முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துச் சமூக நீதியைச் சாகடிக்கும் சதிச்செயல் !
– சீமான் கண்டனம்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்குவதற்குச் சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் சமூக நீதியின் அடிநாதமான இடஒதுக்கீட்டு முறையையே அடியோடு தகர்க்கும் உள்நோக்கம் கொண்ட சதிச்செயலாகும்.
பன்னெடுங்காலமாகச் சமூகத்தின் ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, எவ்வித வாய்ப்புகளும் கிடைக்கப்பெறாத நிலையில் இருக்கிற உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவே இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், தீண்டாமைக் கொடுமைகளாலும் பெருந்துயருக்கு ஆட்பட்டப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வியினாலும், வேலைவாய்ப்பினாலும் பொருளாதார ரீதியிலும் உயர்ந்தால்தான் தங்கள் மீதான உயர் சாதி அடக்குமுறைகளைக் களைந்து சமூகச் சமத்துவத்தை அடைய முடியும் என்கிற நிலையில் அவர்களின் சமத்துவ வாழ்விற்காகவே இட ஒதுக்கீட்டு முறையினை நிலைநிறுத்தினார்கள். அதனை அடியோடு அழித்தொழிக்க முயலும் சனாதனவாதிகளும், இந்துத்துவ அடிப்படைவாதிகளும் நீண்டநெடிய காலமாகவே இட ஒதுக்கீட்டுக்கெதிராகப் பொது மக்களின் உளவியலில் நஞ்சைப் பரப்பும் வேலையினைச் செய்து வருகிறார்கள் என்பது அறிந்ததுதான்!
இட ஒதுக்கீடு என்பது ஒரு சலுகை அல்ல! அது நமது தார்மீக உரிமை என்கிற புரிதலுக்கு ஒவ்வொருவரும் வருதல் வேண்டும். சாதிய படிநிலைகளுள்ள நமது சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்கப் பெறுவதில்லை. அத்தகைய குறைப்பாடு கொண்ட சமூகத்தை நேர்நிறுத்தவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவும் செய்யும் ஒரு அளவீட்டுக் கருவியே இட ஒதுக்கீடு. அதனைக் கொண்டே அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்விற்கான விடுதலையை எட்ட முடியும் என்பது திண்ணம். அதுவே இச்சமூகத்தில் சாதியப் பாகுபாட்டினாலும், வர்க்க வேறுபாட்டினாலும் காயம்பட்ட மண்ணின் மக்களின் புண்ணை ஆற்றுகிற மாமருந்து. அதனைத் தகுதி, திறமை போன்றவற்றைக் கூறி சிதைத்திட முயலும் கருத்துருவாக்கப் பரப்புரைகள் யாவும் அபத்தமானவை; ஆபத்தானவை. இவ்வளவு ஆண்டுக் காலமாக இட ஒதுக்கீட்டுக்கெதிராக எதிர்நிலைப்பாடு எடுத்து வந்தவர்கள்தான் இன்றைக்குக் கள்ள மௌனம் சாதித்து முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள். தங்கை அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் தேர்வை தமிழகமே எதிர்க்கும் பொழுது சமமான தரநிலை வேண்டும் என்று போராடியவர்களுக்குப் பாடமெடுத்தவர்கள் இன்று முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பற்றி வாய் திறக்க மறுப்பதேன்?
சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைப் புறந்தள்ளிப் பொருளியல் ரீதியிலான இடஒதுக்கீட்டைக் கொண்டு வர எண்ணுவது என்பது இட ஒதுக்கீடு நோக்கத்தையே முழுமையாகத் திசைதிருப்பும் கயமைத்தனம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு அரசு நல்வழிகாட்டி அவர்களைத் தூக்கிவிட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனைச் செய்வதுதான் ஓர் அரசின் கடமையும்கூட. ஆனால், அதற்கு இட ஒதுக்கீட்டை வழிமுறையாகக் கொள்வதை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கோ, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கோ கொண்டுவரப்பட்டதல்ல! அது சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதற்கென நிறுவப்பட்டது. அதன் நோக்கம் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான். அந்த அடிப்படையைச் சிதைத்து முற்பட்ட வகுப்பினருக்கு சலுகை அளித்திட முயல்வது என்பது சமூக அநீதி; அரசியல் உள்நோக்கம் கொண்டது. 2016 ஆண்டு உலக வாங்கிக் கொடுத்த அறிக்கையின் படி 5 இந்தியர்களில் ஒருவர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவராக இருக்கிறார். இந்நிலையில் வெறும் 5% இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேறிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது எவ்வகை நியாயம்?
ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்ற முடியாது தோல்வியுற்றதையும், பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்ற மோசமான பொருளாதார நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான தொழில்கள் நலிவடைந்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் பறிபோனதையும் பேச மறுக்கிற மோடி அரசு, இட ஒதுக்கீட்டின் மூலம் முற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் வறுமையைப் போக்குவதாகக் கூறுவது மிகப்பெரும் மோசடித்தனம். மேலும், பொருளியல் ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது நடைமுறைக்குத் துளியும் பொருத்தமற்றது. பொருளாதாரம் என்பது மாறுதலுக்குப்பட்டது; எப்போதும் நிலையான அளவுகோளாக இருக்கக் கூடியதல்ல. ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை அளவீடு செய்வது என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆண்டொன்றுக்கு 2.5 லட்சம் பணம் ஈட்டுபவர் வருமான வரி கட்ட வேண்டுமென்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிக்கும் முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அறிவிக்கும் மத்திய அரசின் செயல் அப்பட்டமான ஓட்டரசியல்.
மத்தியில் ஆளும் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், மிக மோசமான காட்டாட்சி முறையினாலும் நாடு முழுக்க அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் மிகப்பெரும் எதிர்ப்பலையைத் திசைதிருப்பவும், இட ஒதுக்கீட்டு முறையைப் பொருளியல்ரீதியாகத் திசைமாற்றி முற்றிலுமாக அதனை ஒழித்திடவுமே இச்சதிச்செயல் அரங்கேற்றப்படுகிறது. ஆகவே, சமூக நீதியைச் சாகடிக்கும் இப்படுபாதகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதனை உடனே கைவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி