காவிரிச் சிக்கலுக்கும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி; கூட்டாட்சித் தத்துவத்திற்குச் செய்யப்பட்டப் பச்சைத்துரோகம்!
– சீமான் அறிக்கை
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ எனும் முதுமொழிக்கேற்ப பின்னிப் பிணைக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றுத்தொடர்பைக் கொண்டிருக்கிற தமிழகத்திற்கும், காவிரி நதிநீருக்குமான உறவை முறிக்கும் விதமாகக் காவிரி நீரை தமிழகத்திற்குத் தர மறுத்து கர்நாடக அரசும், மத்தியில் ஆளுகிற பாஜக அரசும் வஞ்சித்து வருகிற சூழலில் ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக நாம் நம்பி நின்ற உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. இத்தீர்ப்பு முடிவு காவிரி நதிநீர் உரிமையினைத் தமிழகத்திடமிருந்து மெல்ல மெல்லப் பறித்து அதனை முழுமையாகக் கர்நாடகாவுக்கு உரியதாக மாற்ற முனைகிற சதிச்செயலோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பில் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. பிறகு, 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பில் அதில் 12 டி.எம்.சி. குறைத்து ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்குத் தரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்தன. இதில் தமிழகம் 192 டி.எம்.சி.யுடன் கூடுதலாக 72 டி.எம்.சி. சேர்த்து 264 டி.எம்.சி. வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனால் முன்பு வழங்கப்பட்டுள்ள அளவைவிட 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்திற்குத் தரப்படும் என்கிற இத்தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
இந்தியா எனும் பல்வேறு தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கும் அதற்கென்றே இறையாண்மை உள்ளது. இவ்வினத்திற்குள் நதிநீர் பங்கீடு போன்ற வாழ்வாதாரச் சிக்கல்களில் அனைத்து இனங்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதில்தான் இந்தியாவின் ஒருமைப்பாடும், இறையாண்மையும் அடங்கியுள்ளது. ஆனால் இக்காவிரி நதிநீர் சிக்கலுக்கும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது (The issues in this case have no connection, whatsoever, with the concepts of sovereignty and integrity of India and, therefore, the bar under Article 363 of the Constitution of India is not attracted.) திட்டமிட்டுத் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டப் பெரும் அநீதியாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகமாகும்.
1924ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்திற்குரியப் பங்காக 575.68 டி.எம்.சி. தண்ணீர் இருந்திருக்கிறது. 1934லிருந்து 1970 வரை மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரியின் அளவைக் கணக்கிட்டால் 372.8 டி.எம்.சி.யாக அது இருந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியிருக்கையில், தமிழகத்திற்குரிய காவிரி நதிநீரின் அளவு குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு இன்றைக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர்தான் சொந்தம் என்று வந்து நிற்பது அப்பட்டமான முறைகேடாகும். தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் 10 டி.எம்.சி. ஆக இருப்பதால் கர்நாடகாவுக்குக் கூடுதலாக நீரை வழங்குகிறோம் எனும் தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு எதிராக உள்ளது . உலக நதிநீர் பங்கீட்டு விதிகளின்படிதான் நதிநீர் உரிமையில் பகிர்வு செய்ய வேண்டுமே ஒழிய, மாநிலத்தின் மழைபெரும் அளவையோ, மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவையோ வைத்துத் தீர்ப்பு வழங்குவது முறையாகாது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், கர்நாடகாவுக்கு அதிகப்படியாக நீரை வழங்குகிறோம் என்கிற வாதம் இதுவரை நடைமுறையில் இல்லாதது. அதிகப்படியாகத் தண்ணீரை வீணடிக்கும் பெருநகரங்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது பெங்களூர் மாநகரம். அங்குப் பயன்படுத்தப்படும் நீரில் பாதிக்குமேற்பட்ட நீர் தேவையன்றி செலவுசெய்யப்பட்டு வீண்செய்யப்படுவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படியிருக்கையில், தமிழகத்தின் விளைச்சல் நிலங்களுக்குக் கேட்ட நீரை எடுத்து பெங்களூருக்குக் கொடுப்பது என்ன நியாயம்?
தொடக்கம் முதலே காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளைத் துளியும் மதியாது தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு விதிகளையும், மரபுகளையும் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது கர்நாடகா அரசு. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் செயல்படுத்த மறுத்து அம்மாநில அரசின் துணையோடு அங்கு நடைபெறும் முழு அடைப்புப் போராட்டமும், அதனைத் தொடர்ந்த கலவரமும், தமிழர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலும் அதற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித்தீர்ப்பையோ ஒரு ஆண்டுகூடக் கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அதன்படி தண்ணீர் வழங்கியதுமில்லை. இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிற இத்தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து கர்நாடகா அரசு நிச்சயமாக முரண்டுபிடிக்கும். காவிரி ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமல்ல எனத் தீர்ப்பளித்துவிட்டு, ஒரு மாநிலத்தின் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு தீர்ப்பு வழங்கி இருப்பது பெரும் முரணாகும். விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட பாசனப்பரப்பை 11 இலட்சம் ஏக்கர் பரப்பிலிருந்து 14 இலட்சம் ஏக்கர் வரை விரிவுப்படுத்தி, காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலக் கொட்டம் அடித்து வரும் கர்நாடக அரசைக் கண்டிக்காது அவர்களுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்கியிருப்பது வருந்தத்தக்கது.
ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி நதிநீர் உரிமையைத் தமிழர்களிடமிருந்து பறிக்கும் பச்சைத்துரோகமாகும். தமிழக அரசு விரைந்து செயலாற்றி இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யத்தக்க வழிகள் இருக்கிறதா எனச் சட்ட வல்லுனர்களைக் கொண்டு ஆராய்ந்து காவிரி நதிநீர் உரிமையை மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.