எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்

173

6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்.

 

மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த பெருந்தகை.

 

ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை என 18 க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கி தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்.

 

இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில் மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம்  கொடுத்து மக்களை ஏமாற்ற வில்லை.

 

15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,

14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,

9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,

8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,

3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,

2 பிரதமர்களை உருவாக்கிய

ஒற்றைப் பெருந்தலைவர்!

 

இத்தனை பதவிகள் வகித்தபோதும்

ஊழல் முறைகேடு புகார் இல்லை..!

கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..!

குடும்பத்து வாரிசுகளுக்கு பதவி கொடுக்க வில்லை..!

உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தனிப்பெருந் தலைவர்!

 

நாட்டின் விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறையிலிருந்த

நமது பாட்டன் ஐயா காமராசர் அவர்களினுடைய

நினைவைப் போற்றுகிற இந்நாளில், வழிவழியே வருகிற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்.

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சரியான, சமமான, தரமான இலவசக்கல்வியை வழங்க பாடுபடுவதே பெருந்தலைவர் அவர்களுக்கு செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்!

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திகரூர் சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு