திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி
திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக, எண்ணூர் விரைவு சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகள் மாற்றுவீடுகள் ஏதும் ஏற்பாடு செய்யாமல் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்கள், பொதுமக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதனையறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்ற பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
பல்வேறு போலியான காரணங்களைக் கூறி மண்ணின் பூர்வகுடிகளை அவர்களின் வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளிடம் கையளிக்கும் முயற்சியில் மக்கள் விரோத அரசுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகள் இடிக்கப்படுவதாக அரசு கூறும் காரணங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை போராடவிடாமல் காவல்துறையின் அடக்குமுறை மூலம் வழக்குகள் தொடுப்பதன் மூலம் அச்சுறுத்தி வெளியேற்றுவதைப் பார்க்கும்போது நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் நிகழ்வது போன்று இங்கும் நடைபெறுகிறதோ என்ற அச்சம் மேலிடுகிறது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதுபோன்ற மக்களுக்கான எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக நிர்கதியாக வாழ்விடங்களை இழந்துவிட்டு மழையில் நனைந்தபடி அல்லல்படும் அப்பாவி ஏழை மக்களின் துயரைத் துடைக்க அரசு உடனடியாக முன்வரவேண்டும். குறைந்தபட்ச கோரிக்கையாக, வேறு இடத்தில்
அரசு மாற்று வீடுகள் கட்டித்தரும் வரை இதே இடத்தில் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி தந்து மக்கள் அமைதியாக வாழ அனுமதி வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சீமான் தமிழக அரசை வலியுறுத்தினார்.
மேலும், சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகள் போன்று வாழும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழர் நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்று சொன்னால் கோபப்படுபவர்கள் தமிழர்கள் அகதிகளைப் போல நடத்தப்படுவதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடிப்பது இதுபோன்று எங்கள் அத்தாவும், அப்பனும், அக்கா, தங்கையும் கண்ணீரோடு நிற்பதைக் காண சகிக்காமல் தான். இப்போதைய ஆட்சியாளர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் ஆட்சியையும் பதவியையும் கொள்ளையடித்த பணத்தையும் காப்பாற்றுவதே முக்கியப் பிரச்சினையாக கருதுகிறார்கள். மக்கள் வாழ்வதைப் பற்றியோ சாவதைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அதிமுக அரசு இருக்கிறது. இவர்களையெல்லாம் நல்லாட்சி தருவார்கள் என நம்பி வாக்களித்துவிட்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள் எம் மக்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய படுக்கை, மருத்துவர், மருந்துகள் உள்ளிட்ட வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளை நாடும் மக்களுக்கு ‘அம்மா மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மூலம் ருபாய் 4 இலட்சம் வரை சிகிச்சையளிக்க வாய்ப்பிருந்தும் அதைக் கொடுக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்குப் பின்னால் அம்மா காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படாமளிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.