சீன எந்திரப் படகுகளுக்குத் தடைவிதிக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்! – சீமான் எச்சரிக்கை

67

சீன எந்திரப் படகுகளுக்குத் தடைவிதிக்க அமைச்சர் ஜெயக்குமார் முன்வராவிட்டால் போராட்டம் தீவிரமடையும்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் கடந்த 23-10-2017 அன்று காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

தடியடியில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 26-10-2017 வியாழக்கிழமை, காலை 11 மணியளவில் காசிமேடு மீனவர் பகுதிக்குச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய சீமான்,

சீன எந்திரங்கள் பொருத்தப்பட்ட அதிவேக விசைப் படகுகள் கடல்வளத்தை நம்பி வாழ்கிற நம் மீனவச்சொந்தங்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக இருக்கிறது. சாதாரண விசைப்படகைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது இரண்டாண்டுகளுக்குக் கிடைக்கும் மீன்வளத்தைச் சீன எந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள் இரண்டே மாதங்களில் அபகரித்துவிடுகிறது. மேலும், பவளப்பாறைகளின் இடுக்குகளில்தான் மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சுப்பொறிக்கிறது. சீன எந்திரப் படகுகளைப் பயன்படுத்தும்போது அந்தப் பாறைகளை இவை தகர்த்துவிடுவதால் மீன்கள் உற்பத்தி தடைப்பட்டு, மீன் வளமே அழியக்கூடிய ஆபத்திருக்கிறது. ஆறு மாதகாலம்தான் மீன்பிடி தொழில் இருப்பதால் ஏற்கனவே மீனவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று மீன்பிடிக்கிறார்கள். சீன எந்திரப்படகுகளால் அந்த ஆறுமாத கால மீன்பிடிப்பும் முழுமையாகப் பாதிக்கப்படும். எனவே, படகுகளில் சீன எந்திரங்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அவ்வாறு சீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அரசானது சட்டமியற்றி தடுக்க முன்வர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராடிய பொதுமக்கள் மீது பெண்கள், முதியவர்கள் என்றும் பாராது கண்மூடித்தனமாகத் தாக்கிய காவல்துறையின் செயலானது காட்டுமிராண்டித்தனமாகும். போராடுகிற மக்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவிவிடுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல! இதனை வெறுமனே மீனவர்களின் பிரச்சினை எனக் குறுக்கிப் பார்க்க இயலாது. இது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை. எனவே, மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிற ஜெயக்குமார் அவர்கள் உரிய கவனமெடுத்து சீன எந்திரப் படகுகளைத் தடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகக் களத்தில் இறங்கிப் போராடும் என எச்சரிக்கிறேன்.

சென்னை, திருவொற்றியூர், நல்லதண்ணிர் ஓடை குப்பத்தில் வாழ்கிற மக்கள் சாலைக்கான இடத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டபிறகும் அவர்களின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து அவ்விடத்திலிருந்து வெளியேற்றி இருப்பது சரியான அணுகுமுறையல்ல! மக்களுக்கான மாற்று இடங்களைக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகிற அரசு இன்னும் மாற்று குடியிருப்புகளைக் கட்டவே இல்லை என்பதிலிருந்தே இவர்களது அலட்சியத்தைத் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் கொடுத்திருக்கிற ‘சர்வே’ எண்ணை அளந்துப் பார்த்தால் அது கடலுக்குள் வருகிறது. ஆனால், மாற்று இடமாக ஒப்புக்கு இவர்கள் காட்டியிருக்கிற மற்றுமொரு இடமோ வேறு ஒரு குப்பத்தில் வருகிறது. இங்குள்ள மக்கள் அந்தக் குப்பத்தில் போய்க் குடியேறுவதற்கு அங்குள்ள மக்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை. மீறி, அங்குச் செல்ல வற்புறுத்தினால் இரு குப்பத்தில் வாழும் மக்களிடையே தேவையற்ற மோதல்போக்கை உருவாக்குகிற வேலையாக அமையும். எனவே, மாற்று இடங்களை அரசுக் கொடுக்கிறவரை நல்லதண்ணிஓடை குப்பத்திலேயே மக்கள் தற்காலிகமாகத் தங்கிக்கொள்ள அனுமதிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்குத் தொடுக்கவிருக்கிறோம்.

பதாகைகளே வேண்டாம்; அக்கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அதற்கு மொத்தமாகத் தடைவிதிருந்தால் அதனை ஏற்கலாம். ஆனால், உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் பதாகை வைக்கக்கூடாது என்பதை ஏற்க முடியாது. அதற்கு மாறாக, சுவரெழுத்து விளம்பரத்துக்கும், பதாகை வைப்பதற்கும், சுவரொட்டி ஒட்டுவதற்கும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இடங்களை ஒதுக்கி அதனை முறைப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, உயிரோடு இருப்பவர்களுக்குப் பதாகையே வைக்கக் கூடாது என்றால் அது சரியானதல்ல!

தேர்தல் அரசியலில் முக அறிமுகம் மிக முக்கியமானது என்பதால், எளியப் பிள்ளைகளான எங்களை மக்களிடத்தில் அறிமுகம் செய்துகொள்ளப் பதாகைகள்தான் ஒரே வாய்ப்பாக இருக்கிறது. அதனை வைக்கக்கூடாது என அடியோடு மறுத்தால் தேர்தல் அரசியலில் பங்கேற்று எப்படிப் போட்டியிட முடியும்? எல்லாக் கட்சியினரும் தாங்கள் வைத்திருக்கிற தங்களது தொலைக்காட்சியின் மூலமாக மக்களிடம் அறிமுகமாகிவிடுகிறார்கள். நடிகர்கள் திரைப்படங்கள் வாயிலாக அறிமுகமாகிவிடுகிறார்கள். எந்த வாய்ப்பும் இல்லாத ஏழை எளிய மக்கள் எவ்வாறு அறிமுகமாவார்கள்? ஆகையினால், மக்களுக்காக உழைக்க நினைக்கிற எளிய மக்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ள ஒரே வழியாக இருக்கிற பதாகைகளுக்குத் தடைவிதிக்கும் இத்தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்றார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திஹார்வார்டு தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி! – சீமான் வரவேற்பு