வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியல் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவு தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்

459

தனிப்பெரும் தமிழ்ச் சமயமாம் வீரசைவ சமயத்தைப் போற்றி வளர்த்திடும் பழம்பெருமைமிக்க மதுரை ஆதினத்தின் 292வது மடாதிபதியாகத் திகழ்ந்த வணக்கத்திற்கும், போற்றுதற்குமுரிய அருந்தமிழ்த் துறவி அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவென்பது தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற பேருண்மையைப் பல இடங்களிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தவர் தவத்திரு அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள். உண்மையான வழிபாடு என்பது உள்ளன்போடு மக்களுக்குச் செய்யும் பெருந்தொண்டுதான் என்று தனது சொல்லாலும், செயலாலும் உணர்த்திய பெருந்தகை. மதவாதக் கொடுங்குரல்கள் தமிழ்நாட்டில் தலையெடுத்த போதெல்லாம், அதன் அடிவேரை அறுத்தெறியும் வகையில், அனைத்து சமயத்தவரையும் அன்பொழுக அரவணைத்து, அருள்நெறி சிதையாது தமிழர் அறம் காத்த அவரது அரும்பணிகள் என்றென்றும் நினைவுகூரத் தக்கவை.

அன்னைத் தமிழ்மொழி அரியணை ஏறவும், ஈழத்தாயகம் விடுதலை பெறவும், ஆதரவாய் நின்ற மதுரை ஆதீனம் அவர்கள், தமது இணையற்ற தமிழுணர்வினால் மற்ற தமிழ்ச்சமயப் பெரியோர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.

சமயத்தொண்டோடு நின்றுவிடாமல் மதம் கடந்து மனிதநேயம் போற்றிய மாடாதிபதியாகத் திகழ்ந்ததோடு, அரசியல் உள்ளிட்ட பல தளங்களிலும் தமது பங்களிப்பை வழங்கியதுடன், தமிழர் உரிமைக் களங்களிலும் துணிந்து குரல் கொடுத்த பெருந்தமிழர்.

என் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த திருவருட்செல்வர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

மதுரை ஆதீனம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, சமயப் பெரியோர்களுக்கும், அருள் நெறியாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி