குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! – சீமான் பேரழைப்பு

211

ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில், விபத்தில் சிக்குண்டவரின் உயிர்காக்கும் சிகிச்சைக்கும், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவக் காரணங்களுக்காகவும் குருதியின் தேவை இருந்துக்கொண்டே இருக்கிறது. சிகிச்சைக்குத் தேவையான குருதிவகைக் கிடைக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு முன்கூட்டியே தன்னார்வலர்களிடமிருந்து உரிய மருத்துவமுறைப்படி குருதியைக் கொடையாகப் பெற்றுக் குருதிவகைகளுக்கு ஏற்ப தனித்தனியே பிரித்துக் குறிபிட்ட காலத்திற்குப் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்புடன் பதப்படுத்தி வைக்கும் குருதிவங்கிகள் உலகெங்கிலும் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறு யாரோ ஒருவரின் உயிர்காக்கும் பொருட்டுத் தன் குருதியையே கொடையாக அளிக்கும் கொடையாளர்களின் ஈகத்தைப் போற்றும் வகையிலும் அதிகப்படியான கொடையாளர்களைத் திரட்டும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் சூன் 14 ஆம் நாள் உலக குருதிக்கொடையாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில், உலக உயிர்களின் இருப்பை உறுதி செய்யும் குருதியைக் கொடையாக அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்று செயல்பட வேண்டியது பேரவசியமாகிறது.

குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திலேயே அதிகக் குருதிக்கொடை வழங்கும் அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. குருதிக்கொடைப் பாசறை சார்பாக தமிழ்நாடெங்கும் நடத்தப்படும் குருதிக்கொடை முகாம்களில் உணர்வெழுச்சியோடு பங்கேற்றுக் குருதிக்கொடை அளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் “உயிர்நேய மாண்பாளர்” சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறது. கொரோனா கொடுந்தொற்றுக்காலத்தில் கூட நாம் தமிழர் உறவுகள் வழங்கிய குருதிக்கொடை ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்த்தொற்றுத் தாக்கத்தால் சமூகமே பேரிடரின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் அசாதாரணச் சூழலில் குருதிக்கொடையின் அவசியத்தை உணர்த்தி, அதனைப் பெரும் சமூக இயக்கமாக முன்னெடுக்கவும், அதன் தேவையை அனைவரும் உணரும்படிசெய்து பங்கேற்பாளராக மாற்றவும் தீவிரப் பரப்புரையை முன்னெடுப்போம்! விழிப்புணர்வை மேற்கொள்வோம்! மனித உயிர்களைக் குருதிக்கொடையின் மூலம் காப்போம்!

உலக குருதிக்கொடையாளர் தினப் புரட்சி வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி