வாதம்.

மனித உயிர்களை மலிவெனக் கருதி அவற்றைப் போக்கியவர்களும், இனத்தைப் பிணமாக்கிக் கொன்று குவித்தவர்களும் உங்களுக்கு நாஜியாகத் தெரியாமல் ஹிட்லரின் நான்கு வரி கூற்றை மேற்கோள் காட்டியதற்காக நாங்கள் நாஜியாகத் தெரிகிறோமா?

ஹிட்லரின் கூற்றை முன்வைத்து, கருவறுத்தல் என்பதன் மூலம் குஜராத்தில் மோடி கர்ப்பிணிப்பெண்ணின் சிசுவை எடுத்துக் கொன்றது போல, நாம் தமிழர் கட்சியினர் கருவைக் கொல்வார்கள் என நஞ்சைக் கக்குகிறீர்கள். அதனால், இவர்கள் நாஜிக்கள். மோடியைப் போன்றவர்கள் என்று அங்கலாய்க்கத் தொடங்கியிருக்கிறீர்கள்.

‘அந்த அரசியல் பிரமுகரைப் பலிகடா ஆக்குவார்கள்’ என்று கூறுகிறோம். அப்படியென்றால், ஆட்டினைப் போல அவர் மீது மஞ்சள் நீர் தெளித்து அவரைப் பலியிடுவார்கள் என்ற பொருளில் எடுத்துக் கொள்ள முடியுமா? அவ்வாறு எடுத்துக் கொண்டால் அது எவ்வளவு மடமை? அறிவிலித்தனம்? அதேபோலத்தான் இதுவும். கருவறுத்தல் என்றால், அதிகாரத்திமிரைக் கருவறுத்தல். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும், அநீதியையும் கருவறுத்தல் என்றுதான் பொருள்படும். அதனைப்புரிந்து கொள்ளாது, அவ்வார்த்தைக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து, புடவை சுற்றியிருக்கிறீர்களே கட்டுரையாளரே? அதனைப் போல அண்ணன் சீமான் அவர்கள் பேசுகிறபோது, ‘என் கைகளில் அதிகாரம் கிடைத்தால் செத்துவிடுவீர்கள்’ என்று கூறினாராம். அந்த வார்த்தையையும் பிடித்து தொங்கு தொங்கென்று தொங்கி நாஜிக்கள் என நிறுவப் படாதபாடுபடுகிறீர்கள்! ஐயோ பாவம்! உங்களது பிரயத்தனங்கள் யாவும் பிரயோசனமற்று போகிறது.

கருவறுப்போம் என்று முடிகிற அந்த மேற்கோளை சொன்னது ஹிட்லர் என்றில்லை, ஹிட்லர் மீசை வைத்த நகைச்சுவை மாமன்னன் சார்லி சாப்ளின் கூறியிருந்தாலும் நாங்கள் மேற்கோள் காட்டியிருப்போம். ஏனென்றால், அந்த வரிகள் எங்களுக்கானது. தாய் நிலத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டப் பின்னரும் வெறிகொண்டு, வன்மம்கொண்டு தனக்கென ஒரு நாட்டினை யூதர்கள் கட்டியெழுப்பியது போல, இத்தலைமுறைப் பிள்ளைகள் எங்களுக்கு ஒரு வரலாற்றுப் பெருங்கடமை கையளிக்கப்பட்டிருக்கிறது. எமது இனத்தின் சாவைக் கண்ட தலைமுறையினர் நாங்கள், யூதர்கள் போல பல தலைமுறைகளுக்கு அப்பால் அல்ல, இத்தலைமுறையிலேயே எங்கள் தாய் நாட்டை நாங்கள் அடைய நினைக்கிறோம். அதற்கு எங்களுக்கு வன்மமும், வெறியும் தேவைப்படுகிறது. அதற்கு இந்த வார்த்தைகள் உதவுகிறது. உசுப்பேற்றுகிறது. ஆகவே, அதனைப் பதிவு செய்தோம். அதனைப் பதிவு செய்ததாலேயே, ஹிட்லர் செய்த இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறோம் என்றோ, ஹிட்லரைப் போல இனப்படுகொலை செய்வார்கள் என்றோ எண்ணுவீர்களென்றால் கொஞ்சம் உங்கள் கற்பனைக்குதிரைக்குக் கடிவாளம் போடுங்கள்!

