ஐபிசிசி-யின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை | இராஜ்கிஷோர்

1528

ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை

 • இராஜ்கிஷோர் | துணைச் செயலாளர், சூழலியல் திட்ட ஆய்வுக்குழு,
  சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.

ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும் காட்டுத்தீ பரவிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் மேற்கு செர்மனியில், சூலை மாதம் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க, காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் (ஐபிசிசி) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை கடந்த திங்கள் (09/08/2021) அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் ஆறாவது முக்கிய மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும். காலநிலை அறிவியலின் சமீபத்திய முன்னேற்றங்கள், செயல்முறை புரிதல்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய காலநிலை உருவகப்படுத்துதல்கள் ஆகியவற்றிலிருந்து பல ஆதாரங்களை இணைத்து, காலநிலை அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய மிக சமீபத்திய புரிதலை இந்த அறிக்கை தருகிறது.

கடலோர நகரங்கள், வேளாண் நிலங்கள், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற சமுதாய அம்சங்களை காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கும், இதன் இரண்டாவது பகுதி, 2022இல் வெளியிடப்படும். அதே ஆண்டு வெளியாகும் மூன்றாவது பகுதி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், புவி வெப்பமடைதலை தடுப்பதற்குமான வழிகளை ஆராயும்.

14,000க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உலகின் முன்னணி காலநிலை விஞ்ஞானிகளால் எழுதப்பட்டு, 195 தேசிய அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அறிக்கையிலிருந்து நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்: தொழில்துறை புரட்சி முதலான மனித செயல்பாடுகளின் ஒட்டுமொத்த தாக்கம் காலநிலைக்கு விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க பேரழிவு மாற்றங்களை “சந்தேகத்திற்கு இடமின்றி” ஏற்படுத்தியுள்ளது.

கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்கம் (Summary for Policymakers) – சில முக்கிய புள்ளிகள்:

 1. தற்போதைய காலநிலை – The Current State of the Climate
 • வளிமண்டலம், கடல் மற்றும் நிலத்தை மனித செயல்பாடுகள் வெப்பமாக்கி உள்ளது என்பது சந்தேகங்களுக்கு இடமின்றி தெளிவாகிறது.
 • காலநிலை அமைப்பின் தற்போதைய நிலை மற்றும் சமீபத்திய மாற்றங்கள் ஆகியவை இதுவரை பல நூற்றாண்டுகளாக முன்பேதும் கண்டிராத மோசமான நிலையை எட்டியுள்ளன.
 • மனித செயல்பாட்டால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், உலகின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஏற்கனவே பல வானிலை மற்றும் காலநிலை உச்சநிலைகளை ஏற்படுத்த துவங்கிவிட்டது.
 • வெப்ப அலைகள், கடும் மழை, வறட்சி, வெப்பமண்டல சூறாவளிகள், போன்ற காலநிலை உச்சநிலைகளின் அதிகரிப்பு, குறிப்பாக, மனித செயல்பாடுகள் தான் அவற்றுக்கு பின்னணி என்பதற்கான ஆதாரங்கள் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்கு (2014) பின் மிகவும் பலம் அடைந்துள்ளன.

உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

 1. எதிர்கால காலநிலை – The Future of Climate Change
 • பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு எவ்வளவு கட்டுப்படுத்தப் பட்டாலும், குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்.
 • இனி வரும் தசாப்தங்களில் கரியமில வாயு மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை அதிகளவு குறைக்காவிட்டால், புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி மற்றும் 2 டிகிரி செல்சியஸ் அளவை கட்டாயம் தாண்டும்.
 • தொடர்ச்சியாக புவி வெப்பமடைதல், உலகளாவிய நீர் சுழற்சி மாறுபாடுகள், உலகளாவிய பருவமழை மற்றும் வறட்சி நிகழ்வுகளை அதிகளவு தீவிரப்படுத்தும் என்று கணிக்கப்பகிறது.
 • கரியமில வாயுவின் உமிழ்வு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலையில், வளிமண்டலத்தில் கரியமில வாயு குவிவதைக் குறைப்பதில் கடல் மற்றும் நிலத்தின் கார்பன் உறிஞ்சும் செயல்திறன் குறையும் என்று கணிக்கப்பகிறது.
 • கடந்த மற்றும் எதிர்கால கரியமில வாயு உமிழ்வுகளால் ஏற்படும் பல மாற்றங்கள் குறிப்பாக பனிக்கட்டிகள், கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல நூற்றாண்டுகள் வரை மாற்றி அமைக்க/ மீள முடியாதவை.  

