புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் – சீமான் எச்சரிக்கை

39

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் -சீமான் எச்சரிக்கை
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மீத்தேன் எரிகாற்று எடுப்பதற்குக் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி எனும் தனியார் நிறுவனத்திற்கு 2010ஆம் ஆண்டு அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கினார். தமிழகத்தின் நீர்தாரைகளையே நிர்மூலமாக்கும் இக்கோரத்திட்டத்தின் அபாயம் குறித்து இயற்கை வேளாண் பேரறிஞர் எங்களின் பெரியதகப்பன் நம்மாழ்வாரும், அவரது பிள்ளைகளும், இன உணர்வாளர்களும் தமிழர் நிலமெங்கும் மேற்கொண்ட தொடர்ச்சியான பரப்புரையின் மூலம் மக்களிடையே அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கினோம். இதன்விளைவாக மக்களிடையே எழுந்த எதிர்ப்புணர்வினாலும், தொடர் போராட்டங்களினாலும் மீத்தேன் எரிகாற்று எடுக்கமுடியாமல் போகவே தனியார் நிறுவனத்துடனான அந்த ஒப்பந்தம் காலாவதியாவதாக அறிவித்தது மத்திய அரசு. இதனால், மீத்தேன் எரிகாற்று எடுப்பதாகச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, வண்டல்மண் பாறைகளுக்கிடையே இருக்கும் மீத்தேனை எடுக்கும் திட்டத்திற்கு ‘ஷேல் கேஸ்’ எனப் பெயரிட்டு அதே திட்டத்தை வேறுவடிவில் கொண்டு வந்தது மத்திய அரசு.
இந்நிலையில், தற்போது அதன் நீட்சியாக, தமிழகத்தில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மத்திய அமைச்சரவை, ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் பெயரில் மீண்டும் மீத்தேன் எடுக்க அனுமதி அளித்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்றால், மீத்தேன், ஈத்தேன், ப்ரோபேன், பியூட்டேன் போன்ற வாயுக்களின் பொதுப்பெயராகும். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் இவ்வகை எரிகாற்று எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெம் லேபரட்டரீஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . இந்த நிறுவனமானது மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வரா என்ற கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகருக்குச் சொந்தமானதாகும். கர்நாடகாவின் பக்கம் நின்று காவிரியில் உரிய தண்ணீரைப் பெற்றுத் தராது தமிழர்களை வஞ்சித்துவிட்டு, தமிழகத்தில் இருக்கிற நிலத்தடி நீர்மட்டத்தைக் கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனத்தின் மூலம் அழித்தொழிக்க முனையும் மத்திய அரசின் கொடுஞ்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதேபோல, காரைக்காலிலும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இங்குப் பாரத் பெட்ரோரிசோர்சஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடலோ, கருத்துக்கேட்போ எதுவும் நடத்தப்படவில்லை என்பதன்மூலம் இத்திட்டத்தை எப்படியாவது தமிழகத்தில் திணித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் மத்திய அரசின் நயவஞ்சகச் செயலை அறிந்துகொள்ள முடிகிறது.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயின் இறக்குமதி அளவைக் குறைக்கும்பொருட்டு உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிகாற்று எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவித்திருக்கிறது. உள்நாட்டில் விவசாயம் செய்து உணவிலே தன்னிறைவு அடையாது அண்டை நாடுகளிலிருந்து உணவை இறக்குமதி செய்யும் நாடு, எரிகாற்று, எண்ணெயை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வோம் என்பது நகைமுரணாகும். புதுக்கோட்டை, காரைக்கால் இரு பகுதிகளும் முழுவதும் விவசாயத்தைச் சார்ந்திருப்பவையாகும். அதுவும் காவிரியின் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டமானது முழுவதுமாய்க் கிணற்றுப்பாசனத்தையே நம்பியிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவருகிற இத்திட்டம் மூலம் கொஞ்சம் நஞ்சமிருக்கிற விவசாயமும் முற்றுமுழுதாய் அழியக்கூடும். ஏற்கனவே, மத்திய அரசின் ஏகாதிபத்திய போக்காலும், கர்நாடக அரசின் பாராமுகத்தாலும் காவிரி நதிநீர் மறுக்கப்பட்டு, குறுவை, சம்பா என எல்லாப் பருவங்களும் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு நிற்கிற நிலையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் அடியோடு அழியும் பேராபத்து இருக்கிறது.
உலகின் மிக நீண்ட சமவெளிப்பகுதியாக இருக்கிற காவிரிப்படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருவதாகத் தமிழர் இலக்கியங்களும், வரலாற்று ஆவணங்களும் தெரிவிக்கின்றன. அவையாவும் இம்மண்ணில் நிகழ்ந்தனவா என எள்ளி நகையாடும் அளவுக்குத் தற்போதைய தஞ்சைத்தரணியின் நிலை மாறியிருக்கிறது. கர்நாடக அரசின் வறட்டுப் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆண்ட அரசுகளின் பாரபட்சத்தாலும் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்திருந்த காவிரியுடான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விவசாயம் செய்ய நீரற்று தற்கொலை செய்து சாகிற இழிவான நிலைக்குக் காவிரிப்படுகை விவசாயிகள் ஆளாகி நிற்கிறார்கள். இவ்வாண்டு மட்டும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, ஒட்டுமொத்த விவசாயிகளும் செய்வதறியாது தவித்து நிற்கிற நிலையில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்த அறிவிப்பானது தமிழர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. எனவே, மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழகமெங்கும் மக்களைத் திரட்டி மிகப்பெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.