இதுமட்டுமல்லாது, அன்பான சர்வாதிகாரம் என்கிற வார்த்தையையும் பிடித்துக் கொள்கிறீர்கள். சீமான் தன்னை சர்வாதிகாரி எனக் கூறிக் கொள்கிறார். அதனால், அவர் நாஜிதான் என நிறுவ முயல்கிறீர்கள். பலமுறை அன்பான சர்வாதிகாரம் என்கிற சொல்லாடலுக்கு விரிவான விளக்கம் கொடுத்தாகிவிட்டது. ஆனாலும், சில மண்டைகளுக்குள் அது ஏறுவதே இல்லை. என்ன செய்ய? மீண்டும் ஒருமுறை விளக்குகிறோம். ஹிட்லரும், முசோலினியும், இடியமீனும், மோடியும் செய்தது கொடுங்கோன்மை. ஆனால், லீகுவான்யூவும், காமராசரும் செய்தது தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம். தலைக்கு ஹெல்மெட்டை அணியுங்கள் என்று நீதிமன்றம் மக்களை அறிவுறுத்துவதும், தாய் தன் பிள்ளையை அதட்டி சோறூட்டுவதும் தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம். அதனைத்தான் எமது ஆட்சிமுறை என்கிறோம். உதாரணமாக, EXTREMIST என்பதைக் குறிக்கத் தீவிரவாதி என்று கூறினால், அதனை TERRORIST எனப் பொருள் கொள்ளுதல் எவ்வளவு பிழையானதோ அதனைப் போலத்தான் சர்வாதிகாரம் என்பதற்கு அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பிதற்றுவதும்!

நாம் தமிழரை சீர்திருத்த அமைப்பாக ஏற்க முடியாது என்கிறீர்கள். பொதுத்தொகுதியில் ஆதித்தமிழ் குடிகளுக்கு வாய்ப்பு, 50 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்பு, திருநங்கைக்கு வாய்ப்பு, உழைக்கும் மக்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு, வேளாண் குடிகளுக்கு வாய்ப்பு என இவற்றையெல்லாம் செய்தது சமூகச் சீர்திருத்தத்தில் வராதா அன்பரே? உதயசூரியன் சின்னத்தில் உதயநிதியை நிற்கச் செய்யப் போகிற அரசியல்தான் சமூகச் சீர்திருத்தமா?  பணமே பிரதானமாக மாறிப்போய் பாழ்பட்டுப் போன இக்குற்றச்சமூகத்தில் பணமில்லாது அரசியல் செய்ய முடியும்; கருத்துகளைச் சொல்லி வாக்குகளைப் பெற முடியும் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்தது சமூகச் சீர்திருத்தம் இல்லையா நண்பரே.?

பண்பாட்டு மீட்பு முப்பாட்டன் முருகன் என்பதோடு நின்றுவிடுகிறதே, எனக் கூறுகிறீர்கள். குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனை மட்டுமல்ல முல்லை, மருதம், நெய்தல், பாலை என மற்ற நிலங்களில் வாழ்ந்த முன்னோர்களையும் கொண்டாடுகிறோம். குலதெய்வங்களை மீட்டெடுக்கக் கிராமப்பூசாரி மாநாட்டையும் நடத்திக் காட்டியிருக்கிறோம். தேவாரமும், திருவாசகமும் ஓதி, பறை அடித்து, தமிழின் முதல் எழுத்தான ‘அ’ வை தாலியாக அணிவித்து திருமணம் செய்கிற பண்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறோம். இதுவெல்லாம் பண்பாட்டு மீட்பாக தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு? பகுத்தறிவு இயக்கம் எனக் கூறிக் கொண்டு, புறவாசல் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரிடம் மனைவியை அனுப்பி ஆசி வாங்க வைத்து, ஜெகத்ரட்சகன் மூலம் அறிக்கை விடுத்து வைரமுத்துவை எச்சரிக்கை செய்த ஸ்டாலின் செய்ததுதான் பண்பாட்டுப் புரட்சியோ?

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதை கொள்கை முழக்கமாக மட்டுமல்லாது அரசியல் முழக்கமாக பெரியார் வைத்தாராம். அந்நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாம் தமிழர் கட்சி அஞ்சுகிறதாம். பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொன்ன கதையாக இருக்கிறது. அரசியலில் வென்றாலும், வீழ்ந்தாலும் எங்கள் தத்துவங்களில் தடம்பிறழ்வோ, முன்வைத்த முழக்கங்களில் பின்நகர்வோ இருந்ததுமில்லை; இருக்கப் போவதில்லை. அதனால்தான், பத்தாண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கியபோது கூறியதுபோலவே,’தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்’ என்கிற கொள்கை முழக்கத்தை முன்வைத்து தனித்தே களம் காண்கிறோம்.ஏனென்றால், எங்களது பயணமும், பாதையும், தத்துவமும் தனித்துவமானது.