வளிமண்டலத்தில் கரியமில வாயு குவிவதைக் குறைப்பதில் கடல் மற்றும் நிலத்தின் கார்பன் உறிஞ்சும் செயல்திறன் குறையும்

 1. எதிர்கால காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் – Limiting Climate Change in the Future
 • மனித செயல்பாட்டால் தூண்டப்பட்ட புவி வெப்பமடைதலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்த, கரியமில வாயு உமிழ்வை குறைக்க வேண்டும், குறைந்தபட்சம் நிகர பூச்சிய கரியமில உமிழ்வு net zero CO2 emission நிலையை அடைய வேண்டும். மேலும், மற்ற பசுமை இல்ல வாயு உமிழ்வுக்ளை அதிகளவு குறைக்க வேண்டும்.
 • வலுவான, விரைவான மீத்தேன் உமிழ்வு குறைப்பும் வெப்பமயமாதல் விளைவையும், காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்.

ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் அறிக்கை குறிப்பிடும் சில முக்கிய புள்ளிகள்

 • 2011 – 2020 தசாப்த காலத்தில் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை 1850-1900 காலத்துடன் ஒப்பிடுகையில் 1.09 டிகிரி அதிகமாக இருந்துள்ளது.
 • 1850 முதல் தற்போது வரையான காலத்தில் கடந்த ஐந்து வருடங்களில் தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
 • 1901 – 1971 உடன் ஒப்பிடுகையில் சமீபத்திய கடல் மட்ட உயர்வு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
 • 1990களில் இருந்து உலகளவில் பனிப்பாறைகள் உருகியதற்கும், ஆர்க்டிக் கடல் பனி குறைந்ததற்கும் மனித செயல்பாடுகள் தான் சுமார் 90 சதவிகிதம் வரை காரணமாக இருந்துள்ளன.
 • வெப்ப அலைகள் போன்ற வெப்ப உச்சநிலை நிகழ்வுகள் 1950க்கு பிறகு மிகவும் தீவிரமடைந்து வருகின்றன என்பது உறுதியாகிறது.

1900 உடன் ஒப்பிடுகையில் கடல் மட்டத்தின் சராசரி உயர்வு

எதிர்கால பாதிப்புகள் – அறிக்கை குறிப்பிடும் சில முக்கிய புள்ளிகள்

 • எவ்வாறான உமிழ்வு சூழ்நிலைகளிலும், வெப்பநிலை 1850-1900 காலத்தை விட 1.5 டிகிரி அதிகமான அளவை 2040க்குள் கட்டாயம் எட்டிவிடும்.
 • 2050க்கு முன்னர் ஆர்க்டிக் ஒரு முறையாவது பனி இல்லா நிலையை அடையும்
 • 1.5 டிகிரி வெப்பமயமாதலில் கூட “வரலாற்று பதிவில் கண்டிராத” அளவு தீவிர நிகழ்வுகள் அதிகப்படியாக நிகழும்.
 • சமீபத்திய காலங்களில் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட உயர்வு நிகழ்வுகள் 2100இல் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் என்று கணிக்கப்படுகிறது

