குடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா? – சீமான் கண்டனம்

39

குடிநீர்வசதிக் கேட்டுப் போராடியதற்காக மூன்று பிரிவுகளின் கீழ் திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அறப்போராட்டம் நடத்துவதற்காக மாணவர்கள் மீது தடியடித் தாக்குதல் தொடுப்பதும், மாணவர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சுவதுமானத் தமிழக அரசின் தொடர் மாணவர் விரோத நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் முறையானக் குடிநீர் வசதியின்றி இருப்பதால் அதனைச் செய்து தரக்கோரி பலமுறைக் கேட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை நிறைவேற்றாததால் மாணவர்கள் தங்களது எதிர்ப்புணர்வைக் காட்டும்பொருட்டு அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அப்போராட்டம் மிக மிகத் தார்மீகமானது. அவர்கள் கோரிக்கையின்பால் இருக்கிற நியாயத்தை உணர்ந்து அதனைச் செய்துதர வேண்டியக் கல்லூரி நிர்வாகம், அதனைச் செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாது போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியதற்காகத் தமிழ்த்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் தம்பி மாரிமுத்துவைக் கல்லூரியைவிட்டு நீக்கம் செய்திருப்பது மிக மோசமான பழிவாங்குதல் போக்காகும். தங்களுக்குரித்தான உரிமையானக் குடிநீர் வசதிக் கேட்டுப் போராடியதற்காக மாணவரை நீக்கியக் கல்லூரி நிர்வாகத்தின் செயல் ஒரு சர்வாதிகாரச் செயலாகும்.

மாணவர் மாரிமுத்துவின் நீக்கத்தைக் கண்டித்து திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடாரம் கொண்டான் எனும் இடத்தில் சாலை மறியல் இடத்தில் செய்ததற்காக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது சாலை மறியலில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக செயல்படுதல் ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. உரிமைக்காக உணர்வோடு கூடி நின்ற மாணவச்சமூகத்தின் மீது ஏவப்பட்ட இவ்வடக்குமுறையானது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு அதன் விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு பல ஆண்டுகளாகிறத் தற்காலச் சூழலில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தைப் பாதிக்காதா? கல்வி பயிலும் மாணவர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்பட்டால் அது அவர்களது படிப்பிற்கு இடையூறு ஆகாதா? என எந்தவிதத் தொலைநோக்குப் பார்வையுமற்று மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வழக்கு மக்கள் நலன் துளியுமற்ற ஒரு காட்டாட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கானச் சான்றாகும். மாணவர்களுக்குப் போர்க்குணமும், போராட்ட உணர்வும் எழாவண்ணம் அவர்களை மழுங்கடிக்க நினைக்க ஆளும் வர்க்கத்தின் இக்கொடுங்கோல் போக்கிற்கெதிராக சனநாயக ஆற்றல்களும், முற்போக்கு இயக்கங்களும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டியத் தருணமிது.

ஆகவே, கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவர் மாரிமுத்துவைத் திரும்பக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எவ்விதப் பழிவாங்கும் போக்கையும் கடைப்பிடிக்கக்கூடாது எனவும், மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறினால் மாணவர்களைத் திரட்டிப் போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்