மாநில சுயாட்சிக்கென்று ஏற்கனவே கட்சி இருக்கிறதே? அப்புறம் எதற்கு நீங்கள்? என்று திருமா கேட்டதை மேற்கோள் காட்டுகிறீர்கள்!. விகடனில்தான் ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்களே நீங்கள் எதற்காக இணைந்தீர்கள்? என்று கேட்டால் எத்தகைய அபத்தமோ அத்தகையதுதான் இது! மாநிலத் தன்னாட்சி முழக்கத்தை உண்மையிலேயே திமுக கடைபிடித்திருக்கிறதா? கச்சத்தீவு யார் ஆட்சியில் பறிபோனது? கல்வி இன்னும் மாநிலப் பட்டியலில் ஏன் கொண்டுவரப்படவில்லை? பத்தாண்டுகளுக்கு மேலாக மத்தியில் அங்கம் வைத்து விரும்பிய துறைகளையெல்லாம் கேட்டுப் பெற்ற திமுக இவற்றையெல்லாம் ஏன் சாதித்துக் காட்டவில்லை? தேர்தல் அறிக்கையிலும், வலியுறுத்துவோம் எனும் மாதாந்திர அறிக்கையோடுமே முடிந்துவிடுகிறது திமுகவின் தன்னாட்சிக்கொள்கை! ஆனால், பாவம்! திமுக தன்னாட்சியைக் காப்பாற்றும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்! சி.பி.ஐ. யின் மூலம் கனிமொழியிடமும், ராஜாத்தி அம்மாளிடமும் 2ஜி விசாரணையைச் செய்துகொண்டே கீழ்த்தளத்தில் காங்கிரசு திமுகவிடம் 63 தொகுதிகளைப் பறித்துச் சென்றது தெரியாது போலும் உங்களுக்கு!

திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆயிரம் செய்ததாம்! நாம் தமிழர் கட்சியிடம் காத்து மட்டும்தான் வருகிறதாம்! இயற்கைப் பேரிடர் காலத்தில் மக்களோடு நின்றது தொடங்கி, பனை நட்டது வரைக்கும் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். அதெல்லாம் செய்தும் காத்து வருகிறதென்றால் அது காத்து அல்ல உங்கள் அடிவயிறு எரிவதால் வருகிற புகை! அதற்கு ஒன்றும் செய்ய முடியாது!

காவிச்சட்டையை மாற்றிவிட்டு நீலச்சட்டை கொடுத்துவிட்டால் குற்றங்கள் குறைந்துவிடுமாம் என்று நக்கல் செய்ய முயற்சித்திருக்கிறீர்கள். நுனிப்புயல் மேய்ந்தால் இப்படித்தான் பேசத் தோன்றும். Makkalarasu.com தளத்திற்குக்குச் சென்று நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை முழுமையாகப் படியுங்கள். காவல்துறையில் என்னவெல்லாம் சீர்திருத்தம் செய்யவிருக்கிறோம் என்பது அப்போதாவது உங்கள் சிந்தைக்கு விளங்குகிறதா? என்று பார்ப்போம்.

‘பிரபாகரன் வேடம் போடுகிறார் சீமான்’ என்கிறீர்கள். அது உங்களுக்கு வேடமாகத் தெரியலாம். எங்களுக்கு அது வேட்கை. எங்கள் தலைவன் போல உழைக்க வேண்டும் என்கிற விடுதலைப்பற்று. இன்னொருவர் அடையாளத்தை அபகரிக்கலாமா? என்று கேட்கிறீர்கள். அண்ணாவின் கட்சியை அபகரித்திருக்கலாமா? அதில் உதயநிதி வரை பங்குக்கு நிற்கலாமா? என்று கேட்டுவிட்டு வாருங்கள் முதலில்!

சாதிநிலைப் பற்றிப் பேசாது தமிழர் என்று சல்லியடிக்குறோமாம்! சாதியை ஒழிப்பதாகச் சொல்லி ஐம்பதாண்டு ஆண்டு முடித்தும், சாதியினை ஒழிக்காது மாறாது வளர்த்துவிட்டு இப்போது மறுபடியும் அதிகாரத்தைக் கேட்டு, ‘திராவிடர்’ என்றும், ‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்றும் சல்லியடிப்பதை கேளுங்கள். அதுதான் உண்மையான சல்லி! எந்த சமரசமும் இல்லாது சாதியினை மூர்க்கமாய் எதிர்த்து அண்ணன் சீமான் பேசுகிற ஆயிரம் காணொளிகளை உங்களுக்குக் காண்பிக்கிறேன். சாதியினை எதிர்த்து ஸ்டாலின் பேசிய ஒற்றைக்காணொளியினை எனக்குக் காட்டுங்கள். அதுசரி! அன்புமணி விவாதத்திற்கு அழைத்தால் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வைத்தும், தருமபுரி புகழேந்தியை வைத்தும் அறிக்கை விடுத்து சாதியை வைத்து ஸ்டாலின் சல்லியடிப்பது உங்கள் கண்களுக்கு ஏன் பட மறுக்கிறது?