எதிர்வரும் ஆபத்துகள் 

உமிழ்வுகள் எப்படி கையாளப்பட்டாலும் அடுத்த இரண்டு தசாப்தங்களில் நாம் நிச்சயமாக 1.5 டிகிரி வெப்பநிலை உயர்வை எட்டுவோம் என்று ஐபிசிசி குறிப்பிடுகிறது. உமிழ்வுகளை மெதுவான விகிதத்தில் குறைத்தாலே 2 டிகிரி வெப்பநிலை உயர்வை எட்ட நேரிடும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் உமிழ்வுகள் வீழ்ச்சியடையவில்லை என்றால் 3 டிகிரி அளவு வரை வெப்பநிலை உயரும் என தெரிகிறது – அது கட்டாயம் ஒரு பேரழிவை உருவாக்கும்.

சராசரி உலக வெப்பநிலையில் கணிக்கப்படும் உயர்வு அளவுகள்

பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை, இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குக் கீழே வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அதை 1.5 டிகிரிக்குக் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் 2015இல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் குறிக்கோள்களில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஐபிசிசி அறிக்கை, எப்படிப்பட்ட உமிழ்வு சூழ்நிலைகளின் கீழும், கார்பன் வெளியீட்டை மிகப்பெரும் அளவில் குறைக்காவிட்டால் இந்த இரண்டு இலக்குகளையும் எட்ட முடியாது என்று கூறுகிறது.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் அடிக்கடி உயிருக்கு ஆபத்தான வெப்ப அலைகளை சந்திக்கக் கூடும், கடுமையான வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தண்ணீருக்காக போராடும் நிலை உருவாகும். இன்று உயிருடன் இருக்கும் சில விலங்கு  மற்றும் தாவர இனங்கள் காணாமல் போகும்.  உலகின் பெரும் பகுதிகளில் மீன்வளத்தைத் தக்கவைுக்கும் பவளப் பாறைகள், அதிக அளவில் பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அறிக்கை குறிப்பிடும் பிராந்திய மாற்றங்கள் – ஆசியா

 • ஆசியாவில் குளிரின் தீவிரம் குறைந்து, வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. வரும் தசாப்தங்களில் இதே போக்கு தான் தொடரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.
 • கடல் வெப்ப அலைகள் தொடர்ந்து அதிகரிக்கும். குறிப்பாக வட ஆசியப் பகுதிகளில் தீ வானிலை காலங்கள் நீண்டு தீவிரமடையும்.
 • ஆசியாவின் பெரும்பகுதிகளில் சராசரி மழைபொழிவு அளவும், தீவிர மழைப்பொழிவுகளும் அதிகரிக்கும்.
 • தற்போது சராசரி மேற்பரப்பு காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஆசியாவின்  மத்திய மற்றும்  வடக்குப் பகுதிகளில் இது தொடர்ந்து குறையும்.
 • ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதி இழப்பு மற்றும் கடற்கரை பின்வாங்குதலும் அதிகரித்துள்ளது. பிராந்திய சராசரி கடல் மட்டங்கள் தொடர்ந்து உயரும்.

பிராந்திய வாரியான சராசரி வெப்பநிலை மாற்றங்கள்

தெற்கு ஆசியா – இந்திய ஒன்றியப் பகுதிகள்

 • வெப்ப அலைகள் மற்றும் வெப்ப அழுத்தங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்படும்.
 • ஆண்டு மற்றும் பருவ மழை அளவுகள் 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து அதிகரிக்கும்.

