சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டோன் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான் கண்டனம்

565

சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டான் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான் கண்டனம்

மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குரல்கொடுத்து வரும் ஐயா ஸ்டான் சாமி அவர்கள் மத்தியில் ஆளும் மோடி அரசின் எதேச்சதிகாரப்போக்காலும், கொடுங்கோன்மை சட்ட நடவடிக்கைகளாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பொய் வழக்குத்தொடுக்கப்பட்டு, பயங்கரவாதியென முத்திரைக் குத்தப்பட்டுக் கொடும் சிறைவாசத்திற்கு உள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டு விடுவார் என நம்பியிருந்த நிலையில், மறைவெய்திவிட்டதாகத் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பீமா கொரோகான் வழக்கின் கீழ் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் மூலம் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், தனது வயது மூப்பையும், உடல்நலிவையும், தனது தரப்பு நியாயத்தையும் பலமுறை அவர் எடுத்துக்கூறியப் பிறகும்கூட, விடுவிக்காது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் போக்கோடும் அவரைத் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி அவரது உடல்நலனைக் குன்றச் செய்த பாஜக அரசின் செயல்பாட்டின் விளைவாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு. தேசியப் புலனாய்வு முகமை சட்டமானது சனநாயகவாதிகளை அடக்கி ஒடுக்கவே பயன்படுமென எச்சரித்தும், அதனை ஆதரித்தன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இன்றைக்கு அச்சட்டத்தினைக் கொண்டு அடக்கி ஒடுக்கி சனநாயகவாதிகளைப் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அச்சட்டத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது என்ன செய்யப் போகிறது? கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் துப்பாக்கியின் மூலம் கொன்று தீர்த்தவர்கள், இப்போது சட்டத்தின் மூலம் ஸ்டான் சுவாமியைக் கொன்றிருக்கிறார்கள். இதைத் தடுத்திருக்கவேண்டிய நீதித்துறையும் கைவிட்டது தான் பெருங்கொடுமை. இதே வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாத் போன்றவர்களின் நிலை பெரும் கவலையைத் தருகிறது. சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும் சமூகத்திற்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, சட்டத்தைக் கொண்டு அவர்கள் மீது கொடுங்கோல் போக்கினைக் கட்டவிழ்த்து விடும் மோடி அரசின் சனநாயகவிரோதச் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

தனது வாழ்வின் பெரும்பகுதியினைப் பழங்குடி மக்களுக்காகவும், சனநாயகத்தை நிலைக்கச் செய்வதற்கான பணிகளுக்காகவும் செலவிட்டு, அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்திட்ட ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காப் புகழ்பெற்று வாழ்ந்துகொண்டுதானிருப்பார். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்