தமிழன் என்பதற்காக தமிழன் சுரண்டுவதை ஆதரிக்கிறோமாம். கந்துவட்டி ஆசாமியை ஆதரிக்கிறோமாம். இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியும், திரித்தும்,புனைந்தும் எழுதியிருக்கிறீர்கள். இதற்கு மேலெல்லாம் பேத்தல் ரகம். அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, மீனவர்கள் சிக்கல், ஈழம் என இவை நான்கும்தான் சீமானுக்குச் சிக்கல்களாம். இவைத் தீர்ந்துவிட்டால் சீமான் தீர்ந்துவிடுவாராம். அதுசரி! இந்நான்கு சிக்கல்களையும் தீர்க்காது சிக்கல்களாகவே இவ்வளவு ஆண்டுகளாக வைத்திருப்பது யார் அன்பரே? சீமானா 50 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தார்? அதனைச் சிக்கலாக வைத்திருப்பவர்களைச் சாடாது அச்சிக்கலை தீர்க்கப் போராடுபவரை சாடுவது என்ன மாதிரியான அணுகுமுறை? மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு அனுமதி தந்துவிட்டு, அதற்கெதிராகவே போராடுவதாக நாடகமாடும் திமுகவை விமர்சிக்காமல் உங்கள் விரல்கள் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் சீமானை நோக்கி நீள்கிறதென்றால் நீங்கள் யார் சொல்லி நீட்டுகிறீர்கள்?

இறுதியாக, அன்பு பழகுங்கள். அரசியல் பழகுங்கள். மாற்றுத்தரப்பை மதியுங்கள். மக்களாட்சியின் மகத்துவத்தை மனதில் நிறுத்துங்கள் என நெல்சன் மண்டேலாவும், அன்னை தெரசாவும் கலந்தக் கலவையாக அறிவுரையை அள்ளித் தெளிக்கிறீர்கள்!

கூட்டத்திற்குக் காசு கொடுத்து, பிறகு வாக்குக்குக் காசு கொடுத்து என மக்களை ஆட்டு, மாட்டு மந்தை போல விலைக்கு வாங்கிச் செல்கிற திமுக, அதிமுக, தினகரன் கூட்டத்தை விமர்சனம் செய்யாமல் நாம் தமிழர் கட்சி மீது பேரன்பு(!) கொண்டு நிற்கிற உங்களைப் பார்த்து இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது!

உண்மையை எழுதுங்கள்! செய்திகளில் அரசியல் செய்யாதீர்கள்! ஊடக அறமென்றால் என்னவென்றாவது தெரிந்துகொள்ளுங்கள்! கொஞ்சமேனும் மனசாட்சியோடு எழுதுங்கள்!

நிறைவாக சில வார்த்தைகள்..!

இந்த நாஜிக்கள் மீதும் அக்கறை கொண்ட அன்பரே!

எங்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பும், அக்கறையும் உங்கள் மீதும் எங்களுக்கு உண்டு! உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்கள் எழுத்து நடையையும், கற்பனைத்திறனையும் கண்டு வியக்கிறேன். ஆகவே, உங்களைப் போன்றவர்கள் விகடனில் இருந்துகொண்டு திறமையையும், ஆற்றலையும் வீணடிக்கக்கூடாது என்கிற அக்கறையோடு சொல்கிறேன். விகடனை முரசொலியாய் மாற்ற முயல வேண்டாம். முரசொலியைக் கொஞ்சமேனும் மாற்ற முயற்சியுங்கள். வெற்றுக் கூச்சலாக இருக்கிற முரசை கொஞ்சமேனும் ஒலி எழுப்ப வையுங்கள். தலையங்கம்கூட எழுதத் தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கும் அவ்விதழைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்துங்கள். அது உங்களால் மட்டுமே சாத்தியம். 200  ரூபாய் எழுத்தர்களைக் கொண்டு பக்கத்தினை நிரப்பிக்கொண்டிருக்கும் ‘முரசொலி’ ஆசிரியர் குழுவை கைப்பற்றித் ‘துண்டுச்சீட்டிலே’ கப்பல் விட்டுக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நங்கூரமாய் நின்று உதவுங்கள்!

பெரிய டாட்!

அக்கறையோடு அன்பின் நாஜி,

இடும்பாவனம் கார்த்தி,

நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை

முந்தைய செய்திதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை
அடுத்த செய்திஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு