மதுரை மாணவி சித்ராதேவி படுகொலை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

104

அறிக்கை: மதுரை மாணவி சித்ராதேவியின் படுகொலைக்குக் காவல்துறையின் அலட்சியப்போக்கும், மெத்தனமுமே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்
– சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

பெண்களுக்கு எதிரானத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுவக்கோட்டையையைச் சேர்ந்த பள்ளி மாணவி சித்ராதேவி காதலிக்க மறுத்ததால் பாலமுருகன் என்பவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனும் செய்தி பெரும் மனவலியைத் தருகிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத் துயரத்தில் பங்கேற்கிறேன். விழுப்புரத்தில் ஒரு குடும்பமே முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு அந்த ரணம் ஆறுவதற்குள் நிகழ்ந்திருக்கிற இச்சம்பவமானது பெண்களுக்கு இருக்கிற பாதுகாப்பின்மையையும், அரசின் அலட்சியப் போக்கையும் அம்பலப்படுத்துகிறது.

தங்கை சித்ராதேவிக்குத் தொடக்கம் முதலே அந்த இளைஞனால் மிரட்டலும், தொந்தரவும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதுகுறித்து சித்ராதேவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு காவல்துறையினர் இவ்வழக்கில் காட்டிய மெத்தனப்போக்கும், அலட்சியமுமே அநியாயமாக ஒரு உயிரைக் காவு வாங்கியிருக்கிறது என்பதை மறைப்பதற்கில்லை. முதல்முறையாகப் புகார் அளிக்கப்பட்டபோதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களது மகளின் உயிர் இன்றைக்குப் பறிபோயிருக்காதே எனக் கதறும் அவரது பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப்போகிறது காவல்துறை? தங்களது மகளின் எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவுகளைக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர்களை என்ன சொல்லித் தேற்றிவிட முடியும்?
இதேபோல இன்னொரு சம்பவம் சென்னை மடிப்பாக்கத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. யமுனா எனும் பெண் காதலிக்க மறுத்ததால் அமிலத்தை ஊற்றிக் கொளுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பொதுவெளியில் ஒரு பெண்ணை எரிக்க முடியும் என்கிற துணிவு ஒருவனுக்கு வருகிறதென்றால் அத்தகைய நிலையில்தான் நாட்டின் சட்ட ஒழுங்கும், பெண்களுக்கானப் பாதுகாப்பும் இருக்கிறது என்பது ஆளும் ஆட்சியாளர்களுக்கு அவமானகரமானது. இன்றைக்கு மிகச் சர்வசாதாரணமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. ஒரு பெண் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, பணிக்கோ சென்றுவிட்டு வீடு திரும்புவதே பெரும்பாடாக மாறியிருக்கிறது. மென்பொறியாளர் சுவாதி பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதே இதற்குச் சாட்சியாகும். அப்போதே அரசு விழித்துக்கொண்டு பெண்கள் மீதானத் தாக்குதலுக்கு எதிராகத் தீவிரப்போக்கைக் கடைப்பிடித்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு பல குடும்பங்கள் தங்களது பெண் பிள்ளைகளை இழந்துவிட்டு நிற்காது.

உடல் முழுவதும் நகையினை அணிந்துகொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே என்றைக்கு ஒரு பெண் இந்நாட்டில் நடமாட முடிகிறதோ அன்றைக்குத்தான் இந்நாடு விடுதலைபெற்றதாகக் கருதுவேன் என்றார் தேசப்பிதா காந்தியடிகள். ஆனால், பட்டப்பகலில் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதே இன்றைக்குக் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் சென்னை பெரும்பாக்கத்தில் மென்பொறியாளர் ஒருவரின் நகை, வாகனம், அலைபேசி முதலியவை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரிக்கப்பட்டதும், சென்னையைச் சுற்றி நடந்துவரும் நகைப்பறிப்பு சம்பவங்களுமே இதற்குச் சாட்சியங்களாக விளங்குகின்றன. எனவே, இனிமேலாவது விழிப்புற்று பெண்களுக்கு எதிரானக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த சிறப்புப்படையினை அமைத்து பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட வழிவகைகளை செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – – சீமான் வலியுறுத்தல்