பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

25

கால் நூற்றாண்டாகச் சிறைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அப்பாவித்தமிழர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்குண்டிருக்கும் அப்பாவித்தமிழர்கள் எழுவரின் கால் நூற்றாண்டு காலச் சிறைவாசமானது தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதியாகும். இக்கொடுந்துயரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இன்றுவரை முழுமையடையா இவ்வழக்கின் விசாரணையும், விரிவடையா விசாரணை வளையமும், விசாரிக்கப்படா சாட்சியங்களும் எந்தளவுக்கு இவ்வழக்கில் அதிகார அத்துமீறல்களும், அநீதியும் ஊடுருவியிருக்கின்றன என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கும். மேலும், தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தியாகராஜனும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.டி.தாமசும் அளித்த வாக்குமூலங்களும் அதனை அறுதியிட்டுக் கூறுவதாக உள்ளன.
எழுவரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 161–ஐ பயன்படுத்தி எழுவரையும் இக்கணமும் விடுதலை செய்யலாம் எனும் வாய்ப்பிருக்கும்போதும் அதனைச் செய்யாது ஏன் காலங்கடத்துகிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. கொலை செய்யப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்பதாலே சிறைவாசிகளுக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமைகளும், தங்களது பக்கம் இருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகளும் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. தன் உடலனமுற்ற தந்தையையும் தாயையும் காண தம்பி பேரறிவாளன் கேட்ட பரோல்மனு அடிப்படையின்றி மறுக்கப்பட்டிருக்கிறது.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 8 ஆண்டுச் சிறைவாசிகளையெல்லாம் விடுதலை செய்யும்போது, 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்த 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கால்நூற்றாண்டு காலச் சிறைத்தண்டனை ஏற்படுத்திய காயத்தினாலும், வலியினாலும் மனமும், உடலும் சோர்வுற்று மீள முடியா துயரத்தில் இருக்கும் அவர்களின் உள்ளக்குமுறலையும், ஆற்றாமையினையும் வார்த்தைகளால் வடிக்க முடியாது. புழல் சிறையில் இருக்கும் என்னுயிர் தம்பி இராபர்ட் பயாஸ் அவர்கள் தமிழக அரசுக்குக் கருணைக்கொலை செய்யச் சொல்லி கடிதம் எழுதியிருப்பது அவர்கள் எந்த அளவிற்கு மனவலியோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உடன்பிறந்தவர்கள் கோடிக்கணக்கில் இருந்தும் எழுவரின் விடுதலைக்கு ஒன்றும்செய்ய இயலாத கையறு நிலையில் காலம் நம்மைத் தள்ளியிருக்கிறதே என்று உள்ளம் குமுறுகிறது. ஒருநாள் இந்த ஆட்சியும், அதிகாரமும் எங்கள் கைவசமாகும்.. அன்றைக்கு எங்கள் தம்பிகளின் விடுதலையை வென்றெடுக்காது நாங்கள் ஓயப்போவதில்லை.
சிறைவாசிகளின் பரோல் விடுப்பு என்பது அவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 மாதங்கள் வரை பரோல் விடுப்பு அளிக்கப்பட்டது நாடறிந்ததாகும். நீதியும், சட்டமும் எல்லோரும் சமம் என்பது உண்மையானால் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட பரோல் ஏன் ஏழு தமிழருக்கும் கிடைக்கவில்லை?. திரைப்படத்தில் நடிக்க சஞ்சய்தத்துக்கு கிடைத்த பரோல் அனுமதி 75 வயதை நெருங்கிவிட்ட உடல்நலமுற்ற தன் தந்தையோடு சிறிது நாள் தங்கியிருக்க விரும்பும் தம்பி பேரறிவாளனுக்கு மறுக்கப்படலாமா?. அதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் , இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரமன் மற்றும் அக்கா நளினி ஆகியோருக்கு உடனடியாகப் பரோல் வழங்க வேண்டுமெனவும், உச்சநீதிமன்றத்தில் தொடந்து வழக்காடி விடுதலை பெற்று தர துணை நிற்கவேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.