பிராந்திய வாரியான சராசரி மழை பொழிவு மாற்றங்கள்

நகர்புறங்களில் ஏற்படும் பிராந்திய மாற்றங்கள்

 •  நகரங்களின் வெப்ப தீவு விளைவு காரணமாக நகர்ப்புற மையங்கள், சுற்றியுள்ள கிராமப் புறங்களை விட வெப்பமாக இருக்கும்.
 • நகரமயமாக்கல் நீர் சுழற்சியை மாற்றி மழைபொழிவு அளவை அதிகரிக்கிறது.
 • பெரும்பாலான கடலோர நகரங்களில் கடல் மட்டம் மற்றும் காற்றின் வெப்பநிலை இரண்டும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 • கடல் மட்ட உயர்வு, அதிகளவு புயல்கள் மற்றும் தீவிர் மழைபொழிவு நிகழ்வுகளால் கடலோர நகரங்களில் வெள்ளங்கள் அதிகளவு ஏற்படும்.
 • இன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது, எதிர்கால நகர்ப்புற வளர்ச்சி, வெப்ப அலைகள் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் ஆகியவற்றால், அதிக வெப்பமான நாட்கள் மற்றும் சூடான இரவுகளை சந்திக்க நேரிடும். ஒட்டுமொத்தமாக நகரங்களில் வெப்ப அழுத்தம் அதிகரிக்கும்

.

நகரங்கள் சந்திக்கும் அதிகப்படியான வெப்பநிலை அளவுகள்

நகர்ப்புறங்களில் வெப்பமடைதல் பெருக்கத்திற்கு அறிக்கை முன்வைக்கும் மூன்று முக்கிய காரணிகள்:

 • நகரங்களில் உள்ள நெருக்கமான உயரமான கட்டிடங்கள் வெப்பத்தை உறிஞ்சி சேமிக்கின்றன, மேலும் இயற்கை காற்றோட்டமும் குறைகிறது.
 • மனித செயல்பாடுகள், தொழில்துறை வெப்பமாக்கல், குளிரூட்டல் அமைப்புகள், இயங்கும் இயந்திரங்கள் காரணமாக வெளியாகும் வெப்பம்.
 • நகரங்களில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெப்பத்தை உறிஞ்சி தக்கவைத்து, பின்னர் அந்த வெப்பத்தை மீண்டும் இரவில் வெளியிடுகின்றன.

நகர்ப்புறங்களில் புவி வெப்பமடைதல் தீவிரமடைய காரணங்கள்

வெப்பநிலை உச்ச நிலைகளின் தீவிரம்

1850 – 1900 காலத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடந்த வெப்பநிலை உச்ச சம்பவங்கள், தற்போது (அதாவது 1 டிகிரி வெப்பமடைதல்) 2.8 முறை நடக்கிறது. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், 1.5 டிகிரி வெப்பமடைதலில் 4.1 முறையும், 2 டிகிரியில் 5.6 முறையும், 4 டிகிரி வெப்பமடைதலில் 9.4 முறையும் நடக்கும்.

அதே போல, 1850 – 1900 காலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடந்த வெப்பநிலை உச்ச சம்பவங்கள், தற்போது (அதாவது 1 டிகிரி வெப்பமடைதல்) 4.8 முறை நடக்கிறது. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், 1.5 டிகிரி வெப்பமடைதலில் 8.6 முறையும், 2 டிகிரியில் 13.9 முறையும், 4 டிகிரி வெப்பமடைதலில் 39.2 முறையும் நடக்கும்.

வெப்பநிலை உச்ச நிலைகளின் தீவிரம்

காலநிலை மாற்றம் சராசரி வெப்பநிலை உயர்வை மட்டும் ஏற்படுத்தப் போவதில்லை, அதிகப்படியான வெப்ப அளவைக் கொண்டுள்ள நாட்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து விடும். ஒரு வருடத்தில் 40 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையை கொண்டிருக்கும் நாட்களின் எண்ணிக்கையால் இதை நாம் அளவிட முடியும்.

‘குறைந்த உமிழ்வு’ சூழ்நிலையில் தெற்காசியாவில் இத்தகைய நாட்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.1850-1900 காலத்தில் ஆண்டுக்கு 40 நாட்கள் என்ற எண்ணிக்கை 2081-2100 காலத்தில் ஆண்டுக்கு 59 நாட்கள் வரை உயரும். ‘தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல்’ சூழ்நிலையில் இந்த எண்ணிக்கை 68 நாட்கள் ஆகும். இதுவே ‘உயர் உமிழ்வு’ சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு வெப்பநிலை 40 டிகிரியை விட அதிகமாக இருக்கும்.

