யமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ‘ராயல் என்பீல்டு’ ‘யமஹா’ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 23-10-2018 காலை 10 மணியளவில் தொழிலாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சென்றார். அப்போது பேரணி செல்ல முயன்றதற்காக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களை சீமான் நேரில் சந்தித்து பிரச்சினைகள் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது,
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரிலுள்ள சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள யமஹா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு பணிசெய்யும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நவீனக் கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினைக் கண்டித்தத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது போராட்ட நோக்கங்களும், அவர்கள் எழுப்புகிற கோரிக்கை முழக்கங்களும் மிகத் தார்மீகமானவை. மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி அமைக்கப்பட்டு இந்நாட்டின் வரிச்சலுகைகளையும், இன்னபிற வசதிகளையும் மிக எளிதாகவும், மலிவாகவும் பெற்றுக் கொண்டு பெரும் இலாபத்தை ஈட்டிவரும் பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களை கொத்தடிமையாய் நடத்தி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களையோ, விதிகளையோ துளியளவும் மதிப்பதில்லை. தங்களது கொள்ளை இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ள அந்நிறுவனங்கள், மண்ணின் மக்களை இன்னொரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
ஆகவே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடித் தீர்வைக் காண வழிவகைகளை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084