மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா? – சீமான் கண்டனம்!

117

சிந்தாதிரிப்பேட்டை ஐந்து குடிசைப்பகுதியைச் சேர்ந்த மண்ணின் மக்களை வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றுவதா? –சீமான் கண்டனம்!
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிசைப்பகுதி மக்களை வெளியேற்றுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையின் பூர்வக்குடி மக்களை அவர்களது வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனைகிற கொடுஞ்செயலைத் தமிழக அரசு தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. மண்ணின் மக்களுக்கு எதிரான இவ்வகைச் செயல்கள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த மாதம் சாலை விரிவாக்கப்பணி என்று சொல்லி எண்ணூர் விரைவுச்சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகளையெல்லாம் இடித்துவிட்டு அங்கிருந்த மக்களை அவ்விடத்தைவிட்டு வெளியேற்றினார்கள். தற்போது அதன் நீட்சியாக சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள ஐந்து குடிசைப்பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வளர்ச்சி என்கிற பெயரில் மண்ணின் மக்களின் நிலங்களைப் பறித்து தனியார் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கிற போக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நெடுவாசல், கதிராமங்கலம், நன்னிலம் என தமிழகத்தின் வளமிக்க பகுதிகளிலெல்லாம் நடந்தேறிவருகிறது. அதனைப் போலவே சென்னையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் அதிகப்படியாக வாழும் சேப்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர் போன்ற இடங்களிலும் நடக்கிறது. பல தலைமுறைகளாக அந்நிலத்தைத் தங்களது பூர்வீகமாகக் கொண்டு நிலைபெற்று வாழும் அம்மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தொழில் அவர்களது வாழ்விடத்தை ஒட்டியே இருக்கிறது. அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும்போது அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரச்சூழல் மிகவும் மோசமான நிலையை எட்டுகிறது. மாற்றுக் குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தராது மக்களை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்துவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.
எண்ணூர் கடற்கரையோரமுள்ள மக்களை வெளியேற்றுகிறபோது அவர்களுக்கான மாற்றுக்குடியிருப்புகள் உத்திரவாதப்படுத்தப்படவில்லை. ஆனால், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, தற்போது ஐந்து குடிசைப்பகுதியைச் சேர்ந்த மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடித்தட்டு பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டு வாழும் இம்மக்கள் யாவரும் அன்றாடங்காய்ச்சிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையிலேயே இருந்தால் மட்டுமே அவர்களால் எவ்விதச் சிரமமுமின்றி வாழ்க்கையினை நகர்த்த முடியும். ஆனால், அதனைச் செய்யாது அவர்களுக்கே தொடர்பேயில்லாத பகுதியில் இடம் ஒதுக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்படைகிறது. ஐந்துகுடிசைப் பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்புகள் யாவும் சேப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கிறபோது அவர்களை பெரும்பாக்கம் நோக்கி நகர்த்தினால் அது அம்மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். அவர்கள் பிழைப்பிற்காக பெரும்பாக்கத்திலிருந்து சென்னை மாநகருக்குள் வந்து செல்வது என்பது சாத்தியமில்லை. குறைந்தது அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலாவது மாற்று இடங்களை ஒதுக்கக்கோருகிறார்கள். இக்கோரிக்கையானது மிக மிக நியாயமானதே!
ஏற்கனவே, சென்னையிலிருந்து கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும் மாற்றப்பட்ட மக்கள் அங்கு சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுவுமற்று, மிகவும் சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து குடிசைப்பகுதி மக்களை பெரும்பாக்கத்திற்குக் கொண்டுசெல்வதன் மூலம் அதே நிலைதான் இவர்களுக்கும் வரும். ஆகவே, ஐந்துகுடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை எந்தவகையிலும் பாதிக்காதவகையில் அவர்களின் வாழ்விடம் அருகாமையிலேயே மாற்றுக்குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.