தீவிர மழை பொழிவு மற்றும் வறட்சி நிகழ்வுகள்

1850-1900 காலத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடந்த அதிதீவிர மழை பொழிவு நிகழ்வுகள், தற்போது (அதாவது 1 டிகிரி வெப்பமடைதல்) 1.3 முறை நடக்கிறது.வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், 1.5 டிகிரி வெப்பமடைதலில் 1.5 முறையும், 2 டிகிரியில் 1.7 முறையும், 4 டிகிரி வெப்பமடைதலில் 2.7 முறையும் நடக்கும்.

1850 – 1900 காலத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடந்த வறட்சி சம்பவங்கள், தற்போது (அதாவது 1 டிகிரி வெப்பமடைதல்) 1.7 முறை நடக்கிறது. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், 1.5 டிகிரி வெப்பமடைதலில் 2 முறையும், 2 டிகிரியில் 2.4 முறையும், 4 டிகிரி வெப்பமடைதலில் 4.1 முறையும் நடக்கும்.

தீவிர மழை பொழிவு மற்றும் வறட்சி நிகழ்வுகள்

‘குறைந்த உமிழ்வு’ சூழ்நிலையில், 2081-2100 காலத்தில் மொத்த மழைப்பொழிவு அளவு, 1850–1900 காலத்தை விட 10.2% அதிகமாக இருக்கும். ‘தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல்’ மற்றும் ‘உயர் உமிழ்வு’ சூழ்நிலைகளில், இந்த அளவு முறையே 12.9% மற்றும் 27.6% வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இதை விட வருடாந்திர அதிகபட்ச ஒரு நாள் மழையின் அதிகரிப்பு அளவுகள் இன்னும் அச்சமடையச் செய்கின்றன. ‘குறைந்த உமிழ்வு’ சூழ்நிலையில், 2081 – 2100 காலத்தில், அதிகபட்ச ஒரு நாள் மழை 1850 -1900 காலத்தை விட 15.9% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ‘தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல்’ மற்றும் ‘உயர் உமிழ்வு’ சூழ்நிலைகளில், இந்த அளவு முறையே 24% மற்றும் 47.8% வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இது போன்ற மழை அதிகரிப்பு தென்னிந்தியாவில் அதிகமாக இருக்கும், ஆண்டு மழை, கோடை மழை என இரண்டுமே அதிகரிக்கும், பருவமழைக் காலமும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தின் நிலை

பல்வேறு ஐரோப்பிய நாடுகள் 2050க்குள்ளும், சீனா 2060க்குள்ளும் நிகர பூச்சிய உமிழ்வை net zero emissions அடைவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக உறுதியளித்துள்ளன. ஆனால் சீனா தொடர்ந்து  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி வருகிறது என்பது ஒருபுறம் இருக்க, இந்திய ஒன்றியம் இது போன்ற எந்த ஒரு இலக்கையும் நிர்ணயம் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றத்தின் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு இந்திய ஒன்றியம் உள்ளாக பல காரணங்கள் உள்ளன. அதிக அடிப்படை சராசரி வெப்பநிலை கொண்ட இந்திய ஒன்றியம் போன்றொரு நாட்டில்,  ஒரு சிறிய வெப்பநிலை உயர்வு கூட அதிக மனித அசவுகரியம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்தும், மக்கள் வாழ்வாதாரங்களை இழக்க வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் முற்றிலும் வாழமுடியாத நிலையைக் கூட உருவாக்கலாம். இந்திய ஒன்றிய விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு பெரிதும்  நம்பியுள்ள பருவமழை நிகழ்வுகளை காலநிலை மாற்றம் சீர்குலைக்கும் நிலை உருவாகும் போது, அது மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

