கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்!

42

கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்!

கந்துவட்டிக்கு ஆதரவாளராக தன்னைச் சித்தரிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லையில் ஒரு குடும்பமே கந்துவட்டிக் கொடுமையினால் தீக்குளித்து மாண்டபோது அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும், அக்கறையின்மையினாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப்படுகொலை இதுவெனக் கண்டனம் தெரிவித்து, 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டித் தடைச் சட்டத்தை ஏன் இன்னும் செயலாக்கம் செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினேன். மேலும், கேரளாவில் அமல்படுத்தியது போல ஆபரேசன் குபேராவைத் தமிழகத்திலும் அமல்படுத்தி கந்துவட்டியின் கொடுமையை முழுமையாய் துடைத்தெறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அப்படியிருக்க, என்னைக் கந்து வட்டி ஆதரவாளன் எனும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்து அபத்தமானது.
தம்பி அசோக்குமார் தற்கொலையைப் பொறுத்தவரை அம்மரணம் பெரிய வலியைத் தந்தது. உற்றத் துணையாக இவ்வளவு பேர் இருந்தும் யாரிடமும் சொல்லாமல் தம்பி தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரே என அவரது இழப்பு தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இதில் தொடர்புடைய அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இதனைத் தனக்குச் சாதகமாக்கி சுயலாபம் காண எண்ணுவோரின் செயலைத்தான் வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வளவு நாட்களாக அன்புச்செழியனிடம் பணம்பெற்று தொழில் நடத்திவிட்டு, இன்றைக்குத் தன்னை அத்தொழிலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்வது உள்நோக்கமுடையது. தயாரிப்பாளர் ஜி.வி.யின் தற்கொலையின்போதே விழிப்புற்று மாற்று பொருளாதார ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாது விடுத்து தற்போது அதனைப் பேசுவது சந்தர்ப்பவாதமாகும். இதனைத்தான் எடுத்துரைத்தேன். மற்றபடி, அன்புச்செழியனின் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் இல்லை; அதற்கு நாங்கள் பொருட்பேற்கவும் இல்லை. பைனான்சியர்களிடம் பணம் பெற்றே அனைத்து படங்களும் எடுக்கப்படுகிறது என்பது கள எதார்த்தம். அதற்கான ஒரு மாற்றுத்தீர்வை முன்வைக்காது அம்முறையையே ஒழிக்க வேண்டும் என்பது திரைத்துறைக்குப் பாதகமாகவே முடியும். எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு இதற்கான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்.
தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்பின் மூலம் தமிழக அரசே தரமான படைப்புகளைத் தயாரிக்க முன்வந்தால் இதனைச் சரிசெய்ய முடியும் என்கிறேன். அதுவரை அன்புச்செழியன் போன்றோரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் தான் தமிழ்த்திரைத்துறை இருக்கிறது. அதற்காகக் கடனை வசூலிப்பதற்கு அத்துமீறுவதும், அவமானப்படுத்துவதுமானப் போக்குகளில் எமக்கு உடன்பாடில்லை. அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதையும், அவரது பொருளாதாரப் பின்புலமும், அரசியல் பின்புலமும் ஆராயப்பட வேண்டும் என்பதையும் நானே ஊடகங்களில் தெளிவுபடப் பேசியிருக்கிறேன். ஆனால், இதனை முழுமையாய் உள்வாங்கிக் கொள்ளாது, கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பேச்சின் சாராம்சத்தையே அடியோடு மாற்றி என்னைக் கந்துவட்டி ஆதரவாளர் போலவும், அன்புச்செழியனுக்கு ஆதரவளித்து அவரது செயல்களுக்கு நியாயம் கற்பிப்பது போலவும் அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அவரது இப்போக்கினை முற்றாக எதிர்க்கிறேன்.
திரைத்துறையை சீர்திருத்தம் செய்யும் நோக்கத்தோடு கூறப்பட்ட எனது கருத்துக்களை பொது வாழ்க்கையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கிற பெருமதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது. யாவற்றையும் ஆராய்ந்து அதன் உண்மையைக் கண்டறியும் பகுத்தறிவைப் போதித்த மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்றவர்களுக்கு இது அழகல்ல! ஆகவே, மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இனிமேலாவது முழுமையாகக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது மதிப்புமிகு சொற்களைக் கையாள வேண்டும் எனவும் அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.