அறிக்கை: கந்துவட்டி தடை சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும், 4 பேர் தீக்குளித்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மேல் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை சில ஆண்டுகள் முன்பாகக் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அதற்குக் கடுமையான வட்டிவீதம் போட்டு இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மேல் இசக்கிமுத்துவிடமிருந்து கறந்திருக்கிறார்கள் கந்துவட்டிக் கொடுமைக்காரர்கள். மேலும், அக்குடும்பத்தினருக்குத் தொடர்ச்சியாக மிரட்டலும், அச்சுறுத்தலும் விடுத்து வந்திருக்கிறார்கள். இக்கொடுமை தாள முடியாத இசக்கிமுத்து அச்சம்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதற்குக் காவல்துறையினர் 30,000 ரூபாய்வரை இலஞ்சமாகக் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார். பலமுறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லாததால் மனமுடைந்த இசக்கி முத்து, தன் மனைவி, இரு குழந்தைகள் எனக் குடும்பத்தோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளித்த கொடுமை இன்றைக்கு நிகழ்ந்திருக்கிறது. பச்சிளங்குழந்தைகள் உடல்களிலும் தீப்பற்றி எரிவதை பார்க்கிறபோது மனம் சொல்லமுடியாத துயரத்திலும், ரணத்திலும் தவிக்கிறது.
கந்துவட்டி கொடுமைகளால் அப்பாவிகள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. நீண்டநெடிய காலமாகக் கந்துவட்டிக் கொடுமைகள் நடந்து வருவது தெரிந்தும் அரசு கண்டுகொள்ளாது இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதீத வட்டி வசூலிப்பதைத் தடைசெய்ய 2003ஆம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட கந்து வட்டித்தடைச் சட்டம் இருந்தும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கிறதென்றால் எதற்கு அந்தச் சட்டம்? ஒவ்வொருமுறையும் இழப்பு ஏற்பட்டால்தான் ஆட்சியும் அதிகாரமும் விழித்துக்கொள்ளும் என்றால், ஆளும் வர்க்கத்தின் வேலை தூங்கிக் கொண்டிருப்பது மட்டும்தானா? இழப்புகளுக்குப் பிறகு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதே எல்லாவற்றுக்குமான தீர்வாகிவிடுமா? மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் எனப் பல்வேறு பெயர்களில் நடந்தேறும் இக்கந்துவட்டிக் கொடுமையை ஒழிக்கச் சட்டமிருந்தும் ஒழிக்காது இவ்வளவு ஆண்டுகள் அரசு என்ன செய்துகொண்டிருந்தது? கந்து வட்டிக்கு கடன்வாங்குகிற அளவுக்கு மிகப் பின்தங்கிய பொருளாதார நிலையில் அவர்களை வைத்தது யார்? அதனைச் சரிசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தாது கடன்காரர்களாக ஆகிற நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார் என நீளும் கேள்விகள் ஆளும் வர்க்கத்தின் அலட்சியத்தினையும், அக்கறையின்மையினையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே பச்சிளங்குழந்தை உட்பட இசக்கிமுத்து தீக்குளித்ததற்கு முழுக்க முழுக்க ஆட்சியாளர்களே பொறுப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் 75 விழுக்காடு காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியானது பெருந்துயரத்தினைத் தருகிறது.
இவ்விவகாரத்தில் இசக்கி முத்துவின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீதும், அச்சம்புதூர் காவல்துறையினரும், அதுதொடர்புடைய அதிகாரிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் செய்ய முதலீடுகளும், வசதி வாய்ப்புகளும் இல்லாததன் விளைவாகவே கந்துவட்டி எனும் பெருங்கோடுமைக்குள் கிராமப்புற மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்கிற நுட்பத்தைப் புரிந்துகொண்டு இனிமேலாவது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்த வேண்டும். கேரளாவில் கந்துவட்டியை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட ‘‘ஆபரேஷன் குபேரா’ போலக் கடும் நடவடிக்கையைத் தமிழகத்திலும் எடுக்க வேண்டும். அதற்கென்று தனிப்பிரிவை அமைத்து உடனடியாகக் கந்துவட்டியை முற்றாக ஒழிக்க வேண்டும். இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு உரிய சிகிக்சை அளித்து இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.