தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது! – சீமான் கண்டனம்

778

அறிக்கை: தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் அன்புச்சகோதரர் வேல்முருகன் அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி இது ஜனநாயக நாடா? இல்லை ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்ட காடா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தமிழர் உரிமைகளுக்காக போராடி வருகிற வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற பொழுது திடீரென கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு முன்னால் நடந்த சம்பவத்திற்காக இன்று அவரை கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது. எம் நிலத்தை வாழவே முடியாத அளவிற்கு பாழ்படுத்த துடிக்கிற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற ஒரே காரணத்திற்காக வேல்முருகன் அவர்கள் பழைய வழக்கினை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை, கருத்துரிமை , போராடும் மக்களுக்கு துணையாக நின்று அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற பேச்சுரிமை ஆகியவை மறுக்கும் பட்சத்தில் அது ஜனநாயக நாடு என்ற மதிப்பை இழந்து விடுகிறது. இந்தப் பதவி நிரந்தரம்.. இந்த அதிகாரம் நிரந்தரம்.. என்கின்ற மமதையோடு அரசதிகாரத்தின் துணையோடு போராடுகின்ற மக்களையும், தலைவர்களையும் பொய் வழக்குப்போட்டு சிறைப்படுத்தினால் எழுகின்ற போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கின்ற அரசிற்கு மக்கள் தங்களது போராட்டங்கள் மூலமாக தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

போராட்டங்களை அடக்குவதற்கு வழி தேடுகிற
அரசு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை. 100 நாட்களுக்கு மேலாக ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கும் பதிமூன்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக நிற்பதும் அவர்களுக்காக போராடுவதும் ஒவ்வொரு தமிழனின் கடமை. அடுக்கடுக்காக பொய் வழக்குகளை தாக்கல் செய்து எங்கள் அரசியல் நடவடிக்கைகளை முடக்க துடிக்கின்ற மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை நாங்கள் உறுதியாக எதிர்கொண்டு நின்று அக்கடமையினை தொடர்ந்து மேற்கொள்வோம்.

அன்புச்சகோதரர் வேல்முருகன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோத, ஏதோச்சதிகார நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு தனது சர்வாதிகார போக்கினை மாற்றிக்கொண்டு, மக்கள் நலனுக்காக போராடுகின்ற தலைவர்களை பொய் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கிற ஜனநாயக விரோதப் போக்கினை உடனடியாக கைவிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். எனது ஆருயிர் ரத்தம், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் 29ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி
அடுத்த செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்