‘நக்கீரன்’ கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம்! – சீமான் கண்டனம்
தமிழக ஆளுநர் அளித்தப் புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவாகரம் குறித்து நக்கீரனில் தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காகவே இந்தக் கைது நடவடிக்கை தொடுக்கப்பட்டு, தேசத்துரோக வழக்கு ஏவப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு அரசாங்கத்தின் செயல்களைக் குறைகூறுவதும், அரசின் நிர்வாக முறைகளை விமர்சிப்பதும் ஒருபோதும் தேசத்துரோகமாகாது. அது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமையாகும். ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தாலேயே தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சிக் கைதுசெய்வார்களென்றால் நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? என்கிற கேள்வியினை எழுப்புகிறது. நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரனில் எழுதியதற்காகவே நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்குத் தொடுப்பார்களென்றால் கருத்துச்சுதந்திரமும், சனநாயமும் எங்கிருக்கிறது? சனநாயகத்தின் நான்காம் தூண்களான ஊடகங்கள் மீது அடக்குமுறையை ஏவி அடியபணிய வைக்கும் மிகக் கொடிய ஊடகச்சர்வாதிகாரம். சனநாயகத்தினையும், சுதந்திரத்தையும் விரும்பும் எவராலும் இத்தகைய அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ள முடியாது.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்தி ஆளுநர் மூலம் அரசாங்கத்தை இயக்கிவரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏவிவிடும் பாசிச நடவடிக்கைகளின் நீட்சியாகவே நக்கீரன் கோபால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஒரு ஆளுநர் அளித்தப் புகாருக்கு ஒரு இதழின் ஆசிரியரின் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருப்பது இந்திய அரசியல் வரலாற்றிலே எங்கும் நடந்திராத ஒன்றாகும். விமர்சனம் வைப்பதும், பத்திரிக்கையில் எழுதுவதுமே தேசத்துரோகமாகிவிட்ட இந்நாட்டில் சனநாயகமும், சமதர்மமும் எங்கிருக்கிறது? ஆளுநர் மீதான விமர்சனமே சிறைலடைக்கக்கூடிய அளவுக்கு கொடுங்குற்றமென்றால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவாரா ஆளுநர்? தனக்கு வரையறுக்கப்பட்ட அதிகார எல்லையைத் தாண்டி மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிடுவதும், அரசின் செயல்திட்டங்களை ஆய்வுசெய்துவதுமாகத் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வரும் ஆளுநருக்கு அதுவெல்லாம் குற்றமெல்லாம் படவில்லையா? மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களே விமர்சனத்திற்குட்பட்டவர்கள்தான் எனும்போது, மக்களால் தேர்வுசெய்யப்படாது அரசாங்கத்தின் நியமனத்தின் மூலம் பதவியைப் பெற்றிருக்கிற ஆளுநருக்கு அதுவெல்லாம் பொருந்தாதா? என்கிற கேள்விகளுக்கு விடையில்லை.
நாட்டின் உச்சபட்ச சனநாயக அமைப்புகளுள் ஒன்றான உயர் நீதிமன்றத்தையே மோசமான சொற்களால் இழித்துரைத்து, காவல்துறையினை மலினப்படுத்தி, ‘இலஞ்சம் தரத் தயார்’ எனக் காவல்துறையினர் முன்னிலையே வெளிப்படையாகத் தெரிவித்த பாஜகவின் தேசியச் செயலாளர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ச்சப்படவில்லை? குறைந்தபட்சம், அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்குகளின் அடிப்படையிலாவது கைதுசெய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை? எச்.ராஜாவை கைதுசெய்யக் காவல்துறையினர் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்? ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் அருவருக்கத்தக்க வகையில் முகநூலில் கருத்து வெளியிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பொதுவிழாக்களில் வெளிப்படையாகப் பங்கேற்றபோதும் அவரைக் கடைசிவரை கைதுசெய்ய காவல்துறையினர் மறுத்ததற்கானக் காரணமென்ன? அப்படியானால், சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கங்களா? ஆளுநர் அளித்தப் புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலைக் கைதுசெய்திருப்பவர்கள், அதே ஆளுநர் துணைவேந்தர் நியமனத்தில் நடைபெறுகிற ஊழல் குறித்துப் பேசியிருக்கிறாரே அதுதொடர்பாக இதுவரை எத்தனைப் பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்? இதுவெல்லாம் ஆளும் வர்க்கம் எந்தளவுக்குப் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்பதையும், சட்டத்தை எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தி அடக்குமுறைகளை ஏவுகிறது என்பதையும் தெளிவாக உரைக்கிறது.
நக்கீரன் கோபால் அவர்கள் மீதான இக்கைது நடவடிக்கை என்பது பாசிச பாஜக அரசின் பிரதிநிதியாக இருந்து தமிழகத்தை இயக்கிவரும் ஆளுநர் மூலமாக ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் விடப்பட்டப் பகிரங்க மிரட்டலாகும். இது கழுத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும். எனவே, நக்கீரன் கோபால் மீது தொடுக்கப்பட்டிருக்கிற தேசத்துரோக வழக்கினைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக சனநாயகப் பேராற்றல்களைத் திரட்டிப் போராடுவோம் என எச்சரிக்கிறேன்.
சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.