மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் கொடூரத்தாக்குதல் தொடுத்திட்ட தமிழகக் காவல்துறையினருக்குச் சீமான் கண்டனம்!

125

அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் கொடூரத்தாக்குதல் தொடுத்திட்ட தமிழகக் காவல்துறையினருக்குச் சீமான் கண்டனம்! | நாம் தமிழர் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியில் தாக்குதல் நடத்திய தமிழகக் காவல்துறையினரைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (21-02-2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தூத்துக்குடியில் நடைபெற்ற 22வது மாநில மாநாட்டின் இறுதி நாளான நேற்று அதன் பேரணியில் பங்கேற்ற தொண்டர்களைக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய தமிழகக் காவல்துறையினரின் செயல்பாடானது வன்மையான கண்டனத்திற்குரியது. அச்செயலுக்கு எத்தகைய நியாயம் கற்பிக்க முயன்றாலும் அது ஏற்கக் கூடியதல்ல. பொதுவுடமை இயக்கங்கள் எப்பொழுதுமே மிகுந்த நெறியோடு மக்களுக்கு இடையூறில்லாமல் அரசியல் கூட்டங்களை நடத்துபவர்கள் அப்படிக் காவல்துறையினரின் அனுமதியோடு நடத்தப்பட்ட தோழர்களின் பேரணியைக் கலவரக் களமாக்கியிருப்பதன் மூலம் இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டமாக இருக்குமோ என்கிற ஐயம் நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஒரு கலவரத்தைத் திட்டமிட்டு உருவாக்குதன் மூலம் அம்மாநாட்டின் நோக்கத்தினையும், வெற்றியினையும் திசைதிருப்புவதற்கான மதத்துவேச சக்திகளின் திட்டம் ஏதேனும் இதன்பின்னால் ஒளிந்திருக்கிறதா எனவும் ஆராய வேண்டியது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி நேற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியிலிருந்து சங்கரப்பேரி வரையிலான 8 கி.மீ. தூரத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியாக அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது சில தொண்டர்கள் சாலையோரம் நின்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களைக் கண்டிக்கவே காவல்துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுமுற்றி வன்முறையில் முடிந்திருக்கிறது. இதில் மரக்கட்டைகளைக் கொண்டு தொண்டர்களைத் தாக்கிய காவல்துறையினரின் செயலானது மனிதத்தன்மையேயற்ற காட்டுமிராண்டித்தனமான கொடுஞ்செயலாகும். மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டே பழக்கமாகிப்போன அரசப்பயங்கரவாதத்தின் ஏவல் பணிகளுக்கான ஒரு துறையாகக் காவல்துறை மாறிப்போனது என்பதற்கான சாட்சியம் இதுவாகும்.

ஒரு பேரணியை எவ்வித வன்முறைக்கும் இடங்கொடாவண்ணம் நெறிப்படுத்தி அப்பேரணியில் பங்கேற்போர்க்குப் பாதுகாப்பினை நல்குவதுதான் காவல்துறையினரின் தலையாயக் கடமையாகும். அதனை விடுத்து அப்பேரணியில் பங்கேற்றவர்களையே கட்டையால் அடித்து மண்டையைப் பிளந்து கொலைவெறித் தாக்குதல் தொடுப்பது என்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். அப்பேரணியில் பெண்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற அடிப்படை உணர்வோ, மாந்தநேயமோ அற்றுத் தொண்டர்கள் மீது காட்டுமிராண்டித்தாக்குதல் நடத்தியிருப்பது அரக்கத்தனமானது. அதனை மாந்தநேயம் கொண்ட எவராலும் ஏற்க முடியாது. இதன்மூலம் ஆளும் வர்க்கத்தின் கூலிப்படையாகத்தான் காவல்துறை மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை புலனாகிறது. அண்டை மாநிலமான கேரளத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களும் பங்கேற்கும் ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வன்முறைக்களமாக மாற்றியிருக்கும் தமிழகக் காவல்துறையினரின் செயலால் தமிழகம் இழுக்கையும்,, அவப்பெயரையுமே சந்திருக்கிறது. ஆகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டைச் சீர்குலைக்கும்விதமாகப் பேரணியில் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, காவல்துறையினரின் கோரத்தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கான மருத்துவச்செலவை அரசே ஏற்று அவர்களுக்குரிய இழப்பீட்டை உடனடியாகத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்து:-

22வது மாநில மாநாட்டில் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளராக நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த பெருமதிப்பிற்குரிய கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் வேளாண்மை உலகமயமாக்கலாலும் கார்ப்பரேட்களாலும் அழித்தொழிக்கப்படுகிற இந்த நேரத்தில் அதில் நீண்ட கால போராட்ட அனுபவமிக்க ஒருவர் தலைமை பதவிக்கு வந்திருப்பது மிகச்சரியான தேர்வாகும். தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – (காஞ்சிபுரம் : தெற்கு மற்றும் மேற்கு மண்டலம் )
அடுத்த செய்திகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்