பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்

20

ஐயத்தின் பேரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தடுப்பில் வைத்துள்ளது என்றும், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான எந்த வழியையும் நாட விடாமல் தங்களை தமிழக காவல் துறையின் கியூ பிரிவு காவல் அதிகாரிகள் தடுக்கின்றனர் என்றும் கூறி, பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்களை விடுவித்து மற்ற முகாம்களில் உள்ள தங்கள் உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் அவர்கள் ஈடுபடும் போதெல்லாம் விரைவில் உங்களை விடுதலை செய்கிறோம் என்று மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு செய்கிறது. அவர்கள் போராட்டத்தை கைவிட்ட பிறகு  அளித்த உறுதிமொழியை மறந்துவிடுகிறது.

இப்படி தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவந்த இவர்கள் இப்போது மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு அவர்களின் நியாயமான, சட்டப்பூர்வமான கோரிக்கையை மனிதாபிமானத்தோடு பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்தி22ம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம்!!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!