எழுவரின் விடுதலைகோரி நீதிப்பயணம் மேற்கொள்ளும் வீரத்தாய் அற்புதம் அம்மாளின் போராட்டம் வெல்லத் துணை நிற்போம்! – சீமான்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டுக் கால் நூற்றாண்டுக்கு மேலாகச் கொடும் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும் ஏழுத்தமிழரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நான்கு மாதங்களைத் தொட்டுவிட்ட நிலையிலும் இன்னமும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத துயர் நிலை நீடிக்கிறது.
8 கோடி தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதமிழக அரசு தனது அமைச்சரவையை கூட்டி 7 தமிழர் விடுதலைக்கு உரிய தீர்மானத்தை இயற்றியும் இன்னமும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காத நிலை என்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலை.
இத்தீர்மானத்திற்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டியத் தமிழக அரசு அதனைச் செய்ய மனமில்லாது மௌனம் சாதிப்பது அரசின் அக்கறையின்மையையும், அலட்சியப் போக்கையும், இரட்டை வேடத்தையும் வெளிக்காட்டுகிறது. பெயரளவிற்கு ஒரு தீர்மானத்தை மட்டும் இயற்றிவிட்டு அதற்கு எவ்வித அரசியல் அழுத்தமும் தராமல் ஆளுநருக்கு எவ்வித நிர்ப்பந்தமும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றும் செயல்.
தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற மூவரையும் 13 ஆண்டுகளில் விடுதலை செய்திட உடனுக்குடன்அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தத் தமிழக அரசு, ராஜீவ் காந்தி வழக்கில் 28 ஆண்டுகளாக வாடும் எழுவரையும் விடுவிக்க ஆளுநருக்கு அரசியல் அழுத்தங்களைத் தராது அமைதி காப்பது அப்பட்டமான மோசடிச்செயலாகும். தமிழக மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அலட்சியம் செய்து ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நான்கு மாதங்களாகக் கிடப்பில் போட்டிருக்கிற தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது சனநாயக மரபுகளையே குழிதோண்டிப் புதைக்கும் எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடாகும். இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து சனநாயகப் பற்றாளர்களும், மாந்தநேய ஆர்வலர்களும், இன உணர்வாளர்களும் ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டியது வரலாற்றுப் பெருந்தேவையாகும்.
கால்நூற்றாண்டு காலமாகக் கால்நடுக்க தமிழக வீதிதோறும் நடையாய் நடந்து தன் மகனின் விடுதலைக்காக கண்ணீர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் என் தம்பி பேரறிவாளனின் தாயார் வீரத்தாய் அற்புதம் அம்மாள் அவர்கள் எழுவரின் விடுதலைகோரி மாபெரும் நீதிப்பயணத்தை கோவையில் தொடங்கியிருக்கிறார். அதில் பங்கேற்று நமது உடன்பிறந்தவர்களின் விடுதலைக்குத் துணைநிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக்கடமை. முதுமையின் துயரம் நாளும் வாட்டினாலும், பயணங்கள் யாவும் உடல்நலனுக்கு பெரும் ஒவ்வாமையைத் தந்தாலும், அவையாவற்றையும் பொருட்படுத்தாது தமிழ்ச் சமூகத்தின் அற உணர்வு மீது நம்பிக்கை வைத்து அநீதிக்கு நீதிகேட்டு நமது தாய் பயணம் மேற்கொள்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் மிக முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான எழுவர் விடுதலைக்காக நமது தாய் அற்புதம் அம்மாள் அவர்களின் இந்த மாபெரும் நீதி பயணத்தை ஆதரித்து அதில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது.
நமது தாய் அற்புதம் அம்மாள் அவர்கள் முன்னெடுக்கக்கூடிய அனைத்து விதமான போராட்டங்களங்களிலும், பரப்புரைப் பயணங்களிலும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பங்கேற்று நம் தாயின் அறப்போராட்டம் வெல்லவும் நமது உடன்பிறந்தவர்களின் விடுதலையை வென்றெடுக்கவும் துணை நிற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.