இந்திய ஒன்றியத்தின் கடலோரப் பகுதி 7,500 கிமீ நீளமானது என்பதால், உயரும் கடல்மட்ட அளவுகளால் அதிகம் பாதிக்கப்படும். அறிக்கையின் படி, தெற்கு ஆசியாவில் கடல் மட்டம் ‘குறைந்த உமிழ்வு’ சூழ்நிலையில் 0.4 மீ அளவும், ‘தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல்’ சூழ்நிலையில் 0.5 மீ அளவும், ‘உயர் உமிழ்வு’ சூழ்நிலைகளில் 0.7 மீ அளவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, இந்திய ஒன்றியம் சிறந்த நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தயார் செய்ய வேண்டும். அத்துடன் கடலோர வெள்ளம் மற்றும் அது தொடர்புடைய அரிப்பிலிருந்து சதுப்புநிலங்கள் போன்ற முக்கிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்கவும் முயற்சிகளை எடுத்தாக வேண்டும்.

240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (86 மில்லியன் இந்திய ஒன்றிய மக்கள்) இந்து-குஷ் இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகளை தங்கள் நீர் ஆதாரமாக நம்பியுள்ளனர். இந்த பனிப்பாறைகள் 2100க்குள் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அது அந்த பிராந்தியத்தின் விவசாயத்திற்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த மக்களின் உணவுப் பாதுகாப்பை மிகப்பெரும் கேள்விக்குரியாக்கும்.

அறிக்கையின் படி, நகரங்கள் உள்ளூர் நீர் சுழற்சியை மாற்றுகின்றன, இதனால் அதிக மழைபொழிவு  ஏற்பட்டு, வடிகால் அமைப்புகளையும் மிகப்பெரும் அளவில் பாதிப்படையும். இதனால் ஒட்டுமொத்த வெள்ள அபாயம் அதிகரிக்கும். இந்திய ஒன்றியத்தின் நகர்ப்புற மக்கள் தொகையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சூழ்நிலைகளை எவ்வாறு நகரங்கள் சமாளிக்க போகின்றன என்ற கேள்விக்கு தற்போது வரை எந்த பதிலும் இல்லை.

புதை படிவ எரிபொருட்கள்

புவி வெப்பமடைதலுக்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக புதை படிவ எரிபொருட்கள் உள்ளன. ஆனால், முதலீட்டாளர்கள் புதைபடிவ எரிபொருட்களை மிக விரைவாக கைவிடுவார்கள் என்று தோன்றவில்லை. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றம் உள்ள போதிலும், நவீன பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நம்பகமான மாற்றீட்டை உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

எண்ணெய் மற்றும் எரிவாயு மற்ற எரிபொருள் ஆதாரங்களை விட அதிக ஆற்றலைக் கொண்டுள்ளதால், அவை தொழில்துறை செயல்பாடுகளுக்கு மிக முக்கியமாக கருதப்படுகின்றன. உலகின் முக்கால்வாசிக்கும் அதிகமான மின்சாரமும், புதைபடிவ எரிபொருட்களால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முழுவதுமாக மாற்று புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை பெரு எரிசக்தி நிறுவனங்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. பல பெரிய எரிசக்தி நிறுவனங்கள் கார்பன் பிடிப்பு போன்ற வழிகளின் மூலம்  தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து உமிழ்வைக் குறைப்பதிலும், இயற்கை வாயுவிலிருந்து நீல ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதிலும் தான்  கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்த அணுகுமுறைகளும் குறிப்பிடத்தக்க காலநிலை அபாயங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமடைதலுக்கான முக்கிய காரணிகள்

மனித செயல்பாடுகளை பொதுமைப் படுத்தலாமா?

இந்த அறிக்கையின் தொடக்கமே, புவி வெப்பமடைதலுக்கு மனித செயல்பாடுகள் தான் காரணம் என்று நிறுவுவது தான். அறிவியல் ரீதியாக இது சரி தான் என்றாலும், எல்லா மனிதர்களும் புவி வெப்பமடைய சம அளவில் காரணம் என்று கட்டாயம் கூறி விட முடியாது.

