முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்

90

அறிக்கை: மொழிப்போர் களத்தில் பங்காற்றிய பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி

முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஐயா நடராசன் அவர்கள் அரசியல், இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்களங்களில் பணியாற்றி தனி முத்திரைப் பதித்தவர். ‘புதிய பார்வை’, ‘தமிழரசி’ போன்றப் பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தி இதழியல் உலகில் தனக்கெனப் பெருமைக்குரிய இடத்தை அடைந்தவர். மேலும், தமிழரசி அறக்கட்டளை என்றவொன்றினை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பலசெய்து, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் ஐயா நடராசன் தஞ்சாவூரில் நடத்தும் ‘தைத்திருவிழா’ நிகழ்வு மிகச் சிறப்பான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற பெருநிகழ்ச்சியாகும்.

தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும். எப்போதும் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்த ஐயா நடராசன் அவர்களின் இழப்பினை எனது தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஐயா ம.நடராசன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்பான ஐயா முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவின் துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கேற்று, ஐயாவுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திஇராமராஜ்ஜிய இரத யாத்திரை மறியல் போராட்டம்:  சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது