ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி! – சீமான் வரவேற்பு

61

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்! – சீமான் அறிக்கை

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்குத் தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-10-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் எனும் தமிழ்த்தேசிய இன மக்களின் நீண்டநெடு நாள் கனவிற்குச் செயலாக்கம் கொடுத்து மருத்துவர் ஜானகி ராமன் அவர்களும், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களும் அரும்பாடாற்றிக் கொண்டிருக்கிற வேளையில் அவர்களின் பெரும்பணிக்கு வலுசேர்க்கும் விதமாய்த் தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியினைத் தருகிறது. தமிழக அரசின் இவ்வறிவிப்பினை பெருமிதத்தோடு வரவேற்கிறேன்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டிய காலத்தேவையையும், இவ்வரிய வாய்ப்பை தமிழக அரசானது நழுவவிட்டு விடக்கூடாது என்பதனையும் கடந்த 05-10-17 அன்று விடுத்துள்ள எமது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். இதே கோரிக்கையை உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கிற இனமானத்தமிழர்கள் பலரும் முன்வைத்தார்கள். அவற்றிற்கு மதிப்பளித்து அக்கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அருமைச் சகோதரர் மா.பா.பாண்டியராஜன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவிக்கிறேன். இத்தோடு, தமிழுக்கும், தமிழர்க்குமான இதுபோன்ற பெரும்பணிகள் தொடர விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசீன எந்திரப் படகுகளுக்குத் தடைவிதிக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை