கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!

157

கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இலங்கை விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களது சொந்த நிலங்களை மீட்டுத்தரக் கோரி இராணுவ அச்சுறுத்தலையும் மீறி “எமது கிராமம் எமக்கு வேண்டும்” என்ற கோரிக்கையோடு ஈழத்தமிழ் உறவுகள் 12 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். அங்கிருக்கும் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் கடந்த 31ம் தேதி விடுவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிகழவில்லை. இந்நிலையில் தான் இனி பொறுப்பதற்கில்லை என்று எமது உறவுகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
30 வருட அரசியல் போராட்டம் பொய்த்து போய் வேறு வழியின்று தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுத போராட்டதிற்குத் தள்ளப்பட்ட இனத்தைத் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகநாடுகளோடு இணைந்து இனவாத சிங்கள அரசு அழித்தது. போர் முடிவுற்றபின் அமைதி திருப்பியதாகப் பறைசாற்றிய எந்த நாடுகளும் போரின் அழிவிற்குப் பின் எம்மக்களின் நிலையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. போரை காரணங்காட்டி ஜனநாயக பாடம் எடுத்த இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்கங்கள் இன்று வரை வஞ்சிக்கப்பட்டு எம்மக்களின் ஜனநாயக கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. உயிரை இழந்து உரிமைகளை இழந்து இன்று உடமைகளை இழந்து நடுத்தெருவில் போராடி நிற்கும் எம்மக்களுக்கு யாரும் துணையிருக்கவில்லை. இது தான் இந்நாடுகள் தமிழர்களுக்குப் பெற்று தந்த சுதந்திரமும் நீதியும்.
‘நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே போராட்டமாகவும் மாறிவிட்டது’ என்று தேசியத்தலைவர் பிராபகரன் அவர்கள் கூறியது தான் இன்றுவரை எம்மக்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறது. அரசியல் அதிகாரமற்று, உலகில் தனக்கென ஒரு நாடற்று நிற்கிற தமிழ்த்தேசிய இன மக்கள், எல்லா உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்ற இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் தங்களது நிலங்களை மீட்டுத்தரக்கூறி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்திருக்கும் இந்த அறவழிப்போராட்டமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எவ்வித அரசியல் இயக்கங்களையோ, தலைவர்களையோ சார்ந்திராது மக்களே தங்களுக்காய் போராடத் தொடங்கியிருப்பது தமிழ்த்தேசிய இன மக்களிடம் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியின் வடிவமாகும்.
இந்தப் போராட்டமானது ஒரு குறிப்பிட்ட நில மீட்புக்கான போராட்டமல்ல, தொடர்ச்சியாகப் பல்வேறு வகையில் சிங்கள அரசாங்கத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டு உரிமை பறிக்கப்பட்டு உடமைகள் அபகரிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் வெளிப்பாடு தான். அதனால் தான் ஈழமெங்கும் மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் தன்னிச்சையாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் போராடிவருகிறார்கள். எந்தவொரு போராட்டமும் மக்கள் கையிலெடுக்கும்போதுதான் அது புரட்சியாகப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது.அது போன்ற, மக்கள் போராட்டமாக உருவெடுத்திருக்கும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டமானது போற்றுதலுக்குரியது. இப்போராட்டம் தமிழர்களின் ஆழ்மனதில் எப்போதும் தேங்கிக்கிடக்கிற போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையுமே வெளிப்படுத்துகிறது. இது உலகெங்கும் பரவிக்கிடக்கிற தமிழ்ச்சொந்தங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தருகிறது. பல்வேறு தளங்களில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள் தங்களது உரிமைக்காகவும், உணர்வுக்காகவும் போராடுவதற்கு இவ்வகைப் போராட்டங்கள் உந்துதலாகவும், உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எமது நிலம் எமக்குக் கிடைக்கப்பெறும்வரை உறுதியாகப் போராடுவோம் எனச் சமரசமற்றுப் போராடிக்கொண்டிருக்கிற கேப்பாப்புலவு மக்களின் உறுதித்தன்மை அவர்களுக்கு நிச்சயமாய் வெற்றியை ஈட்டித்தரும் என்பது உறுதி.
கேப்பாப்புலவு மக்களின் இந்த அறவழிப் போராட்டம் உலகிற்கே முன்மாதிரியாக மாறட்டும்! போராட்ட நோக்கம் விரைவாக வெல்ல என் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி
அடுத்த செய்திகீழ்வேளூர் தொகுதியில் புலிக்கொடியேற்றம்!