பெரும்பாலான புவி வெப்பமடைதலுக்கு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தான் காரணம் என்பதே நிதர்சனம். ஒரு பக்கம் முதலாளிகள் லாபமடைந்து கொண்டிருக்க, காலநிலை நெருக்கடியால் பாதிப்படைவது ஏழைகள் தான். உலகம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக கார்பன் பயன்பாட்டை குறைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

மக்கள் பலர் புதைபடிவ முதலாளித்துவத்தின் பலன்களிலிருந்து பயனடைகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால், புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுத்தல் தான் நவீன நாகரிகத்தின் அடிப்படையாக உள்ளது. முதலாளித்துவத்தின் கார்பன் சார்ந்த தயாரிப்புகளை தான் மக்கள் நுகர்கிறார்கள். ஆனால், காலநிலையை சீர்குலைக்கும், உற்பத்தி அமைப்புகள் இருக்கும் வரை மக்கள் அதை நுகர்வதை தவிர்க்க முடியாது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளியை அந்த எண்ணெய் உற்பத்தியில் இருந்து லாபம் ஈட்டும் முதலாளியுடன் ஒப்பிட முடியாது. நிலக்கரி சுரங்கத் திட்டதை அமைக்க வழிவகை செய்வதற்காக தங்கள் நிலத்திலிருந்து இடம் பெயர்த்தப்படும் மக்களை, அந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசாங்கங்களுடன் ஒப்பிட முடியாது. மனித செயல்பாடு என்பது உண்மை தான் என்றாலும், குறிப்பாக முதலாளித்துவ அமைப்பு தான் ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் பேரழிவுகளுக்கு காரணம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இதுவரை பெரும்பாலும் வளர்ச்சி அடையாத மற்றும் வளர்கிற நாடுகள் என்று குறிப்பிடப்படும் நாடுகளே காலநிலை மாற்றத்தின் அதிகப்படியான பாதிப்புகளை சந்ததித்துள்ளன என்றே கூறலாம். ஆனால் சமீப காலங்களில் கனடா, செர்மனி , சப்பான், அமெரிக்கா போன்ற அதிக வசதியான மற்றும் பாதுகாப்பான நாடுகளும் குறிப்பிடும் அளவு பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆக, இது உலக மக்கள் அனைவருக்குமான அவசரநிலை என்பதை அரசுகள் உணரவேண்டிய நேரம் இது

.

220 பிராந்திய அரசாங்கங்கள், 300 பன்னாட்டு வணிகங்கள், 1.75 பில்லியன் மக்கள் என உலகப் பொருளாதாரத்தின் 50 சதவிகிதத்தை உள்ளடக்கும் காலநிலை குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் கிளார்க்சன், “இனிமேல் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும், நிர்ணையிக்கப்படும் ஒவ்வொரு இலக்கும், காலநிலையை முக்கிய கருவாக கொண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

இந்த அறிக்கை வெப்பமயமாதலின் அபாய விளைவுகள் குறித்து எச்சரித்தாலும், 2030க்குள் உலகளாவிய உமிழ்வை பாதியாக குறைத்து, 2050இல் நிகர பூச்சிய உமிழ்வை எட்டினால், வெப்பநிலை உயர்வை நிறுத்தி விடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கிறது. எந்த நாட்டிற்கும் எந்த குறிப்பிட்ட கொள்கை பரிந்துரையையும் இந்த அறிக்கை வழங்கவில்லை – அரசாங்கங்கள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். முன்பேதும் இல்லாத அளவிற்கு தெளிவான ஆய்வுகளுடனும்  சான்றுகளுடனும் விஞ்ஞானிகள் ஒரு உலக அவசர நிலைக்கான அபாய ஒலியை  எழுப்பிவிட்டனர். அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டிய நேரம் இது!

IPCC Report PDF Download

முந்தைய செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்